உள்ளங்கை உணர்ந்த கண்ணீர் !

ஒவ்வோர் அரசுத் துறைக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது.
உள்ளங்கை உணர்ந்த கண்ணீர் !

ஒவ்வோர் அரசுத் துறைக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. கல்வித் துறையின் நோக்கம் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கல்வி வழங்குவது; சுகாதாரத் துறையின் நோக்கம், தரமான மருத்துவ வசதிகளை அனைவருக்கும் வழங்குவது; வனத் துறையின் நோக்கம் வனங்களைப் பாதுகாப்பது. இப்படி டாஸ்மாக் என்ற அரசுத் துறையின் நோக்கம் என்ன... ? தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குடிகாரரை உருவாக்குவதா? நான் ஒருவன் குடிப்பதால் என் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்து விடும் என்பதெல்லாம் ஓவர் என்பது பல குடிகாரர்களின் எண்ணம். தன் போதையும் குடியும் எப்போதும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே இவர்கள் கருதுக் கொள்கிறார்கள். ஆனால் போதை, இவர்களை மயக்கி, வீழ்த்தி சாத்தானின் சாலைக்கு இழுத்து வந்து விடுகிறது. அதன் பின் அந்த குடும்பம் என்ன ஆகிறது...?'' கேள்விகளால் நிறைத்து கொண்டே இருக்கிறார் இயக்குநர் சரவண சக்தி. ஒரு புறம் நடிப்பு என்றாலும், தன் கனவான இயக்குநர் இடத்தை விடாது துரத்திக் கொண்டிருப்பவர். "நாயகன்', "பில்லா பாண்டி', "குலசாமி' படங்களுக்குப் பின் இப்போது "கிளாஸ்மேட்ஸ்' படத்தின் மூலம் வருகிறார்.

குடி குடியை கெடுக்கும்... இதுதான் கதையின் உள்ளடக்கமா...

சாராயம்தான் போதை என்று பல பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது தவறு... கடவுள் மனிதனின் ரத்தத்திலேயே கொஞ்சம் சாராயத்தைக் கலந்துவிட்டு இருக்கான். பணம், காதல், புகழ், படைப்பு, அதிகாரம், ஆன்மிகம் என ஒவ்வொன்றும் போதைதான். போதையை மாற்றிப் போட்டால், பாதையே மாறிப்போகும். உன் போதையை சாராயத்துல இல்லை... நல்ல விஷயத்துல போடு. இதுதான் இந்தப் படத்தின் லைன்.மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு விஷயத்திற்கு அடிமையாக இருப்பார்கள். அப்படி போதைக்கு அடிமையான கதாபாத்திரங்களின் வாழ்க்கை தான் இந்த படத்தின் திரைக்கதை. மனிதன் அவன் நினைப்பதை காட்டிலும் அதிக ஒழுக்கமுடையவன்., ஆனால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு ஒழுக்கங் கெட்டவன்' என்ற"சிக்மண்ட் ப்ராய்ட்' வாசகம் தான் படம். ராமநாதபுரம் மாவட்டத்தை களமாக கொண்டு கதை பயணமாகும். சில பல குடும்பங்கள், அங்கே நிகழும் குடி... அதற்கு பின்னான சம்பவங்கள் இதுதான் களம்.

எப்படி இருக்கும் படத்தின் திரை பாணி வடிவம்....

