அக்கா..!

ஞாயிறுக்கிழமையைத் தவிர,  மற்ற நாள்களில்  மாலை 5 மணி முதல் 6 மணி வரை "இல்லம் தேடி கல்வி'  இயக்கத்தின் வகுப்புகளை இரண்டு ஆண்டுகளாகக் கற்றுத் தருகிறார் வெள்ளரிப்பட்டியைச் சேர்ந்த ஆசிரியை.
அக்கா..!


ஞாயிறுக்கிழமையைத் தவிர,  மற்ற நாள்களில்  மாலை 5 மணி முதல் 6 மணி வரை "இல்லம் தேடி கல்வி'  இயக்கத்தின் வகுப்புகளை இரண்டு ஆண்டுகளாகக் கற்றுத் தருகிறார் வெள்ளரிப்பட்டியைச் சேர்ந்த (மதுரை - வேலூர் வழித்திடம் ஆசிரியை தஸ்லிமா நஸ்ரின்.  
இருபது  தொடக்கப் பள்ளி மாணவ,  மாணவியருக்கு பாடங்களைக் கற்றுத் தரும் அவருடைய உயரம் மூன்றே மூன்று அடி மட்டும்தான்.  மாணவர்களைவிட உயரத்தில் குறைவாக இருந்தாலும் அவர்கள் அழைப்பது "தஸ்லிம் அக்கா' என்றுதான்.

அவரிடம் பேசியபோது:

""குடும்பத்தில் நான்தான்  மூத்தப் பிள்ளை.  குள்ளமாகப்  பிறந்ததால், பெற்றோர் நரக வேதனையை அனுபவித்தனர். ஆனால் வருத்தத்தை வெளியே காட்டாமல் என்னை வளர்த்தனர். 
சாதாரணக் குடும்பம்தான்.  அப்பாவுக்கு நூல்களை வாங்கி,  பள்ளி மாணவ, மாணவிகளிடம் விற்கும் வேலை.   அம்மா இல்லத்தரசி. எனக்குப் பிறகு ஒரு தங்கை,  ஒரு தம்பி  உடல் குறையின்றி பிறந்தனர்.
நடுநிலைப் பள்ளி வரை அம்மாதான் உள்ளூர் பள்ளிக்கு என்னை இடுப்பில் வைத்து  தூக்கிக் கொண்டு வருவார்.  பள்ளி முடியும் நேரத்தில்,   உயர்நிலைக் கல்வியை மதுரையில் தனியார் பள்ளியில்,  விடுதியில் தங்கிப் படித்தேன்.   பின்னர் கல்லூரிக்கு, பேருந்தில் சென்று வந்து படித்தேன். 
பேருந்தின் படியில் தினமும் அம்மா ஏற்றிவிடுவார்கள். கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்க  கல்லூரி மாணவிகள் உதவுவார்கள்.   குறையாக நினைத்ததில்லை.  என்னை யாரும் ஒதுக்கியதும் இல்லை. ஆனால்,  என்னை முதல் தடவை பார்ப்பவர்கள் கொஞ்சம் அதிர்ந்து போவார்கள். போகப்போக அது எனக்குப் பழகிவிட்டது.   கேலி,  கிண்டல்களை நான் பொருட்படுத்தவில்லை.  அவர்களில் சிலர் தோழிகளாக மாறியிருக்கிறார்கள்.
மாணவர்கள் மத்தியில் அப்பா சுவாரஸ்யமாகப் பேசுவார். நான் படித்த பள்ளிக்கு நூல்கள் விற்பனைக்காக அப்பா வந்தபோது, மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதை கேட்டு நானும் ரசித்திருக்கிறேன். பேச்சுக்கு நடுவில் கதைகளையும், விடுகதைகளையும் சொல்வார்.  கேள்வி கேட்பார். மாணவர்கள் உற்சாகத்துடன் அவர் சொல்வதை காது கொடுத்து ஆர்வத்துடன் கேட்பார்கள். 
எனக்கு வயது இருபத்து நான்கு என்றாலும்,   15 வயதானவர்கள் தூக்கும் பாரத்தைக் கூட என்னால் தூக்க முடியாது.  அதனால் சாதாரண கடைகளில் கூட வேலை தரவில்லை. வீட்டில் பொருளாதாரச் சிக்கலை ஓரளவுக்கு தீர்க்க கடையில் வேலைக்குப் போக நான்  முயற்சித்தாலும் வேலை கிடைக்கவில்லை.
கரோனா காலத்தில் பள்ளிகள் அடைக்கப்பட்டதால்,   மாணவர்களின் கல்விக்காக "இல்லம் தேடி கல்வி" இயக்கத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியது. இதற்கு விண்ணப்பித்தபோது,  தகுதித் தேர்வை எழுதி தேர்வானேன்.  
அடுத்தது எங்கே வகுப்பை நடத்துவது  என்பது கேள்விக்குறி எழுந்தது.  எங்கள் தெருவில் இருக்கும் முருகன் கோயில் பொறுப்பாளர்களிடம்  அனுமதி கேட்டு,  கோயில் மண்டபத்தில் வகுப்புகளை நடத்தினேன். 
கடந்த மாதம் வரை கோயிலை ஒட்டியுள்ள மண்டபத்தில்தான் வகுப்புகள் நடைபெற்றன.  கிராமத்தின் நடுவில் செல்லும் சாலையைக் கடந்து கோயில் மண்டபத்துக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டேன்.  எனது பாதுகாப்புக்காகவும், மாணவர்களின் பாதுகாப்புக்காகவும் என் வீட்டிலேயே வகுப்பை நடத்திக் கொள்ள கல்வித் துறையும் அனுமதித்தது.
இரண்டு ஆண்டுகளில் ஒருநாள் கூட நான் விடுப்பு எடுத்தது இல்லை.  மூன்று பருவங்கள் என்பதால்,   ஆண்டுக்கு மூன்று புத்தகங்கள்.  அதில் உள்ள பாடங்கள் குறித்து அப்பா மாதிரி நானும் மாணவ,  மாணவியருடன்  உற்சாகமாய் பேசுவேன். இதற்காக, பாடங்களுக்குப் பொருத்தமாக தினம் ஒரு கதை, விடுகதை, பாட்டு, விளையாட்டு என்று  யோசித்து தயார் செய்துகொண்டு வருவேன்.  
மாதம் ஆயிரம் சம்பளமாகக் கிடைக்கிறது என்றாலும், மாற்றுத்திறனாளிகளாலும்  திறமைகளைச் சிறிதளவாவது வெளிக்காட்ட முடியும் என்கிற தன்னம்பிக்கையை ஊட்டுவதற்காகவும் இந்தப் பணியில் தொடர்கிறேன். 
சிறப்பாகச் செயல்பட்டவராக மாநில அளவில்  என்னைத் தேர்ந்தெடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினும் விருது வழங்கியுள்ளார். 
என்னை வளர்த்த பெற்றோரை, இறுதிவரை கவனித்துகொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை.  எனது அப்பா அண்மையில் விபத்தில் சிக்கியதால் முன்பு போல் பயணிக்க முடியவில்லை.  அரசு வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி,  டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாராகிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com