கிரிக்கெட்டில் புதுப் புயல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ராஜ்கோட் மைதானத்தில் அறிமுகமாகி அதகளம் செய்தவர் சர்ஃபராஸ் கான்.
கிரிக்கெட்டில் புதுப் புயல்
Picasa

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ராஜ்கோட் மைதானத்தில் அறிமுகமாகி அதகளம் செய்தவர் சர்ஃபராஸ் கான். அறிமுகப் போட்டியில் களமிறங்கிய இவர், 48 பந்துகளில் அரை சதம் அடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். பின்னர், அதிரடியாக ஆடி வந்தவர் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி துரதிர்ஷ்டமாக வெளியேறினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியவர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். சிறப்பாக ஆடிய அவர் 72 பந்துகளில் 3 சிக்ஸ்சர்கள், 6 பவுண்டரி உட்பட 68 ரன்களைச் சேர்த்து புயலாக மாறி இங்கிலாந்து அணியினரைத் திணறச் செய்தார். 'அறிமுகப் போட்டியிலேயே இரு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் விளாசிய நான்காவது இந்திய வீரர்' என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் எடுக்க அசுர வேகத்தில் ஓடியபோது அது கை கூடும் என்று தெரிந்ததும், சர்ஃபராஸ் வெற்றியை ஆனந்தமாகக் களத்தில் கொண்டாடினார். 'யார் சாதனை புரிந்தாலும் அந்தச் சாதனை இந்திய அணிக்கு பெருமை சேர்க்கும்' என்கிற மனப்பாங்கு புதுமுக ஆட்டக்காரருக்கு முதல் ஆட்டத்திலேயே வந்திருப்பது ஆச்சரியம்தான்.

முதல் தர கிரிக்கெட் போட்டிகள் 45-இல் விளையாடி 69.85 புள்ளிகள் பேட்டிங் சராசரியுடன் இருக்கும் சர்ஃபராஸின் திறமையான ஆட்டத்தைக் கண்ட பிரபல ஐ.பி.எல். குழுக்கள் தங்கள் அணியில் சேர்க்க ஆர்வம் காட்டிவருகின்றன. அவர் 'கொல்கத்தா நைட் ரைடர்' அணியில் இணைவார் என்று யூகங்கள் கிளம்பியுள்ளன.

இவர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், வலிகள் பல அவரது வாழ்க்கை புத்தகத்தில் கருப்பு அத்தியாயங்களாக இருந்தன. இந்திய அணியில் இடம்பிடிக்க நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டிவந்தது. இவருடைய ஆரம்ப பயிற்சியாளர் அவரது தந்தை நௌஷத் கான், மும்பையில் பல இளைஞர்களை கிரிக்கெட்டில் ஆர்வம் வர காரணமாக இருப்பவர்.

தனது கடந்த காலம் குறித்து இருபத்து ஆறு வயதாகும் சர்ஃபராஸ் கூறியதாவது:

''நாங்கள் குடிசைவாழ் பகுதியில் வாழ்ந்தோம். காலைக் கடன்களைக் கழிக்க வரிசையில் நிற்க வேண்டும். அப்படி நிற்கும் போது எனக்குப் பின்னால் நிற்பவர்கள் என்னைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறுவார்கள். நான் எதிர்ப்பைக் காட்ட முடியாமல் மௌனமாக இருந்துவிடுவேன். இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் கனவு தள்ளித் தள்ளிப் போனது.

'பரவாயில்லை. ரயிலில் துணி விற்றுப் பிழைத்துக் கொள்ளலாம்' என்று தந்தையைத் தேற்றுவேன். அவரது சீடர்களில் ஒருவர் 7 ஆண்டுகள் எங்கள் வீட்டில் தங்கி வசித்து வந்தார். வசதி வாய்ப்புகள் வந்ததும்,தந்தைக்கு மரியாதை தரவில்லை.

'எனது திறமையினால்தான் பிரபலமானேன். உங்கள் பயிற்சியால் அல்ல; உங்களுக்குத் திறமை இருந்தால் உங்கள் மகனை கிரிக்கெட் வீரராக மாற்றிக் காட்டுங்கள்' என்று அப்பாவை விட்டுப் பிரிந்தார். இதைச் சவாலாக எடுத்துக் கொண்டு, எனக்கும் தம்பிக்கும் பயிற்சி அளிக்கத் தொடங்கினார் தந்தை. அண்மையில் முடிந்த டி20 உலகக் கோப்பையில் என் தம்பி முஷீர் கான் இந்திய அணிக்காக விளையாடியிருந்தார்.

கரோனா காலத்தில், விதிமுறைகளைக் கடைப்பிடித்து முழு மூச்சாக பயிற்சியில் ஈடுபட்டேன். சுமார் 1600 கி. மீ தூரம் மும்பையிலிருந்து அம்ரோஹா, மொராதாபாத், மீரட், கான்பூர், மதுரா, டெஹ்ராடன் போன்ற இடங்களுக்குப் பயணம் செய்து, கிரிக்கெட் பயிற்சி பெற்றேன்.

புகழ் பெற்ற முன்னணி ஆட்டக்காரர்களான புவனேஷ்வர் குமார், முகம்மத் ஷமி, குல்தீப் யாதவ், கவுதம் கம்பீர் போன்றவர்களைப் பட்டை தீட்டிய பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்று, கிரிக்கெட்டின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டேன். எல்லா வகை பந்து வீச்சுகளையும் எதிர்கொள்ளும் தைரியத்தை இந்தப் பயிற்சிகள் எனக்குத் வழங்கியுள்ளன. நான்கு ஆண்டுகால காத்திருப்பிற்குப் பிறகு இப்போது இந்திய அணியின் சார்பில் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது கனவும், எனது தந்தையின் கனவும் நனவாகியுள்ளது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com