இந்தப் படத்துக்காக ஒரு காட்சி, ஒரு வசனத்தைக்கூட எங்கேயோ யாருடனோ விவாதிக்கவில்லை. . எல்லாமே எங்கேயோ நடந்த சம்பவம், யாரோ பேசின வார்த்தைகள், நம் உள்ளங்கை உணர்ந்த கண்ணீர், கண் கூடாக பார்த்த அம்சங்கள்...இது உண்மைக்கு நெருக்கமெல்லாம் இல்லை... இது உண்மையேதான். "ஒரு சினிமா, இரண்டரை மணி நேரம்தான். ஆனா, ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் 24 மணி நேரம். "வாழ்க்கைதான் நாம யோசிக்கவே முடியாத சினிமா என்பது டிஸிகாவின் கோட். இது எவ்வளவு உண்மை. நாம் அனுதினமும் கவனிக்காமல் கடந்து போகிற ஒவ்வோர் எளிய மனிதனின் வாழ்க்கைதான் இது. கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தப் படம். . எங்கோ கோடி பேரில் ஒருவனுக்கு நடக்கிற கதை இல்லை. இது எல்லோருக்குமானது. உங்களை விட, என்னை விட எல்லோரும் சந்திக்கப் போகிற பிரச்னை. இந்தக் கோரத்தின் பிடியில் யாரும் சிக்கிக் கொள்ளலாம்... அதற்கான விழிப்புணர்வு இது.

விமர்சிக்கிற விதமாக்கத்தான் இந்த மாதிரியான கதைகளை சொல்ல முடியும்....

இல்லாமல் எப்படி? கண்டிப்பாக விமர்சனம் இருக்கிறது. "இரண்டு படி லட்சியம். ஒரு படி நிச்சயம்' என அண்ணா சொன்னார். அவர் சொன்னது அரிசிக்கு. ஆனால் இன்றைக்கு, "வீட்டுக்கு இரண்டு குடிகாரர் லட்சியம்; ஒருவர் நிச்சயம்' எனக் கோட்பாடு வகுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் மிகக் கடுமையாக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊர்களில் கூட விடாப்பிடியாக மதுக்கடைகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். மதுரை பக்கம் வைகை ஆற்றின் தரைப் பாலத்துக்கு போனால், ஆற்றுத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவர... எங்கும் குளுமையும் பசுமையும் நிறைந்திருக்கின்றன. சுற்றியுள்ள விவசாயக் கிராமங்களுக்கு இந்த இடம்தான் ஒன்று கூடும் இடம். மாலை நேரமாகிவிட்டால் ஆற்றுப்பாலம் எங்கும் கூட்டம் மொய்க்கும். மொத்தம் மூன்று டாஸ்மாக் கடைகள். முழுக்க முழுக்க விவசாயிகளும் விவசாயக் கூலித் தொழிலாளர்களும் நிறைந்த பகுதி என்பதால், மூன்று கடைகளிலும் கூட்டம் கும்மும். ஆற்றில் தண்ணீர் வந்தாலும் வராவிட்டாலும் டாஸ்மாக் தண்ணீருக்கு மட்டும் எந்தத் தடையும் இல்லை. ஆற்றில் தண்ணீர் வரவில்லை என்றால், குடிகாரர்களுக்கு அதுதான் திறந்தவெளி பார். ஆற்று மணலில் அமர்ந்து ஏகாந்தமாகக் குடிப்பார்கள். இப்படியான நிலைக்கு யார் காரணம். இது சொல்லாமல் சினிமா ஒதுங்குவது சரியாக இருக்குமா....

நடிகர்களின் பங்களிப்பு எப்படி கை வந்து சேர்ந்திருக்கிறது...

அங்கயர்கண்ணன்... புதுமுகம். சினிமா வேட்கை கொண்ட தம்பி. அவர்தான் முக்கிய இடத்தில் இங்கே இருப்பார்.

பெரும் சினிமா தாகம் உண்டு. அவர் பொருந்தி வந்து நடித்திருக்கிறார். அன்பின் பிரிவில் தவித்து, குடியின் கோரத்தில் சிக்கி கொண்டு திணறும் இடங்களில் அவ்வளவு அற்புதமாக பொருந்தியிருக்கிறார். பிரணா, மயில்சாமி, சாம்ஸ், அருள்தாஸ் இப்படி பல முகங்கள். எல்லாமே கதைக்கு பொருத்தமான முகங்கள்.நானும் சிறு இடத்தில் வருகிறேன். ரொம்பவே நம்பிக்கை கொண்டு உழைத்திருக்கிறோம். ஒத்துழைப்பு தாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com