

'நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்காக, முயற்சியும் பயணமும் மேற்கொண்டு வருகிறேன். நாட்டுக்கு மிகவும் அவசியத் தேவையான அமைதிக்கு ஒரு துறையை ஏற்படுத்த வேண்டும்'' என்கிறார் காந்தியவாதியும், ஏக்தா பரிஷத் தலைவர்- நிறுவனருமான பி.வி.ராஜகோபால்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மே 11-இல் நடைபெற்ற விழாவில், பி.வி.ராஜகோபாலுக்கு உயரிய விருதான 'நிவானோ அமைதி பரிசு' வழங்கப்பட்டது. இந்த மதிப்புமிக்க விருதை பெறும் 40- ஆவது நபர். இந்தியாவில் எலா ரமேஷ் பட், டாக்டர் ஆராம் ஆகியோருக்குப் பிறகு இந்த விருதைப் பெறும் மூன்றாவது நபர் இவர்.
கேரள மாநிலத்துக்கு உள்பட்ட கண்ணூர் மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் பி.வி.ராஜகோபால். கண்ணூர், கோழிக்கோட்டில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வேளாண் பொறியியல் படிப்பை மகாராஷ்டிரத்தில் உள்ள சேவாகிராமில் நிறைவு செய்தார்.
அவர் தனது வாழ்க்கை பயணம் குறித்து கூறியதாவது:
'எனது தந்தை சுதந்திரப் போராட்ட வீரர் கே.சி.நம்பியார். அவர் என்னிடம் அதிகம் பேசியது காந்தியையும், சுதந்திரப் போராட்டத்தையும்தான். இதனால், காந்தி மீது சிறு வயது முதலே ஈர்ப்பு உண்டானது. 1969- ஆம் ஆண்டு கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தேன். அப்போது, மகாத்மா காந்தியின் நூற்றாண்டு விழாவையொட்டி காந்தி தர்ஷன் ரயில் பயணத்தில், சிறுவன் மோகன் எப்படி மகாத்மா காந்தியானார் என்பது காட்சிப்படுத்தப்பட்டது.
காந்தியின் அஹிம்சை கோட்பாடுகளின் முக்கியத்துவமும், அவசியமும் என்னை சிந்திக்க வைத்தது. அந்தச் சமயம் சம்பலுக்குச் செல்ல எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதையேற்று அங்குள்ள மகாத்மா காந்தி சேவா ஆஸ்ரமத்தில் 1970- இல் சேர்ந்தேன். இரண்டு ஆண்டுகள் கிராம மக்களுக்கு காந்தியின் கோட்பாடுகள், தத்துவங்கள், அஹிம்சை ஆகியவற்றை விளக்கினோம்.
1972-ஆம் ஆண்டு ஏப்ரல் 14- ஆம் தேதி கொள்ளையன் மாதோ சிங் தலைமையில் 572 கொள்ளைக்காரர்கள், காந்தியின் உருவப் படத்தின் முன் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். இது அஹிம்சையால் சாத்தியமானது. கொள்ளைக்காரர்கள் தூக்கிலிடப்பட மாட்டார்கள் என்ற நிபந்தனையுடன் சிறைக்கு அனுப்பப்பட்டனர். சிறைத் தண்டனையை முடித்து வெளியே வரும் கொள்ளையர்களை பழிவாங்கக் காத்திருந்தோரிடம் பேசி அவர்களின் மனநிலையை மாற்றினோம். இதனால், சிறைவாசத்தில் இருந்து வெளிவந்தவர்கள் சுதந்திரமாக நடமாட முடிந்தது. ஆனால் சமூகம் மறைமுக வன்முறையால் அச்சுறுத்தலை எதிர்கொண்டது. அது பிற்காலத்தில் நேரடி வன்முறையாக மாறியது.
1980-ஆம் ஆண்டில் சத்தீஸ்கருக்குச் சென்று, அங்குள்ள மக்களுடன் இணைந்து, 1990-ஆம் ஆண்டு வரை இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்தது மனநிறைவாக இருந்தது.
2000- ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் முழுவதும் 3,500 கி.மீ நடைப்பயண யாத்திரையைத் தொடங்கினோம். இது இரு மாநிலங்களிலும் நிலச் சீர்திருத்தப் பணிக்குழுவை உருவாக்க வழிவகுத்தது.
