நாடகமே மூச்சு!

பழைய நாடகங்களை மீண்டும், மீண்டும் நடத்துகிறேன்.  மேடை நாடகம்தான் நான் இன்னமும் உயிர்ப்புடன் உலாவுவதற்கு முக்கிய காரணம்'' என்கிறார் காத்தாடி ராமமூர்த்தி.
நாடகமே மூச்சு!


பழைய நாடகங்களை மீண்டும், மீண்டும் நடத்துகிறேன். மேடை நாடகம்தான் நான் இன்னமும் உயிர்ப்புடன் உலாவுவதற்கு முக்கிய காரணம்'' என்கிறார் காத்தாடி ராமமூர்த்தி.

எண்பத்து ஐந்து வயதிலும் மேடை நாடகம், சினிமா, தொலைக்காட்சித் தொடர்களில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இவரது 60 ஆண்டுப் பயணத்தில் தமிழ்நாடு அரசின் "கலைமாமணி' , மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமியின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

அவருடன் ஓர் சந்திப்பு:

உங்கள் குடும்பப் பின்னணி திரைத்துறையோடு தொடர்புடையதா?

கும்பகோணத்தில் "வாணி விலாச சபா' என்று அமெச்சூர் நாடகக் குழு இருந்தது. அந்தக் குழுவின் நாடகங்களில் நடித்தவர்களில் எனது தந்தையும் ஒருவர். கும்பகோணம் நகராட்சிஅலுவலகத்தில் நாடகங்களுக்கு அனுமதி அளிக்கும் பணியை அவர் செய்துவந்ததால், நாடகங்களைப் பார்க்கத் தவற மாட்டேன். அந்த ஆர்வத்தில் பள்ளி நாடகங்களில் நடித்தேன்.

மேடை நாடகத் தொடர்பு ஏற்பட்டதுஎப்படி?

நான் விவேகானந்தா கல்லூரியில் படித்தபோது, நாடகத்தில் நடிக்கத் தேர்வானேன். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அது தொடர்ந்தது. சோவின் தம்பி ராஜகோபால் உள்ளிட்ட நண்பர்களையும் "நீலு' என்று பெயரில் ஒன்று சேர்த்தது நாடகம்தான்.

சொந்த நாடகக் குழு ஆரம்பிக்கும்எண்ணம் வந்தது எப்படி?

மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நண்பர்கள் ஓய்வு நேரத்தில் பேசும்போது உதயமானதுதான் சொந்த நாடகக் குழு எண்ணம். முதலில் "யங் மென் ஃபைன் ஆர்ட்ஸ்' என்ற பெயரில் குழுவைத் தொடங்கினோம். பகீரதனின் "தேன்மொழியாள்' என்ற கதையை கூத்தபிரானின் கைவண்ணத்தில் சுவாரசியமான நாடகமாக்கி, அரங்கேற்றினோம். எல்லோரும் பாராட்டினாலும், வர்த்தக ரீதியில் வெற்றி பெறவில்லை. என் மோதிரத்தை அடகு வைத்து செலவுகளுக்குப் பணம் அளித்தேன்.

உங்கள் குழுவில் சோ வந்து சேர்ந்தது எப்படி?

எங்கள் சொந்தக் குழுவின் பெயரை "விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்' என்று மாற்றினோம். அப்போது ஒய்.ஜி.பி.யின் நாடகங்களுக்கு மேடை நிர்வாகத்தை சோ கவனித்துகொண்டிருந்தார். அவர் எழுதிய "இஃப் ஐ கெட்இட்' என்ற நாடகத்தை எங்களுக்குக் கொடுத்தார். அவரை எங்கள் குழுவில் நடிக்கும்படி கேட்டபோது, மகிழ்ச்சியோடு சம்மதித்தார்.

அந்த நாடகம் ஆரம்பம் முதல் கடைசி வரை கலகலப்பாக இருக்கும். "காத்தாடி' என்கிற கார்டூனிஸ்ட் கேரக்டரில் நடித்த எனக்கு அதே பெயரில் அடைமொழி கொடுத்ததும் அந்த நாடகம்தான். அப்போது முதல் ரசிகர்கள் என்னை எங்கே பார்த்தாலும், "காத்தாடி' என்றுதான் அழைப்பார்கள்.

