அறிவியல்: அதிசயப் பெண்
By வ.ஜெயபாண்டி | Published On : 24th September 2023 05:10 PM | Last Updated : 24th September 2023 05:10 PM | அ+அ அ- |

அறிவியலை அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்குச் சென்று சேர்க்கும் பணியை கடந்த 37 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார் அறுபத்து ஆறு வயதான ஹேமாவதி.
இதுவரையில் லட்சத்துக்கும் மேலான குழந்தைகளுக்கு அறிவியலின் அடிப்படை ஆய்வுத்தன்மையை, இயற்கை நிகழ்வின் ரகசியத்தை வானியலின் அதிசயத்தைமிக எளிமையாக விளங்கவைத்துள்ளார். அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் மருத்துவம், மரபணு.. உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆய்வாளர்களாக இருப்பதுடன், அரசின் உயர்ந்த பதவிகளையும் வகித்துவருகின்றனர்.
புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள ஹேமாவதியின் "ஆனந்த பாக்கியா' எனும் வீட்டில் முழுவதும் அறிவியல் விளக்க சாதனங்களையே காணமுடிகிறது. காலை முதல் மாலை வரை வீட்டில் வானவில்லை ஏற்படுத்தும் ஒளிரும் சாதனம் முதல் சமநிலைப் பொம்மை முதல் காண்போரை வியக்கவைக்கும் மாயாஜால அறிவியல் பூர்வ சாதனங்கள் அதிசயவைக்கின்றன.
அவரிடம் பேசியபோது:
""எனது அப்பா அனந்த பத்மநாபன், பொதுப்பணித் துறையில் செயற்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அம்மா சிவபாக்கியம். எனக்கு 3 சகோதரிகள், 1 சகோதரர். ஆரம்பக் கல்வியை புதுச்சேரியில் படித்தாலும், தந்தையின் பணிநிமித்தமாக, தமிழகத்திலும் படிக்க நேர்ந்தது.
வேதியியலில் இளங்கலைப் பட்டமும், அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் முடித்தேன். முதுநிலை ஆசிரியர் கல்வி பட்டத்தால் 1980- ஆம் ஆண்டு முதல் நடுநிலைப் பள்ளி ஆசிரியரானேன். அறிவியல் பாட ஆசிரியை பணி என்பதால், அதை குழந்தைகளுக்கு எளிமையாக எப்படி விளக்குவது என்பதில் சிந்தனையைச் செலுத்தினேன்.
கல்வித்துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றேன். மாவட்டக் கல்வி அலுவலர் வரை உயர்ந்தேன்.
அறிவியல் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்ததால், அறிவியல் ஆய்வை மேற்கொள்ளும் வழிகாட்டல்களில் நாட்டம் ஏற்பட்டது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியன அடங்கிய "ஸ்டெம்' எனப்படும் தேசிய அளவிலான கல்விப்பிரிவை ஏழை, எளிய மாணவர்களுக்கு கற்பிக்கும் சமூகப் பணிக்காக என்னை அர்ப்பணிப்பதில் எனக்குள் ஆனந்தம் ஏற்பட்டது.
புதுச்சேரி அறிவியல் இயக்கம், மத்திய தொழில்நுட்பத் துறை உதவியுடன் குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டு செயல்பாட்டாளராக உள்ளேன். இதன்வாயிலாக, கடந்த 31 ஆண்டுகளில் லட்சத்துக்கும் மேற்பட்ட 7 வயது முதல் 17 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு அறிவியல் ஆய்வுக்கான ஆர்வத்தை மேம்படுத்திவருகிறேன்.
அரசுப் பள்ளி குழந்தைகளை மையமாக வைத்தே எனது அறிவியல் ஆய்வு வழிகாட்டல் பயணம் தொடர்கிறது. அதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆய்வு வழிகாட்டல் பயிற்சியையும் நடத்தி வருகிறேன்.
ஆண்டுதோறும் தேசிய அளவில் 6 ஆய்வுத் திட்ட கட்டுரை அனுப்பிவைக்கப்படும். அதன்படி தரநிலை சான்றுகள் அளிக்கப்படும்.
புதுவை மாநிலம் இதுவரை முதல் 3 இடங்களுக்குள்தான் தரநிலை பெற்றுவருகிறது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு தேசிய அளவில் 650 ஆய்வு கட்டுரைகளில் 20 சிறந்த கட்டுரைகளிலும் புதுவை குழந்தைகள் கட்டுரை இடம் பெறுகிறது.
புதுவை அறிவியல் அமைப்பும், பாரீஸ் தெற்கு 11 பல்கலைக்கழகமும் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் அறிவியல் மாதிரி படைப்பு கட்டுரைப் போட்டியில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் குழு முதல் இரு பரிசுகளைப் பெற்றுவருகிறது.
சுற்றுச்சூழல், மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றை மையமாக வைத்தே ஆய்வுக்கட்டுரைகள் எழுத குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன.
புதுவை அறிவியல் அமைப்பில் பயிற்சி பெற்ற முத்தம்மா ஐ.ஏ.எஸ். தற்போது புதுவை அரசு சுற்றுச்சூழல் துறை செயலராக இருப்பது பெருமைக்குரியது. இதுபோல, ஜிப்மர் மருத்துவமனை, ஹைதராபாத் ஆய்வுமையம், அமெரிக்க ஆய்வு மையம் உள்ளிட்ட இடங்களிலும் எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
குழந்தைகளுக்கான அறிவியல் ஆய்வு வழிகாட்டலை அடுத்து புதுவை, தேசிய கல்விப் பாடத்திட்ட ஆய்வுக் குழுக்களில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளேன். மத்திய கல்வி ஆலோசனைக் குழுவிலும் அங்கம் வகித்துள்ளேன்.
அறிவியலை அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு கொண்டு செல்லும் வகையில் அறிவியல் ஆய்வு குறித்து "பல்லுக்கு மெதுவாய் பணியாரம்' எனும் தலைப்பிலான நூல் உள்ளிட்ட 15 நூல்களை எழுதியுள்ளேன். அறிவியல் ஆய்வு மாதிரி சாதனங்களைத் தயாரித்து பள்ளிகளுக்கும் அனுப்பிவைக்கிறேன்.
நிழல் இல்லா பகல், இரவு வான்காட்சி ஆகியவற்றுடன், குழந்தைகளுக்கான அறிவியல் கண்காட்சி, குழந்தைகள் திரைப்படம் ஆகியவற்றையும் நடத்திவருகிறேன். தினமும் குழந்தைகளுக்கு வானைக் காட்டினால், அவர்கள் கேள்வி ஞானத்தில் சிறந்து விளங்குவார்கள் என்பது அறிவியல் பூர்வ உண்மையாகும்'' என்றார்.
படம்: கி.ரமேஷ்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...