மருத்துவ விஞ்ஞானியின் ராணுவ சாகசங்கள்

மருத்துவம் முதல் ராணுவம் வரை: செல்வமூர்த்தியின் பன்முக சாதனைகள்
மருத்துவ விஞ்ஞானியின் ராணுவ சாகசங்கள்

முப்படைகளின் மூளையான ராணுவ ஆராய்ச்சி- மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ.) 40 ஆண்டுகள் பணியாற்றியவர், பணி ஓய்வுக்குப் பின்னர் சத்திஸ்கர் அமிட்டி பல்கலைக்கழக வேந்தராகச் செயலாற்றி வருபவர் .. என்று பன்முகத்தன்மைகளுக்குச் சொந்தக்காரர் டபிள்யூ. செல்வமூர்த்தி. இவரது மருத்துவ ஆராய்ச்சியால், ராணுவப் படைகள் மட்டுமல்லாது, பொதுமக்களும் அதிக பயனடைந்துள்ளனர்.

அவருடன் ஒர் சந்திப்பு:

உங்களது இளமைக்காலம்...?

நான் பிறந்தது சிவகாசி. ஆனால், திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்பட்ட எட்டயபுரத்துக்கு அருகேயுள்ள கீழையீறால் கிராமம்தான் எனது சொந்த ஊர்.

பெற்றோர் விவசாயிகள். ஆறு பிள்ளைகளில் நான் மூத்த மகன். 2 தம்பிகள், 3 தங்கைகள். எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிப் படிப்பை அந்தக் கிராமத்தில்தான் முடித்தேன். எட்டயபுரத்தில் பத்தாம் வகுப்பை முடித்தேன்.

பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் இளம் அறிவியலில் விலங்கியலும், வேலூர் சி.எம்.சி.யில் மனித உடலில் பாடத்தில் முதுகலைப் பட்டமும், தில்லி பல்கலைக்

கழகத்தில் பி.எச்.டி. பட்டமும் முடித்தேன். பெங்களூரு விவேகானந்தா யோகா பயிற்சிக் கல்லூரியில் யோகா அறிவியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றேன். இதுதவிர, பாலாசோர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அமிட்டி பல்கலைக்கழகம், காருண்யா பல்கலைக்கழகங்கள் எனக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை அளித்துள்ளன.

பணியில் சேர்ந்தது எப்போது?

இருப்பத்து மூன்று வயதானபோது, 1973-ஆம் ஆண்டில் டி.ஆர்.டி.ஓ.வில் இளநிலை உதவி விஞ்ஞானியாகப் பணியில் சேர்ந்தேன். படிப்படியாக உயர்ந்து, டைரக்டர் ஜெனரலாகப் பணியாற்றி, 2013-இல் ஓய்வுபெற்றேன்.

பணிக்காலத்தில் செய்த சாதனைகள்?

எனது பணிக் காலத்தில் முப்படைகளின் போர்த்திறனை மேம்படுத்துவதற்கு பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, புதுமையான கருவிகள், தொழில்நுட்பங்கள், மருத்துவச் சிகிச்சை முறைகளைக் கண்டறிந்துள்ளேன். ராணுவ வீரர்களின் உடல்நலம், வாழ்க்கை அறிவியல் சார்ந்த பல்வேறு தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து, அவற்றை முப்படைகளில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறேன்.

அசாதாரணமான நிலப்பரப்பில் செயல்படும்போது பாதுகாப்புப்படைகளை ஆரோக்கியமாகவும், திறன் வாய்ந்ததாகவும் வைத்திருக்க பல்வேறு தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்திருக்கிறேன். இவற்றால் ராணுவவீரர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் பெரிதும் பயனடைந்துள்ளனர்.

பாதுகாப்புப் படைகளுக்கு பயன்பாட்டுக்குத் தேவையான உயிர்காக்கும் கருவிகள், வேதி, உயிரி, கதிரியக்க, அணுசார் தொழில்நுட்பங்கள், பயிற்சி, மேலாண்மை, தடுப்பு வழிமுறைகள், பாதுகாப்புக் கருவிகளுக்கான நானோதொழில்நுட்பம், யோகா, ராணுவ மனநல சிகிச்சையை வடிவமைத்திருக்கிறேன்.

மறக்க முடியாத கண்டுபிடிப்புகள் என்ன?

