வாழ்க்கையின் தத்துவமே கோலம்!

சென்னையில் வசிக்கும் நெல்லைவாசி காயத்ரி சங்கர்நாராயணன்,   மார்கழி மாதம் முழுவதும் தினம் ஒரு பாசுரத்துக்கு கோலம் வரைந்து அசத்தியிருந்தார்.
வாழ்க்கையின் தத்துவமே கோலம்!


சென்னையில் வசிக்கும் நெல்லைவாசி காயத்ரி சங்கர்நாராயணன், மார்கழி மாதம் முழுவதும் தினம் ஒரு பாசுரத்துக்கு கோலம் வரைந்து அசத்தியிருந்தார்.

இதுகுறித்து அவரிடம் பேசியபோது:

'திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கோட்டையில் பராம்பரியமிக்க கூட்டுக் குடும்பத்தில் பிறந்தேன். ஐந்தாம் வயதிலேயே கோலம் போட ஆரம்பித்தேன். நான்கு வீடுகளாகச் சேர்த்து ஒரே கோலமாக மார்கழி மாதத்தில் என் குடும்பத்தாருடன் இணைந்து போடுவோம்.

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்புவரை படித்து, பின்னர் திருவனந்தபுரத்தில் ஸ்வாதித்திருநால் கல்லூரியில் இசைத் துறையில் 4 ஆண்டு டிப்ளமோ படித்தேன்.

இசையில் முதுகலைப் பட்டம் பெற்று, இசையோடும் கோலத்தோடும் பயணித்தேன்.

எனது குருவான முனைவர் எஸ்.ஏ.கே.துர்காவின் ஊக்குவிப்பால், ஆராய்ச்சிப் படிப்பில் "ஆரம்பக் கல்வியில் கோலத்தையும் இசையையும் இணைத்து கற்பித்தல்' என்ற தலைப்பைத் தேர்வு செய்தேன். நான் கற்றதை 2008-இல் ஆட்டிஸம் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு ஒரு சிகிச்சையாக கற்றுக் கொடுத்து அறிமுகப்படுத்தினேன்.

2017-19-இல் கலாசார அமைச்சகத்தின் "மூத்த பெல்லோஷிப் விருது' பெற்றேன். 25 ஆண்டுகளாக இசை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறேன். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, மெருகேற்றிக் கொண்டு இணையவழியில் வெளிநாட்டு மாணவர்களுக்கு இணையவழியில் பாடல்களைக் கற்றுக் கொடுக்கிறேன்.

கோடை விடுமுறையில், கோலம் பயிலரங்கு வகுப்புகளை வீட்டிலும், இணையவழியிலும் நடத்துகிறேன். கோலத்தின் பழைமை மாறாமல் புதுமையை புகுத்தி, "கோலம் மேலும் வளர வேண்டும்' என தோன்றிய எண்ணத்தை, தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

மார்கழி என்றாலே நினைவிற்கு வருவது இறைவழிபாடுதான். ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்கள், கர்நாடக இசைக்கச்சேரி என கடந்த சில ஆண்டு
களாக அன்றைய தினத்தின் திருப்பாவை பாசுரத்தின் பொருளை வீட்டு வாசலில் கோலமாக இடுகிறேன்.

கோலத்தைப் பற்றிய எனது வாழ்க்கைத் தத்துவம் - கோலம் என்பது "முகம் பார்க்கும் கண்ணாடி' போன்றது. மனிதனின் உள்மனதின் பிரதிபலிப்பே கோலம். மனித வளத்தின் தத்துவத்தை எடுத்துரைக்கிறது. கோலம் சில மணி நேரங்களில் மறைகிறது . மறுநாள் , மீண்டும் ஒரு புதுகோலம் பிறக்கிறது. ஒரு மனிதன் புவியில் பிறந்து வாழ்வது போல், கோலம் மண்ணிலே பிறந்து மண்ணிலே மறைகிறது . புவியை மாசுபடுத்தினாலும், பொறுத்துகொண்டு நீர், காய்கனிகள், தானியங்களை தருவதற்கு நன்றி தெரிவிக்கும் விதமே கோலமாகும்.

கோலம் என்பது ஒரு "வரைகலைப் பிரார்த்தனை'. அறுபத்து நான்கு கலைகளில் ஒன்றான கோலக்கலை, வீட்டு வாசலின் அடையாளம். கோலம் என்ற சொல் அழகு, ஒப்பனை, வரிசை... என பல பொருள்களைக் கொண்டுள்ளன.

வேதகாலம் தொட்டே கோலம் போடும் வழக்கம் இருந்துள்ளது. யாக சாலைப் பூஜையின்போது, ஹோம குண்டத்தை கோலத்தின் மீது வைத்து, மஞ்சள், குங்குமம், பூவினால் அலங்கரித்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன.

அபிஷேகம், ஆராதனை , பூஜை போன்றவற்றை இசைப் பாடல்களாகப் பாடி கடவுளிடம் பிரார்த்தனையை செலுத்துவது போல், கோலம் மூலமாக நம் பிரார்த்தனையை செலுத்துவதும் ஒரு வழக்கம்தான். வாசல் தெளித்து அரிசி மாவால் கோலமிடுவது பூச்சிகளுக்கு உணவாகிறது. செம்மண் இடுவது துஷ்ட சக்திகள் நம்மை அண்டாமல் காக்கிறது. வாசல் அழகாக, இருக்கையில் நம் மனமும் அழகாக மாறி, மன சாந்தி அடைகிறது. எந்த ஒரு விஷயத்தையும், கோலம் முலமாக எளிதாகத் தெரிவிக்க முடியும்.

முகம் பார்க்கும் கண்ணாடியாக விளங்கும் கோலத்தில், "புள்ளி - ஒரு சவால், கோடு- ஒரு தீர்வு' என்பது நிதர்சனம். கோலத்தை புள்ளி வைத்து, சவாலாக ஆரம்பித்து,கோடுகளால் இணைத்து தீர்வு காண்கிறோம். இதுவே நம் வாழ்க்கை தத்துவமாகவும் அமைகிறது. அரிசி மாவு, செம்மண் பொடிகளை மட்டுமே உபயோகித்தே கோலம் போடுவேன்.

அமெரிக்கத் தூதரகத்தின் 2020 - ஆம் ஆண்டு நன்றி தெரிவிக்கும் விழாவின் அழைப்பிதழை எனது கோலம் அலங்கரித்தது. பல கோலப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளேன்.

ஜப்பானில் ஒசாக்கா, நாரா, டோக்கியோ போன்ற நகரங்களில் மூன்று நாள்கள் அண்மையில் பயணித்து, கோல பயிலரங்குகள் நடத்திதேன். இந்த வகுப்பில் பங்கேற்ற ஜப்பானியர்கள் பலர், ஸ்ரீ தயானந்த சரஸ்வதியின் சீடர்கள். அவருடைய வழிமுறைகளை பின்பற்றி வேதாந்த வகுப்பில் பங்கேற்ற அவர்கள் விரைவில் கோலம் போட கற்றது வியக்க வைத்தது.

நான் எந்த ஊருக்கு சென்றாலும், தங்கியுள்ள வீட்டு வாசலில் கோலமிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இந்திய கலாசாரம், பண்பாட்டின் முக்கிய அம்சமாக விளங்கும் கோலக்கலையை உலகெங்கும் பரப்ப எனக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாக நான் கருதுகிறேன்.

தெய்விகமான கோலக்கலை குறித்து கல்வி நிலையங்களில் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com