வியக்க வைக்கும் வில்லுப்பாட்டு!

வில்லுபாட்டுக் கச்சேரி- தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளில் மிகவும் புகழ்பெற்ற கலைகளுக்கு ஒன்றாகும்.
வியக்க வைக்கும் வில்லுப்பாட்டு!

வில்லுபாட்டுக் கச்சேரி- தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளில் மிகவும் புகழ்பெற்ற கலைகளுக்கு ஒன்றாகும்.  தென்மாவட்டங்களில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மக்களின் மனதில் ஒருகாலத்தில் ஊடுருவி பாய்ந்து நின்றது. தற்போது பொம்மலாட்டம், தெருக்கூத்து உள்ளிட்டவற்றுக்கு வரவேற்பு குறைந்துவருகிறது.

இந்த நிலையில்,  தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட சுரண்டை அருகேயுள்ள அச்சன்குட்டம் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம்-மாலதி தம்பதியினரின் மகள் எம்.மாதவி,  வில்லுப்பாட்டு கச்சேரி கலையை மீட்டுருவாக்கும் வகையில் கச்சேரிகளை மேற்கொண்டு வருகிறார்.

குரல் வளம், உடல் மொழி, கையசைவு, தலை அசைவு, லாகவம் போன்றவற்றை திறமையாகவே பெற்றுள்ள அவரது கச்சேரிகள் சமூக வலைதளங்களில் பரவி, பார்வையாளர்களை வியக்கவும் வைக்கிறது.

இதுகுறித்து மாதவி கூறியதாவது:

""நான் சிறு வயதில் கோயில் விழாக்களில்  நடைபெறும் வில்லுப்பாட்டு கச்சேரியை பார்த்து ரசிப்பேன்.  அப்போது உறவினர்கள் நம் வீட்டிலும் இதுபோல ஒருவர் பாடினால் நன்றாக இருக்கும் எனக் கூறுவார்கள். இதையடுத்து, நானே வில்லுப்பாட்டு கச்சேரியை செய்கிறேன் என பெற்றோரிடம் சம்மதம் கேட்டேன். அவர்கள் என்னை உற்தாகப்படுத்தினர்.

பின்னர்,  நான் வி.கே.புதூர் இசக்கிபுலவர், வல்லம் மாரியம்மாள், கடையநல்லூரி கணபதி ஆகியோரிடம் சுமார் 6 மாதம் பயிற்சி பெற்றேன். அவர்கள் கச்சேரி செய்வதற்குரிய பாட்டு புத்தகங்களை அளித்து உற்சாகப்படுத்தினார்கள். 

முதல்முதலில் எனது 14-ஆம் வயதில் எங்கள் ஊரில் உள்ள முத்தாரம்மன் கோயில் விழாவில் எனது கச்சேரி அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதை ரசித்த ஊர்பெரியவர்கள்  ஆசீர்வாதம் செய்தனர்.  பின்னர்,  கடந்த 4 ஆண்டுகளாக சுமார் 400-க்கும் மேற்பட்ட கச்சேரிகளை செய்துள்ளேன். 

கச்சேரிக்கு பாடகியாக நான், குடம் அடிப்பவர், உடுக்கு அடிப்பவர், தாளம், கட்டை போடுபவர்கள், பக்கபாட்டு பாடுபவர்கள் என குழுவில் உள்ள 6 பேரும் மிகுந்த அனுபவம் உள்ளவர்கள்.

கிராமங்களில் இரவு பத்து மணி முதல் அதிகாலை 4  மணி வரை கச்சேரி செய்வதுண்டு.  நகரங்களில் இரண்டரை அல்லது மூன்று மணிநேரம் கச்சேரிகளைச் செய்து வருகிறேன்.  எந்தக் கோயில் விழாவுக்கு கச்சேரிக்கு அழைக்கிறார்களோ அந்தக் கோயில் சுவாமி வரலாற்றை வில்லுபாட்டாக பாடுவேன். 

இடைஇடையே வாழ்க்கை முறைகள் குறித்தும் கருத்துகளை கூறுவேன். கச்சேரியில் என்னைமட்டும் மையப்படுத்தாமல்,  பக்கபாட்டு படிப்பவர்களையும் உற்சாகப்படுத்துவேன்.

குரல்வளத்துக்காக நான் பெரிதும் எதுவும் செய்யவில்லை.  சளி இருந்தால் பனங்கற்கண்டை சிறிது உண்பேன்.  இந்தக் கலையை தமிழ்நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்பது எனது ஆசை. இந்தக் கலையை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்பதே லட்சியம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com