குழந்தைதான் மனித இனத்தின் பேரழகு!

குழந்தை மனங்களின் அரசியல் பார்வை!
குழந்தைதான் மனித இனத்தின் பேரழகு!
KOUSHIK

அரசியலை நாம் தவிர்ப்போம் ஆனால் நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும்...' அறிஞர் பிளாட்டோவின் இந்த கூற்றுதான் இந்தப் படத்தின் லைன். தொடர்ந்து பணத்துக்கும் அதிகாரத்துக்கும் எதிரான மனநிலையில் இருப்பவர்கள் எவ்வளவு நிம்மதியாக இருப்பார்கள் என்பதை அறிந்தவர்கள் உணர்வார்கள். யாரைப் பிடிப்பது, யாரைக் கவிழ்ப்பது, யாரை எங்கே வைப்பது, யாருக்கு என்ன செய்வது என ஏகப்பட்ட புதிர்ப் பாதைகள் கொண்டதுதான் இங்கே உள்ள அரசியல்.

அலுவலகம் தொடங்கி ஒவ்வொரு மட்டத்திலும் அரசியல் செய்ய தெரிந்தவர்கள் விரைவாக முன்னேறி, வசதி வாய்ப்புகளை அனுபவிப்பார்கள். செய்யத் தெரியாதவர்கள் அப்பாவிகளாக சிங்கியடிப்பார்கள் என்பதுதான் இங்கே உள்ள பெரிய சமூக சிக்கல். இப்படிப் பார்த்து எழுதியதுதான் இந்தக் கதை.

சூழ்ச்சியையும் தந்திரமாக பிழைப்பதையும் சமார்த்தியம் என நினைக்கிற எல்லா மனிதர்களின் வாழ்க்கையும்தான் இந்தப் படம். நீங்களும், நானும் கூட இதில் கதாபாத்திரமாக உலவலாம்.' நம்பிக்கையாக பேசுகிறார் இயக்குநர் சங்கர் தயாள். 'சகுனி' படத்துக்குப் பின் 'கே. எம். கே.' படத்தை இயக்கி வருகிறார்.

அதென்ன கே. எம். கே....

குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்பதன் சுருக்கம்தான் கே. எம். கே. அரசியல் இல்லாமல் இங்கே எதுவும் இல்லை. குழந்தை பருவம் முதலே நம்மை அரசியல் பின் தொடர ஆரம்பித்து விடுகிறது. இதில் சிறுவர்களை வைத்து அரசியல் பேசியிருக்கிறேன். ஏக்கம், கனவு, ஆசை, பொறாமை, வன்மம், ஈகோ, மன்னிப்பு, காதல், தண்டனை என எதுவும் இல்லாத இதயங்கள் சிறுவர்களுக்கானது. உண்மையில் பரிசுத்தங்கள். இல்லாத போது ஏங்குவதும், இருக்கிற போது ஆடுவதுமான மன நிலை அவர்களுக்கு இருப்பதில்லை.

எப்போதும் ஒரே மன நிலைதான். குழந்தையாக வந்து குழந்தையாகி போகும் இந்த வாழ்க்கையில், எல்லோரும் மீண்டும் குழந்தையாகி விடுகிற தருணத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம். என்ன முயற்சி செய்தாலும், நம்மால் நுழைந்து விடவே முடியாத உலகம் அது.

ஒரு மழைக் காலையில் ஜன்னல் விளிம்பில் நெளிந்த மரவட்டை, ரயில் பூச்சியானது ஒரு குழந்தைக்குத்தானே? ஊளையிடும் நரிகள் கதையானதும் ஒரு குழந்தைக்குத்தானே? மரக்கிளை தூளியாவது...சுவர்களின் கிறுக்கல்கள் ஓவியமாவதும் குழந்தையால்தான்...? குழந்தைகளின் உலகத்தில் அசிங்கம் என்பதே இல்லை.

அதனால்தான் உலக இலக்கியங்களும், சினிமாக்களும், கதைகளும் குழந்தைகளை பற்றியே பேசி விடுகின்றன. ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் குழந்தைதான் மனித இனத்தின் பேரழகு. அதுதான் இந்தக் கதையின் ஊடாக வெளிப்படும்.

பொதுவாக, தமிழ் சினிமாவில் சிறுவர்கள் இயல்புக்கு மீறி அதிகமாக பேசுவது மாதிரி காட்டுகிறார்கள்...

இதில் சிறுவர்களை அதிபுத்திசாலியாகவோ, மேதாவியாகவோ காட்டவில்லை. உண்மையில் சிறுவர்களின் உலகம் வேறு. அதற்குள் நிறையவே பயணம் செய்து வசனங்கள் எழுதியிருக்கிறேன். காட்சிகள் வைத்திருக்கிறேன்.

