மனமொன்றி படித்தவர்களை தமிழ்த் தாய் கைவிட்டதில்லை!
By பிஸ்மி பரிணாமன் | Published On : 28th May 2023 12:00 AM | Last Updated : 28th May 2023 12:00 AM | அ+அ அ- |

"தமிழை மனமொன்றி படித்தவர்களைத் தமிழ்த் தாய் கைவிட்டதில்லை'' என்கிறார் திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் த.விஜயலட்சுமி.
இவர் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் 2022-இல் உருவாக்கப்பட்ட தமிழ் இருக்கைக்கு வருகை பேராசிரியராகத் தேர்வாகியுள்ளார். இந்தியாவுக்கு வெளியே வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழ் இருக்கைக்குப் பங்களிப்பு செய்யவிருக்கும் "முதல் பெண் பேராசிரியை' என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. அவரிடம் ஓர் சந்திப்பு:
உங்களைப் பற்றி...?
நான் கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர். தமிழ் போலவே மலையாளம், ஆங்கில மொழிகளிலும் சரளமாகப் பேசுவேன். எழுதுவேன். தமிழிலக்கிய ஆய்வுத் தொடர்பாக 8 நூல்கள், 2 கவிதை நூல்கள், 3 மொழிபெயர்ப்பு நூல்கள், 15-க்கும் மேற்பட்ட பதிப்பு நூல்கள், ஏராளமான கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளேன்.
"கனலி விஜயலட்சுமி' என்ற யூ டியூப் சேனலை நடத்துகிறேன். 2019-இல் நான் எழுதிய "தமிழ் இலக்கிய கோட்பாடு" என்ற நூல்தான் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.
தமிழ் படிக்க காரணம் என்ன?
பள்ளியில் தமிழ் வழி படித்த பிறகு பட்டப்படிப்பில் தாவரவியல் படித்தேன். அதில் மனம் ஒன்றாமல் தமிழ் பட்டப் படிப்பில் சேர்ந்தேன். இதற்கு வீட்டில் எதிர்ப்பு இருந்தபோது, "நிச்சயம் தமிழ் எனக்கு சோறு போடும்' என்று பெற்றோரை சமரசம் செய்தேன். முனைவர் பட்டம் பெற திருவனந்தபுரம் வந்தேன். நடுவில் சட்டம் படித்தேன். கேரள அரசு தலைமைச் செயலகத்தில் சட்டத் துறையில் வேலை கிடைத்தது. பிறகு, கல்லூரியில் விரிவுரையாளர். இப்போது பேராசிரியர். தமிழால்தான் உயர்ந்தேன்.
வியந்த விஷயங்கள்?
முனைவர் பட்டத்துக்காக, அட்டப்பாடி பழங்குடி மக்களின் வாழ்வியல், மருத்துவ முறைகள் குறித்து ஆய்வு செய்தேன்.
அந்தக் காலத்திலிருந்தே வனத்தில் வாழும் பழங்குடி மக்கள் இரண்டுக்கும் மேல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில்லை. கருவுருவதைத் தடுக்கும் மூலிகை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். அதுபோல், நாகம் கட்டுவிரியன் கடிப்பது அங்கு தினமும் நடக்கிறது. பாம்பு கடிப்பதை அவர்கள் ஒரு பூச்சிக்கடியாகவே பார்க்கின்றனர்.
பாம்புக் கடிக்கு பச்சிலை மருந்துதான். பாம்பு கடித்தவருக்கு மன பலம் கூட்ட, சுவாமி ஆட்டமும் ஏற்பாடு செய்கின்றனர். அவர்களுடன் அவ்வப்போது பல நாள்கள் தங்கியிருந்ததால் அவர்கள் மொழியும் எனக்குத் தெரியும்.
தமிழ் இலக்கியத் துறைக்கு உங்கள் பங்களிப்பு என்ன?
"தொல்காப்பியம்' நூல் முழுமையான தரமான செய்யுள் அல்லது பாடல் அமைய 34 உறுப்புகளை (இலக்கணங்களை) வரையறுத்துள்ளது. அந்தக் காலத்தில் நான்கு வரி பாடலாக இருந்தாலும், தொல்காப்பியம் சொல்லும் அந்த 34 அம்சங்கள் கொண்டிருந்தால்தான் அதை பாடலாக இதர புலவர்கள் அங்கீகரிப்பார்கள். காலம் மாறவே , சங்கப் பாடல்கள் , செய்யுள்கள், எளிமையான கவிதைகளாக உருமாறியது. பிறகு வசனக் கவிதை புதுக் கவிதை ஹைக்கூ கவிதை... என்று பல கிளைகள் முளைத்தன.
இந்தப் படைப்புகளின் தரம் அறிய தொல்காப்பிய வரைமுறைகளை இப்போது பயன்படுத்துவதில்லை. தொல்காப்பியம் சொன்ன 34 உறுப்புகளில்
13-ஐ தேர்ந்தெடுத்து அத்துடன்
"அங்கதம்', "உள்ளுரை' என்ற அம்சங்களை சேர்த்து "தமிழ் இலக்கிய கோட்பாடுகள்' என்ற நூலை எழுதியுள்ளேன். இந்தக் கோட்பாடுகள் படைப்பாளியின் படைப்பின் தரத்தை 15 கோணங்களில் ஆழமாக அகலமாக திறனாய்வு செய்வதற்காக உதவுகிறது.
இரண்டாவதாக, பெண்ணிய ஆய்வு செய்வதற்கான அணுகுமுறையை உருவாக்கி "பெண் பெண்ணியம் பெண்ணிலை' என்ற நூலாக வெளியிட்டேன்.
மூன்றாவது "தமிழ்- மலையாள மொழி" அகராதி ஒன்றை முதன்முதலாக (1100 பக்கங்கள்) உருவாக்கினேன். இந்தப் படைப்புகள் காலத்துக்கும் நிலைத்து நிற்பவை.
ஹுஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு உங்கள் பங்களிப்பு என்ன?
ஹூஸ்டன் பல்கலைக்கழகம் தனது தமிழ் இருக்கைக்காக, "பேராசிரியர் தேவை' என்று இந்திய கலாசாரத் தொடர்பு கழகத்துடன் கேட்டது.
இந்திய கலாசார தொடர்பு கழகம் நடத்திய நேர்முகத் தேர்வில் பங்கேற்று, தேர்வானேன்.
அமெரிக்க மாணவர்களுக்குத் தமிழ் கற்றுத் தர நான் நியமிக்கப்பட்டுள்ளேன். அத்துடன் அங்கிருக்கும் தமிழ் இருக்கையை ஒரு ஆய்வுத் துறையாக மேம்படுத்தி அதைச் செம்மைப்படுத்த வேண்டும் என கருதியுள்ளேன். இதற்கு முயற்சி செய்த தமிழ் ஆர்வலர்களுக்கும் குழந்தைகளுக்கும் தமிழைக் கற்பிப்பேன்.