சீனப் பெண்களின் ரகசியம்...!
By கோட்டாறு ஆ.கோலப்பன் | Published On : 22nd January 2023 06:00 AM | Last Updated : 22nd January 2023 06:00 AM | அ+அ அ- |

மனித நாகரிக வளர்ச்சியில் எழுத்துகள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்களை ஆண்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் பெண்களை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள். இதை புரிந்துகொண்ட பல நாடுகளைச் சேர்ந்த பெண்கள் எதுவும் தெரியாத அப்பாவிகள் போல், தாங்கள் சார்ந்த சமுதாயத்தில் நடித்தனர்.
இதில் சீனப் பெண்கள் ஒருபடி மேலே போய் தங்களுக்கு என்று தனி எழுத்து வடிவத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். பெண்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் தனியாக ஒரு மொழியை உருவாக்கினார்கள். அந்த மொழிக்கு "நுஷு' என்று பெயர் வைத்தனர்.
"நுஷு' என்றால் சீன மொழியில் பெண்ணின் எழுத்து என்று அர்த்தம்.நுஷி எழுத்துகள் பெண்களால் உருவாக்கப்பட்டதால், மெலிதாகவும் நிறைய அழகோடு கிறுக்கியதுபோல் இருக்கும்.
ஓவியங்களிலும் தலையணை எம்பிராய்டு வேலைப்பாடுகளிலும் இந்த எழுத்துகளைப் பார்க்கலாம். பார்டர் போல் எழுத்துகளைப் பயன்படுத்தித் தகவலை சொல்லிவிடுவார்கள். பெண்கள் ஆண்களின் கண்களில் படும்படியே ஓவியங்களில் இந்த எழுத்துகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்குப் போன பெண் அங்கு தனக்கு நேரும் அனுபவங்களையும், அரவணைப்பையும் தன் தாய்க்கு இந்த எழுத்தின் மூலம் ரகசியமாகத் தெரிவித்தும் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு பெண்ணும் இந்த மொழியை தனது மகளுக்கும், பேத்திக்கும் கற்றுதந்து வழிவழியாக காப்பாற்றிவந்தனர். பெண்ணுக்கு மட்டுமே இருக்கும் பல தனிப்பட்ட விஷயங்களைக் கூசாமல் பேசிய மொழி இது.
தற்போது "நுஷு' மொழி தெரிந்த ஒரு பெண் கூட உலகில் இல்லை. யாக் ஷி அன்ய் என்ற 98 வயது பெண் 2004-ஆம் ஆண்டில் இறந்தபோது, நுஷு மொழியும் இறந்தது. இவர்தான் நுஷு மொழியை அறிந்த கடைசிப் பெண்
என்கிறார்கள்.
பெண்களின் வலிகளையும் காதலையும் திகட்ட, திகட்ட சொன்ன ஒரு மொழி, இன்று உயிர்ப்போடு இல்லை. அதற்காகத்தான் அந்த மொழியை பராம்பரிய மொழியாக சீன அரசு அறிவித்தது. இதற்காக ஒரு அருங்காட்சியகத்தையும் அமைத்தது.
நிறைய கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் இருக்கும் இன்றைய பெண்களால் இப்படி ஒன்றை உருவாக்க முடியுமா?
அதனால்தான் சீனா ஒரு வித்தியாசமான நாடு என்ற சர்வதேச அரங்கில் கூறப்படுவது உண்டு.