

திருநெல்வேலி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் உலகப் பிரசித்தி பெற்ற செடிபுட்டா சேலைகள், கன்னியாகுமரி மாவட்டத்தின் தனித்துவப் பயிர்களில் ஒன்றான மட்டி வாழைப்பழம், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட செய்யாறு அருகேயுள்ள ஜடேரி கிராமத்தில் தயாரிக்கப்படும் நாமக்கட்டி ஆகிய மூன்றுக்கும் புவிசார் குறியீடு அண்மையில் கிடைக்கப் பெற்றுள்ளது. இது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை.
செடிபுட்டா சேலைகள்
காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் செயற்கை ரக பட்டு சேலைகள், பேட் ரகங்கள், செடி புட்டா சேலை ரகங்களை செளராஷ்டிரா சமூகத்தினர் பாரம்பரியமாக நெசவு செய்து வருகின்றனர்.
இதில், திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளங்குளி, புதுக்குடி, வீரவநல்லூர், கிளாக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இவர்கள் செடிபுட்டா ரக சேலைகளை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றனர். இந்தச் சேலைகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இதுகுறித்து அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வெள்ளங்குளியில் வசிக்கும் அண்ணா நெசவாளர் கூட்டுறவுச் சங்க மேலாளர் கி. கண்ணன் கூறியதாவது:
""சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு அந்நியப் படையெடுப்பின்போது, குஜராத் மாநிலத்தில் சோம்நாத் பகுதியை மொகலாய மன்னர்கள் கைப்பற்றியதால், அங்கு வசித்து வந்த செளராஷ்டிரா சமூகத்தினர் மதுரைக்கு இடம்பெயர்ந்தனர்.
அப்போது மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் செளராஷ்டிரா சமூகத்தினரை கைத்தறி நெசவுத் தொழில் செய்து பிழைக்க வழிவகை செய்து கொடுத்தார். மதுரையைத் தொடர்ந்து திண்டுக்கல், ராமநாதபுரம் காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் குடியேறினர்.
வெள்ளங்குளி, வீரவநல்லூர், கிளாக்குளம், புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நெசவாளர்கள் செடி புட்டா சேலை ரகங்களை உற்பத்தி செய்வதில் மிகவும் கைதேர்ந்தவர்கள். இந்தப் பகுதிகளைத் தவிர, உலகில் வேறு எந்த பகுதியில் செடி புட்டா சேலைகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
நெசவாளர்கள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும், தனியார் உற்பத்தியாளர்கள் மூலமாகவும் கலர் சாயம் தோய்த்த பாவு நூல்களைப் பெற்று, அதாவது 54 கெஜம் (50 மீட்டர்) பாவை அதனை முறையாக தெருக்களில் விரித்து முறைப்படுத்தி பின்னர் தறிகளைக் கொண்டு சென்று நெசவு செய்கின்றனர். 50 மீட்டர் பாவில் 9 சேலைகளை உற்பத்தி செய்கின்றனர். இதில் செடி புட்டா சேலையை உற்பத்தி செய்ய ஒன்றரை நாள் ஆகும். அதற்கு கூலியாக ரூ. 400 வரை நெசவாளர்களுக்கு கிடைக்கிறது. இந்தச் சேலைகள் 75, 100, 120, 150-ஆம் நம்பர் நூல்களில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு தயாராகும் செடி புட்டா சேலைகள் தமிழ்நாடு அரசின் கோ ஆப்டெக்ஸ் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. தனியார் உற்பத்தியாளர்கள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கைக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஒரு சேலை ரூ.886-க்கு விற்பனை செய்யப்படுகிறது'' என்றார்.
மட்டி வாழைப்பழம்:
நாட்டின் தென்கோடி முனையான கன்னியாகுமரி தனிச்சிறப்புகளைக் கொண்டது. நாஞ்சில் நாட்டு நெல் வயல்களோடு, விரிந்து பரந்து கிடக்கும் வாழை வயல்கள், தென்னந்தோப்புகள், ரப்பர் காடுகள், அடர்வனங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்தவை. இந்த நிலத்தின் தனித்துவமான மார்த்தாண்டம் தேன், ஈத்தாமொழி தென்னை, மாறாமலை கிராம்பு போன்றவை ஏற்கெனவே புவிசார் குறியீடு பெற்றுள்ள நிலையில், மட்டி வாழைப் பழத்துக்கு புவிசார் குறியீடு அண்மையில் கிடைத்துள்ளது.
மற்ற வாழைப்பழங்களைவிட மட்டி தனித்துவ மணமும் இனிப்பும் கொண்டது. குறிப்பாக, பழங்குடியினர் வாழும் பேச்சிப்பாறை உள்பட மலைப் பகுதிகளில் பயிராகும் மட்டிவாழை தெவிட்டாத சுவையும், மணமும் கொண்டது.
வாழைகள் பத்து மாதங்களில் அறுவடை செய்யப்படும் நிலையில், மட்டிக்கு கூடுதலாக 2 மாதங்கள் வரை அறுவடைக்காக காத்திருக்க வேண்டும். அதேவேளையில் மட்டி வாழைத் தார்களில் காய்களின் எண்ணிக்கை பெரும்பாலும் அதிகமாகவும், நெருக்கமாகவும் இருக்கும். மஞ்சள் மட்டி, செம்மட்டி, நெய்மட்டி, கருமட்டி, வால்மட்டி என பல்வேறு வகைகள் உள்ளன. மட்டிப் பழங்களின் நுனிப் பகுதிகள் நீண்டு காணப்படுவது இதன் மற்றொரு சிறப்பாகும்.