பொன்வண்டு பிடித்து சந்தையில் விற்கிறது மாதிரியான சிறுவர்களின் குட்டிக் குட்டி சந்தோஷங்களைப் பதிவு செய்திருக்கிறேன். இந்தப் படம், இயக்குநர் பார்வையில சிறுவர்களின் வாழ்க்கையைச் சொல்லவில்லை. சிறுவர்களின் பார்வையிலேயே அவர்களின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறேன்.

ஒரு பள்ளி என்பது, ஒரு சமூகம். ஒரு தேசம். அங்கிருக்கும் சூழலையும் சக மாணவர்களையும் அனுசரிக்க முடியாமல் போனதுதான் இங்கே பல பேருக்கான பிரச்னை. அது வெறும் வாடகை சத்திரம் அல்ல. அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். ரசவாதக் கூடம். மாறுபவனும் இருக்கிறான். மாற்றப்படுகிறவனும் இருக்கிறான். எல்லா விடுதிகளிலும் யாரோ ஒருவன் வீட்டுக்கு அடங்காமல் வந்து சேருகிறான். யாரோ ஒரு மாணவனுக்கு காதல் பூக்கிறது.

ஒருவனுக்கு மரணம் நிகழ்கிறது. யாரோ ஒருவன் கலைஞனாகிறான். கவிதை எழுதுகிறான். அரசியல் கற்று உணர்கிறான். ஒருவன் குற்றவாளியாகிறான். நிறைய பேர் திருந்துகிறார்கள். யாரோ ஒருவன் தன்னைத்தானே கண்டுபிடித்துக் கொள்கிறான் வெகு நாள்களுக்கு பிறகு... பள்ளி என்பது ஒரு வனத்தை கடந்த மாதிரி இருக்கிறது எல்லோருக்கும்.

இதுதான் கதையின் அடிப்படை. இன்றைய கல்வி சூழல், அரசியல், ஜாதியம் எல்லாவற்றையும் கொண்டு வருவதில் சவால். ஒரு அளவுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம்.

எந்த மாதிரியான அரசியல் விமர்சனங்கள்...

எல்லாம் உண்டு. விமர்சனங்களும்தான். குறிப்பாக தனி மனித வாழ்வு தொடங்கி அரசியல் வரைக்குமான ஏக விமர்சனங்கள் இருக்கும். இங்கே அரசியல் என்பது மக்கள் புரட்சி, தேர்தல், ஆட்சி என்பது மட்டுமே அல்ல... வேலை, தனி மனித வளர்ச்சி, குடும்பம், உறவுகள் வரை அந்த வார்த்தை ஊடுருவிக் கிடக்கிறது. குருஷேத்திர யுத்தமும் அரசியல்தான். யூதாஸ் கொடுத்த முத்தமும் அரசியல்தான்.

நீங்கள் எதை தருகிறீர்கள்... எதை பெறுகிறீர்கள்... என்பது அல்லவா முக்கியம். கொலம்பிய காட்டில் மரணத்துக்குப் பிறகும் அணையாத விண்மீனாகத் திறந்து கிடந்த சே-வின் விழிகளில், சிறுநீருக்கு பை வைத்துக் கொண்டு இறுதிக் கணங்களிலும் பேசிய பெரியாரின் சொற்களில், பன்னிரண்டாம் நாளிலும் திலீபனின் இதழில் உறைந்திருந்த புன்னகையில் இருப்பதற்கெல்லாம் பெயர் என்ன.. அற்பத்துக்கும் சொற்பதுத்துக்கும் அரசியல் என்ற பெயரை எதற்குப் பயன்படுத்துகிறோம்.

அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் பாலிடிக்ஸ் என்றாகி விட்டது இந்த தேசத்தில். கொஞ்சம் உள் நோக்கி பார்த்தால், எல்லாவற்றுக்கும் நாமே காரணமாகி இருப்போம். அது தவறு.. இது தவறு... எனப் பேசிப் பேசியே நமக்குள் இருக்கும் தவறுகளை சரி செய்ய தவறி விடுகிறோம். எவ்வளவு திட்டமிடல்களோடு இருந்தாலும், அவனையறியாமல் அந்த நாள்களை இந்த சமூகமும், அரசியலும் மாற்றி எழுதி விடுகின்றன. உன்னை சரி செய்து கொள்.

உலகம் சரியாகி விடும் என்பதுதான் இந்த கதையின் நீதி.செந்தில், யோகி பாபு இருவரும் அரசியல்வாதிகள். அத்வைத் ஜெய் மஸ்தான், இமயவரம்பன் இருவரும் பள்ளி மாணவர்கள்... இவர்களைச் சுற்றிதான் கதை நகரும். பருத்தி வீரன் சரவணன் உள்ளிட்ட பலருக்கு இந்தப் படத்தில் தனித்துவமான இடங்கள் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com