தமிழை மறக்க வாய்ப்பில்லை...
By DIN | Published On : 24th September 2023 05:30 PM | Last Updated : 24th September 2023 05:30 PM | அ+அ அ- |

சிவகங்கையைப் பூர்விகமாகக் கொண்ட சுற்றுலா வழிகாட்டி ஆறுமுகம் கூறியதாவது:
மிகப் பெரிய துறைமுகம் அந்தமானில் உருவாகிறது. அங்கு உலக வணிகக் கப்பல்கள் வந்து போகும்.
திரையரங்குகளில் ஒரு நாளில் ஹிந்தி, வங்க, தமிழ்ப்படங்கள் வெவ்வேறு நேரங்களில் திரையிடப்படும். சுற்றுலாத் தொழில் வளர்ந்துவருவதால், வயல்கள் விடுதிகளாக மாறி வருகின்றன. சென்ட் ஆயிரம் என்று விலை போன நிலத்தின் மதிப்பு உயர்ந்துவிட்டது. வெளிமாநில நிறுவனங்கள், செல்வந்தர்கள் என பலதரப்பட்டவர்களும் நட்சத்திர விடுதிகளைக் கட்டிக் குவித்ததால், இன்று வெளிமாநில முதலீடுகளை அந்தமான் தடை செய்யும் அளவுக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
ராஸ் தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்தமானில்தான் நாட்டின் விடுதலைக்கு மூவர்ணக் கோடியை நேதாஜி ஏற்றினார். ஹரியட் மலையில் ஆங்கிலேயர்களை எதிர்த்த மணிப்பூர் அரசன் குலசந்திர சிங், அவரது வீரர்களை சிறை வைத்தனர். உணவு கிடைக்காமல் இவர்கள் உயிர்நீத்த தியாகத்தை இன்றும் நினைவு கூரப்படுகிறது.
இங்கே விளையும் கத்தரிக்காய், வெண்டைக்காய் கிலோ நூறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நிலநடுக்கம் இங்கே அடிக்கடி நடப்பதால், அதனுடன் வாழ பழகிக் கொண்டோம்'' என்றார்.
நீல் தீவில் உணவு விடுதி நடத்திவரும் ராஜலட்சுமி கூறியதாவது:
மதுரையை அடுத்த கொட்டாம்பட்டியே எங்களது பூர்விகம். நீல் தீவில் பிறந்து வளர்ந்ததால், தீவு மொழிகள் அனைத்தும் அறிவேன். உணவு விடுதிக்கு மேல் தங்கும் விடுதி கட்டி உள்ளேன்.
இங்கே திருமணத்துக்கு வரனோ, பெண்ணோ கிடைக்காவிட்டால் தமிழ்நாட்டில் தேடுகின்றனர். பெண் தீவைச் சேர்ந்தவர் என்றால் மணமகன் அந்தமான் வந்துவிடுகிறார். சில மணமகள்கள் தமிழ்நாட்டுக்கும் சென்றுவிடுவதுண்டு. இங்கே தமிழ் படிக்க பள்ளியில் வசதிகள் உண்டு. அதனால் தமிழ் மறந்து போக வாய்ப்பில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது சொந்த ஊர் சென்று, உறவினர்களைப் பார்த்து வருவோம். அவர்களும் வந்து போகிறார்கள்'' என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...