உலகப் போட்டிகளில் வெல்வதே இலக்கு

அடுத்தடுத்து தொடர் பயிற்சிகளின் மூலம் உலகப் போட்டிகளில் வெல்வதே இலக்கு என்றனர் கேலோ இந்தியா போட்டிகளில் மல்லர் கம்பத்தில் வெள்ளி வென்ற தமிழக அணியின் வீரர்கள். 
உலகப் போட்டிகளில் வெல்வதே இலக்கு

அடுத்தடுத்து தொடர் பயிற்சிகளின் மூலம் உலகப் போட்டிகளில் வெல்வதே இலக்கு என்றனர் கேலோ இந்தியா போட்டிகளில் மல்லர் கம்பத்தில் வெள்ளி வென்ற தமிழக அணியின் வீரர்கள்.

மனதை ஒருமுகப்படுத்தும் "மல்லர் கம்பம் சோழர்கள் காலத்திலேயே தமிழகத்தில் செழித்து விளங்கியுள்ளது. காஞ்சியை ஆண்ட மாமல்லன் நரசிம்மப் பல்லவன் இந்தக் கலையை செழிக்கச் செய்தான் என கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன.
தற்போதும் கிராமக் கோயில் திருவிழாக்களில் விளையாடப்படும் "வழுக்கு மரம் விளையாட்டை இதற்கு முன்னோடியாகக் கருதலாம். தற்போது, நட்டு வைக்கப்பட்ட கம்பத்தில் உடலைக் கொண்டு பல்வேறு ஆசனங்களை செய்வது "மல்லர் கம்பம் எனப்படுகிறது. இதனை "உடல்வித்தை விளையாட்டு என்கின்றனர்.
18 வயதுக்கு உள்பட்டோருக்கான 6ஆவது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மல்லர் கம்பம், களரிபயிற்று போட்டிகள் கடந்த 21 ஆம் தேதி முதல் தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்தப் போட்டியில்தான் தமிழகத்தின் ஆர். தியோதத், ஆர். அமிர்தீஷ்வர், பாலாஜி, எஸ். விஷ்ணுபிரியன், பி. சுதேஜாஸ் ரெட்டி, கே.வி. ரோஹித் சாய் ராம் ஆகிய வீரர்களும், கே. பூமிகா, எஸ். சஞ்ஜனா, இ. பிரேமா, வி. மதிவதனி, வி. சங்கீதா, எம். மேகனா ஆகிய வீராங்கனைகளையும் கொண்ட தமிழக அணி குழு பிரிவில் முதன்முறையாக வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளது.
தமிழக அணியில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றிய ஆர். தியோதத் (11), எஸ். சஞ்சனா (14), தனிநபர் பிரிவில் வெள்ளி வென்ற கே. பூமிகா (9), தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்ற கே.வி. ரோஹித் சாய்ராம் (16) உள்ளிட்டோர் கூறியதாவது:
""ஏற்கெனவே 4 முறை தங்கம் வென்ற மகாராஷ்டிர அணியிடம் வெறும் 2.10 புள்ளிகளில் மட்டுமே வெற்றிவாய்ப்பை இழந்த நிலையில், கடந்தாண்டு தங்கம் வென்ற மத்தியப் பிரதேசத்தை மூன்றாமிடத்துக்குத் தள்ளிவிட்டோம். இதுவரை நடந்த கேலோ இந்தியா மல்லர் கம்பம் போட்டிகளில் குழுப் பிரிவில் பெற்ற அதிகபட்ச பதக்கம் இதுவாகும்.
சிறுவயது முதலே ஒரு நாளைக்கு 4 மணி நேரம் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதின் விளைவாக தற்போது பதக்கங்களை வெல்ல முடிந்திருக்கிறது. இதற்கு எங்களுக்குப் பயிற்சியளித்த ராமச்சந்திரன், சங்கீதா உள்ளிட்ட பயிற்சியாளர்களும், பள்ளி நிர்வாகங்களுமே காரணம். உடலையும், மனதையும் ஒருநிலைப்படுத்தி, செம்மையாக்க உதவும் மல்லர் கம்பம் விளையாட்டால் எங்களது கல்வித்திறனும் நன்றாக உள்ளது.
சிறிய புள்ளிகள் எண்ணிக்கையில் தங்க பதக்கத்தை தவறவிட்டிருந்தாலும், தமிழ்நாட்டுக்காக பதக்கம் வென்றதற்காக பெருமையடைகிறோம். அடுத்தடுத்து தொடர் பயிற்சிகளின் மூலம் உலகப் போட்டிகளில் வெல்வதே இலக்கு என்றனர்.
இதுகுறித்து தேசிய பயிற்சியாளர்கள் எஸ். ராமச்சந்திரன் கூறியது:
""பண்டைய கால தமிழர்களின் வீர விளையாட்டான மல்லர் கம்பமானது, போட்டி ரீதியாக மஹாராஷ்டிர மாநிலத்தவர்களால் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தமிழகத்துக்கு மீண்டும் கொண்டுவந்தவர் விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசான்
உலகதுரை (85) ஆவார். அவரின் சீடர்களான நாங்கள் மல்லர் கம்ப விளையாட்டை பரப்பி வருகிறோம்.
இதுமட்டுமின்றி, சென்னை கொரட்டூரில் உள்ள துரோணா அகாதெமி மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மல்லர் கம்ப வீரர், வீராங்கனைகளை தயார்படுத்தி மாநில, தேசிய அளவில் பதக்கம் பெற பயிற்சியளித்து வருகிறோம். இந்த அகாதெமியில் தமிழக மல்லர் கம்ப அணியைச் சேர்ந்த பலர் பயிற்சி பெற்றுள்ளனர்.
2000ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ள நாங்கள், கேலோ இந்தியா போட்டிகளில் தனிநபர் பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை மட்டும் வென்றிருந்தோம்.
தற்போது முடிந்த போட்டிகளில் குழுப் போட்டிகளில் முதன்முறையாக வெள்ளி வென்றோம். தனிநபர் பிரிவுகளில் வெள்ளியும், வெண்கலமும் வென்றுள்ளோம்.
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மல்லர் கம்பத்தையும் இணைத்து நடத்த வேண்டும். திறமையான பயிற்சியாளர்கள் பற்றாக்குறையை களைய விளையாட்டுக்கல்லூரிகளில் மல்லர் கம்பம் பட்டயப் படிப்புகளைத் தொடங்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com