வானமே எல்லை
By ஏ.பேட்ரிக் | Published On : 24th September 2023 05:13 PM | Last Updated : 24th September 2023 05:13 PM | அ+அ அ- |

நவீன யுகத்தில் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் வளர்ச்சி என்பது ஆண்களுக்கு நிகராகவே உள்ளது. சாதனை என்பது அனைவருக்குமே பொதுவானதாகிவிட்டது. அப்படிப்பட்ட ஒரு சாதனையை மலை மாவட்டமான நீலகிரியைச் சேர்ந்த இளம்பெண் ஜெயஸ்ரீ புரிந்துள்ளார். அவர் படகர் சமுதாயத்தில் விமானிக்கான பயிற்சியை நிறைவு செய்த முதல் பெண்ணாக அசத்தியுள்ளார்.
படகர் இன மக்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நீலகிரி மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளிலும், கோவையிலும் அதிக அளவிலும் வசித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக படகர் சமுதாயத்தைச் சேர்ந்த பலர் கப்பல் படை, ராணுவம் உள்பட பல்வேறு துறைகளிலும் காலூன்றி வருகின்றனர். அந்த வகையில் கோத்தகிரி அருகேயுள்ள நெடுகுளா குருக்கத்தி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மணி- மீரா தம்பதியின் மகள் ஜெயஸ்ரீயும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் தனது பள்ளிப் படிப்பை கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியிலும், பொறியியல் படிப்பை கோவையில் உள்ள தனியார் கல்லூரியிலும் முடித்துவிட்டு சில ஆண்டுகள் ஐ.டி. துறையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
விமானியாக வேண்டும் என்று லட்சியத்துடன் தென் ஆப்பிரிக்காவுக்கு ஜெயஸ்ரீ சென்று, விமானிக்கான பயிற்சியை முடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தற்போதும் எங்களது சமுதாயத்தில் பெண்களை அண்டை மாவட்டம் மட்டுமல்ல; அண்டை மாநிலங்களுக்கு கூட படிப்பதற்குத் தனியாக அனுப்புவதற்கு தயங்குகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மற்றொரு நாட்டுக்கு விமானிப் பயிற்சியைப் பெற தைரியமாக எனது பெற்றோர் என்னை தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிவைத்தனர்.
"பெண் குழந்தைக்கு இவ்வளவு செலவு செய்வது தேவையா?' என்று பலர் கேள்வி கேட்டநிலையிலும், எனது பெற்றோர் எனக்கு ஆதரவாகவே இருந்தனர்.
பொதுவாக விமானி என்றால் ஊர் சுற்றும் வேலை என்று அனைவரும் நினைப்பார்கள். வழக்கமான வேலைகளைவிட விமானி வேலையில் சவால்கள் அதிகம் உள்ளது.
மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை, மனநலப் பரிசோதனைகள் நடைபெறும். அதில் தேர்வு பெறவில்லை என்றால் பணியையே இழக்க நேரிடும். அதைவிட மன தைரியம் அதிக அளவில் இருக்க வேண்டும். இப்படி ஒரு பணிக்கு நான் வருவதற்கு எனது ஆரம்பகால பள்ளிப் படிப்பும், அங்கிருந்த ஆசிரியர்களுடன், எனது பெற்றோரும்தான் முக்கிய காரணமாவர்.
படகர் சமுதாயத்தில் மட்டுமின்றி, நீலகிரி மாவட்டத்திலேயே முதல் பெண் விமானியாக உருவாகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த துறையில் சாதிக்க வேண்டுமென்ற லட்சியத்துடன் படிக்கும் மாணவர்களின் படிப்பு தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் அதுதொடர்பான விளக்கங்களையும், பாடம் சம்பந்தமான பதில்களையும் வழங்கி உதவி செய்வேன்'' என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...