2007-ஆம் ஆண்டில் 25 ஆயிரம் பேருடன் குவாலியரில் இருந்து புதுதில்லி வரை பேரணியாகச் சென்றதால் வன உரிமைச் சட்டம் உருவாகியது.
இதேபோன்று 2012- இல், ஒரு லட்சம் பேருடன் புதுதில்லிக்கு அணிவகுத்துச் சென்றபோது, பாதி வழியிலேயே 10 ஒ ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது. இதன் மூலம் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மீள்குடியேற்றச் சட்டம் உருவானது. மக்கள் இயக்கங்கள், அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்பதை இவை நிரூபித்துள்ளன.
மீனவர் பிரச்னை, மதப் பிரச்னை, மொழி பிரச்னை, தலித்- தலித்தல்லாதவர்களுக்குமான பிரச்னை போன்றவைகளால் மக்கள் அமைதியின்மையில் உள்ளனர்.
கரோனா காலத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதைக் காண முடிந்தது. வறுமைதான் அவர்களை வேலை தேடி நகரங்களுக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளியது. அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும், வறுமையில்லா இலக்கை அடைய நடவடிக்கை எடுப்பதாகவும் மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் நிலைமை அதற்கு மாறாக உள்ளது.
ஒரு சமயம் நாகாலாந்தில் ஏற்பட்ட வன்முறையை சரிசெய்ய மத்திய அரசு எங்களை அனுப்பி அமைதியை ஏற்படுத்தியது. தற்போது மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறையை தடுத்து அமைதியை ஏற்படுத்த சமூக சேவகர்களை அனுப்ப மறுக்கிறது. அரசுக்கும் சமூக அமைப்புகளுக்கான இடைவெளி 10 ஆண்டுகளாக குறைந்துவிட்டது. நாட்டில் பெரும்பாலான மக்கள் அமைதியின்மையுடன் உள்ளனர்.
நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்காக, முயற்சியும் பயணமும் மேற்கொண்டு வருகிறேன். விளையாட்டு, சுற்றுச்சூழல், வனம் போன்ற பல்வேறு துறைகளை மத்திய அரசு ஏற்படுத்தி நிர்வகித்து வருகிறது. நாட்டுக்கு மிகவும் அவசிய தேவையான அமைதிக்கு ஒரு துறையை ஏற்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் அமைதி தொடர்பான பாடத் திட்டத்தைக் கொண்டு வரவேண்டும்.
நாட்டில் உள்ள சமூக அமைப்புகள் கிராமங்களில் உள்ள மக்களை சந்திக்கக் கூடியவர்கள். அவர்களின் தேவைகள், பிரச்னைகளை நன்கு அறிந்தவர்கள். நாட்டில் நிலவும் முரண்பாடுகளை களைய சமூக அமைப்புகளை அமைதி பேச்சுவார்த்தைக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளுக்கு, அமைதி தூதுவர்களாகவும் அரசு பயன்படுத்த வேண்டும்.
ஐரோப்பாவில் 29 நாடுகள் ஒன்றிணைந்து எல்லைகள் இல்லாமல் ஒற்றுமையுடன் செயல்படுகின்றன. இதனால் பல மில்லியன் டாலர் மிச்சப்படுகிறது. இதேபோன்று தெற்கு ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்படலாம்.
அசோக சக்கரவர்த்தி போரில் வெற்றி பெற்றவுடன், ' மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை கண்டு அஹிம்சை சிறந்தது' என்றார். இன்றும் காந்தியின் அஹிம்சை குறித்து ஒவ்வொரு நாளும் பேசி வருகிறோம். அதனை செயல்படுத்த ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்.
இந்த விருது எனக்கு மட்டும் உதவவில்லை. காந்திஜியின் கொள்கைகள் இன்னும் மிகவும் பொருத்தமானவை என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளது. புத்தர், மகாவீரர், விவேகானந்தர், மகாத்மா காந்தி போன்ற அஹிம்சை கொள்கையை முன்னிறுத்திய பெருமளவிலான தலைவர்களைக் கொண்ட நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. இந்தப் பெருமை வேறு எந்த நாட்டுக்கும் கிடையாது. அஹிம்சையை நெறியாகக் கொண்டதற்கான அங்கீகாரமாகும். இவ்விருதின் மூலம் எனது பணி அதிகரித்துள்ளது. உலகளவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.