"ஸ்டேஜ் கிரியேஷன்ஸ்' என்ற பெயரில் தனியாக நாடகக் குழுஆரம்பித்ததன் பின்னணி என்ன?

ஒரு நாடகத்தில் எனக்கு முக்கியத்துவம் இல்லாத பாத்திரத்தைக் கொடுத்தபோது வருத்தம் ஏற்பட்டது. சோவிடம் கேட்டபோது, நீ ரொம்ப பிரபலமாகிவருவதை இந்தக் குழுவில் சிலர் விரும்பவில்லை. உனக்கு இருக்கும் திறமை, பிராபல்யத்துக்கு நீ தனிக் குழு ஆரம்பிப்பது நல்லது'' என்றார். அதன்படி உருவானதுதான் "ஸ்டேஜ் கிரியேஷன்' நாடகக் குழு. அதன்மூலமாக, ஓடிப்போன கணவன் (கே.கே.ராமன்), துப்பறியும் சாம்பு (தேவன்), படிதாண்டியபதி (கஜேந்திரகுமார்) , தேன்நிலவுத் தம்பதிகள், அய்யா அம்மா அம்மம்மா (இரண்டும் கிரேஸிமோகன்) , பட்டினப் பிரவேசம் (விசு), சூப்பர் குடும்பம் (நாணு) உள்ளிட்ட 50 வெற்றி நாடகங்களை பலமுறை நடத்தி இருக்கிறோம். இவற்றில் சில 500 முறைகளுக்கு மேல் மேடைகண்டவை.

சினிமா, நாடகம், டி.வி. தொடர் ஆகிய மூன்றில் திருப்தி அளிப்பது எது?

நாடகம்தான். நாடக மேடையில் நடிக்கிறபோது அந்த நேரடி கைத்தட்டல், பாராட்டு இருக்கிறதே அது அளிக்கும் மகிழ்ச்சியும், திருப்தியும் அலாதியானது.

எண்பத்து ஐந்து வயதிலும் உங்களை உற்சாகமாக இயங்க வைப்பது எது?

இன்றும் புதிய நாடகங்களைஅரங்கேற்றிக் கொண்டிருக்கிறேன். பழைய நாடகங்களை மீண்டும், மீண்டும் நடத்துகிறேன். மேடை நாடகம்தான் நான் இன்னமும் உயிர்ப்புடன் உலாவுவதற்கு முக்கிய காரணம்.

சங்கீத நாடக அகாதெமி விருது பெற்றது குறித்து?

அண்மையில் பெற்ற இந்த விருதை பெரிய கெளரவமாக மதிக்கிறேன். கைத்தட்டல்களைப் போலவே, இப்படியான விருதுகளும் ஒரு கலைஞருக்கு அவசியம்தான்.

மறக்க முடியாத சினிமா அனுபவம் சொல்லுங்கள்?

சிவாஜி கணேசனைப் பார்த்து, "உனக்கெல்லாம் வசனம் பேச வருமா?' என்று பேசினேன். " ராமன் எத்தனை ராமனடி' எனும் திரைப்படத்தில் எனக்கு உதவி இயக்குநர் பாத்திரம். சினிமா வாய்ப்பு கேட்டு மற்றவர்களோடு சிவாஜியும் நின்று கொண்டிருப்பார். அவரிடம், ஏனப்பா! உன்னைப் பார்த்தா வசனம் பேசுற முகம் மாதிரி தெரியலியே!'' என்று சொல்வேன். பின்னர், இந்த உலகத்தில் ஏழைகள் வாழ வழியே இல்லையா?'' என்ற வசனத்தைக் கொடுத்து சிவாஜியைப் பேசச் சொல்லுவேன். அவர் திரும்பச் சொல்லுவார். இப்படி ஒரு வசனம் சொன்னதை வாழ்நாளில் மறக்க முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com