

{சில நேரங்களில் வாழ்க்கையை ஆச்சரியமும், அச்சமும் கலந்து பார்க்க நேர்ந்து விடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. பிறக்கும்போது அவனோடு பிறக்கிற வரலாறு, அவன் இறந்த பின்னாலும் அவனது உறவுகள் மூலம் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடையத் துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களை தவிர வேறு எதையும் விட்டு விட்டு போகக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். மனித உறவுகளின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை.'' இதமான குளிர் நிரம்பிய அறைக்குள் கதையின் முதல் முடிச்சை அவிழ்த்து பேசத் தொடங்குகிறார் ஹாருன். சமீபத்தில் வெளிவந்த "வெப்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தற்போது "7 ஜி' படத்தின் கதையோடு வருகிறார்.
7 ஜி.... தலைப்பு தருகிற அர்த்தம் என்ன...
ஒரு குடியிருப்பு வளாகத்தைத்தான் இங்கே குறிக்கிறோம். "வெப்' படத்துக்கு பின் நான் இயக்க வேண்டிய திரைக்கதை வேறு ஒன்றாகத்தான் இருந்தது. அந்த திரைக்கதைக்கான சில ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு விஷயம் என் கண்களுக்கு வந்தது. அது ஒரு உண்மை சம்பவம். எதார்த்தம் என்பது கற்பனையை காட்டிலும் விநோதமானது. அதிசயதக்கது. அது மாதிரியான ஒரு சம்பவம் அது. இது மாதிரி நடக்குமா என்று கூட தோன்றியது. அதை பின் தொடர்ந்து போய் பார்த்தால், உலகம் நெடுகிலும் அந்த பிரச்னை நடந்துக் கொண்டே இருப்பதாக தெரிந்தது. கொஞ்சம் நிதானித்து பார்த்தால், அதில் சினிமாவுக்கான அவ்வளவு சங்கதிகள் இருந்தன. அப்படி எழுத ஆரம்பித்ததுதான் இதன் ஆரம்ப புள்ளி. பிளாக் காமெடியாக எழுத வேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால், கதை ஒரு கட்டத்துக்குப் பின் தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பார்கள். அப்படி அதன் அம்சங்களை இந்தக் கதை அதுவாகவே தேடிக் கொண்டது. அப்படி ஆரம்பமான ஒரு பயணம்தான். இப்போது இறுதிக் கட்டத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. 7 ஜி என்பது எத்தனை பொருத்தமான தலைப்பு என்பது படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரிய வரும்.
கதையின் உள்ளடக்கம் பற்றி பேசலாம்...
ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டகத்துக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன். அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒவ்வொரு கணமும் ஒரு அனுபவம். அனுபவமே கடவுள் என்று உணருகிற போதுதான் எல்லாமே தெரிகிறது. ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் உணர்ந்தது சிறு விநாடிதான். ஆனால், அவர் கடந்து வந்த தூரம் ஒரு வனத்தை கடந்த மாதிரி. இதுதான் இந்த கதையின் அடிப்படை. அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாக கொண்டு வந்திருக்கிறேன். எல்லா மனித சிக்கல்களிலும் காதல் எப்படி ஒரு பங்கு வகிக்கிறதோ, அப்படி இந்த கதை ஓட்டத்திலும், மையப் புள்ளியிலும் ஒரு காதல் உண்டு. காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என இந்த கதை வழக்கமான பார்வைதான். ஆனால் அதை தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன.
சோனியா அகர்வாலுக்காக 7 ஜி என தலைப்பா...
அப்படி இல்லை. முதலில் இந்தக் கதையில் சோனியா மேடம் இல்லை. வேறு நடிகைகள்தான் இருந்தார்கள். பின்புதான் சோனியா மேடம் வந்தார்கள். அதற்கேற்றவாறு தலைப்பு அமைந்து விட்டது. இது எதார்த்தம்தான். ஒரு நடிகையாக இன்னும் வெளிப்படுத்தப்படாத பரிமாணங்கள் அவரிடம் நிறைய உண்டு. சுமார் 20 வருடங்களாக அவரை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இப்போது வேறு மாதிரி இருக்கிறார். இந்தப் படம் அவரின் முந்தைய அடையாளங்களை மாற்றும்.
இப்போது அதைத்தாண்டி வேறு ஒரு பரிமாணத்தை காட்ட வேண்டும் என்று ஒரு இயக்குநராக நினைத்தேன். அந்த இடத்துக்கு சோனியா மேடத்தை கொண்டு வந்திருக்கிறேன். என்னையும் அடுத்த இடத்துக்கு கொண்டு போகிற படம். ஸ்மிருதி வெங்கட், சித்தார்த் விபின், சிநேகா வெங்கட், ரோஷன் இன்னும் பிற வேடங்களுக்கு நல்ல நடிகர்கள் வந்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு இயக்குநராக கண்ணன், இசைக்கு சித்தார்த் விபின் என நேர்த்தியான தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ஒரு கதையை அதன் எதார்த்த தன்மையோடு சொல்லியிருக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.