பெண்களுக்கு கல்வியும் வேலையும் தான் முக்கியம்

ஆண்களுக்கு நிகராக பெண்கள் சரிசமமாகத் திகழ, கல்வியும் வேலையும்தான் முக்கியம்'' என்கிறார்  காரைக்குடி அழகப்பா தமிழ் உயராய்வு மையத் தலைவர் முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை.
பெண்களுக்கு கல்வியும் வேலையும் தான் முக்கியம்

ஆண்களுக்கு நிகராக பெண்கள் சரிசமமாகத் திகழ, கல்வியும் வேலையும்தான் முக்கியம்'' என்கிறார்  காரைக்குடி அழகப்பா தமிழ் உயராய்வு மையத் தலைவர் முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை.

இவர் திருப்பாவை,  திருவெம்பாவை உரைகளை நிகழ்த்துவதில் வல்லமை படைத்தவர். இவருடைய நெறியாள்கையின் கீழ் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை 117 பேரும்,  முனைவர் பட்டத்தை  27 பேரும் பெற்றனர்.

பல்வேறு பொருண்மைகளில் தொல்காப்பியம்,  புறநானூறு, சங்க இலக்கியங்களில் ஆய்வு செய்துள்ளார்.  2009-ஆம் ஆண்டில்  அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் "செம்மொழி தமிழ் இளம் ஆராய்ச்சி அறிஞர்' எனும் விருதைப்  பெற்றவர். இதுதவிர, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகள் உள்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர்.

சாதனை படைத்த செந்தமிழ்ப்பாவையிடம் பேசியபோது:

'பத்தாம் வகுப்பு முடித்தவுடன் எனக்கு முன்பு படித்த மாணவர்களிடம் இருந்து 11-ஆம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகங்களை வாங்கி வைத்துவிட்டேன்.  

ஆனால் என்னுடைய தந்தை புலவர் சேதுராமனோ சிறப்புத் தமிழ்ப் பாடப் பிரிவில் சேர்த்துவிட்டார்.  அவர் பெரியகுளத்தில் 1969-இல் நான்காம் தமிழ்ச்
சங்கம்  நிறுவிய  பொன். பாண்டிதுரைத் தேவரின் பெயரால் மகளிர் 
கல்லூரியை சில ஆண்டுகள் நிறுவி நடத்தியவர். மீண்டும் கல்லூரி தொடங்க வேண்டும் என்பதற்காக, தனித்  தமிழ் படிக்க வைக்க விரும்பினார்.   

எங்கள் வீட்டில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட நூலகம் இருந்தது.  பத்தாம் வகுப்பு முடிப்பதற்குள்ளேயே கல்கியின் "பொன்னியின் 
செல்வன்',  "சிவகாமியின் சபதம்',  சாண்டில்யனின் அனைத்துப் புதினங்கள், வீரபாண்டியன் மனைவி போன்ற தமிழில் வெளிவந்த அனைத்து நூல்களையும் படித்துவிட்டேன். 

போடி அருகேயுள்ள  அம்மாபட்டி எனும் குக்கிராமம்தான் எங்களது ஊர். இங்கு நூலகம் இல்லை. மேல்நிலைக் கல்வி பயின்ற சில்லமரத்துப்பட்டி என்னும் ஊரில் உள்ள நூலகத்துக்கு என்னையும் என்னுடைய சகோதரியையும் அழைத்துச் சென்று உறுப்பினராக்கி விட்டார் எனது தந்தை.  

அப்போது ஆண்டுக்கொருமுறை நூலகங்களில் கழிக்கப்பட்ட நூல்கள் விற்பனை செய்வர்.  என்னுடைய தந்தை  ஒவ்வொரு நூலகத்திலிருந்தும் சாக்கு மூட்டையில் அந்தப் புத்தகங்களை வாங்கி வருவார். அந்த நூல்களில் கடைசி சில பக்கங்கள் இருக்காது. கதை முடிவு தெரியாமல் அப்பாவிடம் அழுது அதற்காகப் புதுப் புத்தகங்கள் வாங்கிய நிகழ்வுகளும் உண்டு.