பச்சிளம் குழந்தைகளுக்கு மட்டி வாழைப் பழத்தை உணவாகப் பிசைந்து கொடுக்கும் பழக்கம் உள்ளது. உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வைட்டமின்கள், பொட்டாசியத்தைக் கொண்டுள்ளன. மூளையை சுறுசுறுப்பாக இயக்கச் செய்தல், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு, அல்சர்- சிறுநீரக் கோளாறுகள்- குடல் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு போன்ற மருத்துவக் குணங்களையும் கொண்டது.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் வி.ஐ.பி.க்களை உபசரிக்கும்போது அதில் மட்டி வாழைப் பழமும் நிச்சயம் இடம் பெறும். ஒருமுறை மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு திருவனந்தபுரத்துக்கு வந்தபோது மட்டி வாழைப்பழத்தை உண்டு, "இவ்வளவு சுவை மிகுந்த வாழைப் பழத்தை நான் இதுவரை உண்டதில்லை' என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் ஷீலா ஜான் கூறியதாவது:
""மட்டி வாழைப்பழத்தின் மணத்துக்கும், சுவைக்கும் குமரி மண்ணின் தன்மை, தண்ணீரின் சுவை, சீதோஷண நிலை ஆகியன காரணமாகும். தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டர் நிலத்தில் வாழைகள் சாகுபடி செய்யப்படும் நிலையில், சுமார் 5 சதவீத அளவுக்கு மட்டும்தான் மட்டி வாழை சாகுபடியாகிறது. தற்போது மட்டிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில், சாகுபடி பரப்பு மேலும் அதிகமாகும். உலகம் முழுவதும் விற்பனையாகும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன'' என்றார்.
ஜடேரி நாமக்கட்டி:
வைணவர்கள் நெற்றியில் நாமக்கட்டியால் நாமம் இடுதல் உண்டு. அந்த நாமம் போடுவதற்குப் பயன்படுத்தப்படும் நாமக்கட்டி தயாரிப்பதில் புகழ் பெற்று விளங்குகிறது ஜடேரி கிராமம். திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட செய்யாறு அருகே அமைந்துள்ள ஜடேரி கிராமத்தில் தயாராகும் நாமக்கட்டிக்கு, புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது.
இக்கிராமத்தில் வாழும் 150 குடும்பங்களில் 90 சதவீதம் பேர் விவசாயத்தோடு சேர்ந்து நாமக்கட்டி செய்யும் தொழிலை பத்து தலைமுறைகளாகச் செய்து வருகின்றனர். நாமக்கட்டி தயாரிப்பதற்காகவே இயற்கையே இந்தக் கிராமத்தைத் தேர்ந்தெடுத்து உள்ளது எனலாம்.
நாமக்கட்டி தயாரிப்புக்கான வெள்ளைப்பாறை கற்கள் ஜடேரி கிராமத்துக்கு அருகில் உள்ள தென்பூண்டிப்பட்டு எனும் பகுதியில் பெருமளவில் கிடைக்கின்றன. இப்பகுதியில் சுமார் 15 அடி ஆழம் வரையில் வெள்ளை நிறத்திலான பாறை கற்கள்தான் கிடைக்கின்றன. இந்தப் பாறைகளை சிறு சிறு துகள்களாக உடைத்து, வட்ட வடிவிலான அரைவை இயந்திரங்களில் மாடுகளைப் பூட்டி ஓட்டி நைசாக அரைக்கின்றனர். அரைத்து பின்னர் நீரில் பல மணி நேரம் ஊற வைத்தவுடன், மண்ணின் மிருதுவான வண்டல மண் மேலடுக்கு கிடைக்கிறது.
அதன் பின்னர் பள்ளத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றிவிட்டு அடியில் படிந்துள்ள மிருதுவான வெள்ளை மண்ணை எடுத்து ஈரப் பதத்துடன் பெரிய மண் உருண்டைகளாக வைக்கின்றனர். மண் உருண்டைகள் மிக லேசான ஈரப்பதத்தில் இருக்கும்போது, சிறு கட்டிகளாக தட்டி நாமக்கட்டிகளாக உருட்டி, பின்னர், வெயிலில் காய வைக்கின்றனர். நன்கு காய்ந்தவுடன் வைக்கோல் போட்டு மூட்டைகளாகக் கட்டி விற்பனைக்காக வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்த நாமக்கட்டி செய்யும் மண்ணுடன் சிறிது சாம்பல் சேர்ந்து விபூதியாக சில வியாபாரிகள் தயாரிக்கின்றனர்.
இதுகுறித்து நாமக்கட்டி கூட்டுறவுச் சங்கத் தலைவர் தெய்வசிகாமணி கூறியதாவது:
"நாமக்கட்டிகளைத் தயாரிக்க குறைந்தது 60 நாள்கள் ஆகிறது. நாமக்கட்டி தயாரிப்புக்கு தண்ணீர் மிகவும். அரசு சார்பில் புறம்போக்கு நிலத்தில் வெள்ளைப் பாறைக் கற்களை இலவசமாக எடுத்துகொள்ள அனுமதிக்க வேண்டும். நாமக்கட்டிகளைப் பாதுகாக்க, கிடங்கு அமைத்தால் தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.