நூலகத்துக்குச் சென்றால் நூலகரோ, "இங்குள்ள புத்தகத்தை எல்லாம் நீயும் உங்க அப்பாவும் படித்துவிட்டீர்கள். இனிமே நீயோ உங்க அப்பாவோ புத்தகம் எழுதினால்தான் உண்டு' என்பார். தூய தமிழில்தான் எப்போதும் பேசவேண்டும் என்பார் எனது தந்தை.

1970-ஆம் ஆண்டுகளில் எங்கள் வீட்டில் எனது தந்தை வாங்கும் இதழ்களைப் படிக்க,  மூத்த சகோதரி எழில் ராதாவுக்கும்,  எனக்கும் போட்டியே நடைபெறும்.
கல்லூரிப் படிப்பு காரைக்குடி இராமசாமித் தமிழ்க் கல்லூரியில் தொடங்கியது. இளங்கலைப் படிப்பில் என் வகுப்புத் தோழர்கள் எனக்கு வைத்த பெயர்  "புத்தகப் புழு'. இது 20 ஆண்டுகளுக்குப் பின்னர், முன்னாள் மாணவர்கள் சந்திப்பின்போது தெரியவந்தது.

தலைமைப் பண்பு, தைரியம்  ஆகிய இரண்டும் என்னுடைய இயல்பாகும்.  ஏழாம் வகுப்புப் படிக்கும்போது,  என்னுடைய வகுப்பாசிரியராக இருந்த சவிதா,  அறிவியல் பாடத்தை நன்றாக நடத்துவார். அவருக்கு  அம்மை போட்டு ஒருவாரமாக வரவில்லை. நான்  வகுப்பில் பைகளை வைத்துவிட்டு என்னுடைய வகுப்பில் உள்ள 8 மாணவ, மாணவிகளை அழைத்து கொண்டு, போடி நாயக்கனூருக்குச் சென்று ஆசிரியை சவிதாவைப் பார்த்துவந்தோம்.

பழங்கள், இளநீர் வாங்கிக் கொண்டு ஆசிரியையின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து சென்றபோது,  அவருக்கு ஒரே ஆச்சர்யம்.  மதிய உணவு அளித்து அனுப்பி வைத்தார். பள்ளிக்கு மீண்டும் வந்தவுடன் தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.  அங்கிருந்த ஆசிரியர்கள் என்னைக் கைகாட்டி,  "சார் இந்தப் பொண்ணுதான் தலைமை தாங்கிக் கூட்டிப் போயிருக்கு'  என்றனர்.   தலைமை ஆசிரியரோ, சில அறிவுரைகளைக் கூறி அனுப்பி வைத்தார்.  அதன்பின்னர்,  "ஆசிரியையைப் பார்க்கப் போகிறவர்கள் போகலாம்'  என்று அனைத்து மாணவர்களுக்கும் விடுப்பு வழங்கப்பட்டது.

எனது நெறியாள்கையின்கீழ் முனைவர் பட்டம் 27 பேரில் 20 பேர் பெண்கள். இவர்களில் பலர்  கணவனால் கைவிடப்பட்டவர்கள், குழந்தையுடன் விதவையாக உள்ளவர்கள், இரண்டு குழந்தைகளின் தாய் போன்றவர்கள்தான்.

பெண்கள் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கே இதற்கு காரணம்.

"கல்வி இல்லாப் பெண்கள் களர் நிலம். அங்கு புல் விளைந்திடலாம். நல்ல புதல்வர்கள் விளைவதில்லை' என்பார் பாரதிதாசன். எனவேதான் பெண்களாகத் தேடிச் சேர்த்துக் கொண்டேன்.

தமிழர்கள் பண்பாட்டை உலகினர் அறியும் வகையில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் பண்பாட்டு அருங்காட்சியகம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளேன். அதில் தமிழர் வரலாறு முதல் தமிழர்தம் புழங்குபொருள்கள் தொடங்கி அனைத்தும் சேகரித்துக் காட்சிப்படுத்தப் பெற்றுள்ளது. இதை சிங்கப்பூர், மலேஷியா, ஜெர்மனி, இலங்கை போன்ற பல நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பணிகள் வருகை தந்து ரசித்துள்ளனர்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com