1990-ஆம் ஆண்டில் துருவ மனநலவியல் ஆராய்ச்சிக்காக எனது தலைமையில் அன்றைய ரஷிய நாட்டு விஞ்ஞானிகள், படைகள், இந்திய வீரர்கள், விஞ்ஞானிகள் என 43 பேர் வடதுருவத்துக்கு (ஆர்டிக்) சென்றோம். 70 நாள்களில் தங்கியிருந்தபோது, 35 நாள்கள் சூரிய ஒளியே இல்லை. ஆராய்ச்சியின் முடிவில், 500 மி.கி. கொண்ட வைட்டமின் சி மாத்திரைகளை உட்கொண்டு, யோகா பயிற்சியை மேற்கொண்டால் மிகவும் குளிர்ச்சியாக தட்பவெப்பத்தைத் தாங்கிக் கொள்ளலாம் என்பதைக் கண்டறிந்து அதற்கான வழிமுறைகளை வகுத்தோம்.

1962-ஆம் ஆண்டு சீனாவுடனான போரில் இந்தியா வெற்றி பெறமுடியாமல் போனதற்கு, உயரமான மலைப்பகுதிகளின் சுற்றுச்சூழலுக்கு தகவமைத்துகொண்டு போர்புரியும் நுட்பம் தெரியாததுதான். லடாக், சியாச்சின் போன்ற மிகவும் உயரமான பகுதிகளில் இந்திய வீரர்கள் பணியாற்ற நேரும்போது, அந்த சூழலுக்கு உடல் ஒத்துழைக்க வேண்டும்.

எனவே, தரையிலேயே மலைப் பகுதிக்கான சூழலை உருவாக்கி வீரர்களின் உடல்களைத் தகவமைக்கும் வழிமுறைகளை வகுத்து தந்துள்ளேன். அதற்கு "உடல் தகவமைப்பு பயிற்சி முறை' என்று பெயர். தரையில் இருக்கும்போது 30 கிலோ எடையை ஒருவரால் தூக்க முடியும் என்றால், அவரே மலைப்பகுதிக்குச் சென்றால் 10 கிலோ அளவில் தூக்க முடியும். செங்குத்தான, வளைவுள்ள, தட்டையான மலைகளுக்குத் தகுந்தது போல வீரர்களின் எடை தூக்கும் திறன்மாறுபடும்.

மலைப் பகுதிகளுக்குச் செல்லும்போது வீரர்களுக்கு மலைசார் பாதிப்புகள் வரும். தலைவலி ஏற்படும். தூக்கம் வராது. பசி எடுக்காது. வாந்தி வரும். இதற்கு தீர்வுகாண, துளசி, அஸ்வகந்தா போன்ற மூலிகைகளைச் சேர்த்து ஒருங்கிணைந்த மூலிகை வடிநீரை தயாரித்திருக்கிறேன்.

மலைக்குச் செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே யோகா பயிற்சியை அளித்தால், அவரது உடல்நிலை மலையின் தன்மைக்கு ஒத்துப்போகும். 2006-ஆம் ஆண்டு முதல் ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சியை கட்டாயமாக்கி இருக்கிறோம்.

உயரமான மலைப்பகுதியில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால், ராணுவ வீரர்களுக்கு நுரையீரலில் நீர்க்கோர்த்துக்கொள்ளும் . மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் பல்மனரி இடிமா என்ற நோயால் படைவீரர்கள் பாதிக்கப்படுவார்கள். இவற்றுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க தவறினால், அவர்கள் இறந்துபோகும் வாய்ப்பு அதிகம். இந்த சூழலில், பாதிக்கப்பட்ட படைவீரருக்கு ஆக்சிஜன் கொடுத்து, அவரை ஹெலிகாப்டர் வழியாக நிலப்பகுதிக்கு அழைத்து வந்துவிடுவோம். இதற்காக, தனித்தனி சிலிண்டரில் நைட்ரிக் ஆக்சைடு, ஆக்சிஜனை நிரப்பி, அதை நோயாளிக்கு அளிக்க வேண்டும். அதாவது, ஒரு மில்லியனில் 15 பகுதி நைட்ரிக் ஆக்ஸைடு, 50 சதவீதம் ஆக்சிஜன் அளிக்க வேண்டும். நைட்ரிக் ஆக்சைடு, பல்மனரி ஆர்டரீஸில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கும்.

ஆக்சிஜன் செலுத்துவதால், அவரது நுரையீரலில் ஆக்சிஜன் அளவு உயர்ந்து, நோய் குணமாகும். இந்த நோய்க்கு உலக அளவில் கண்டுபிடிக்க சிகிச்சை முறை இது. எனது இந்த கண்டுபிடிப்பை உலக நாடுகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. மலையேறுவோரும் இந்தச் சிகிச்சையை பயன்படுத்துகிறார்கள். 1998-இல் இந்த கண்டுபிடிப்பை "சர்க்குலேஷன்' என்ற இதழில் வெளியிட்டிருந்தேன்.

குளிர்ந்த மலைப்பகுதிக்கு படைவீரர்கள் செல்லும்போது ஏற்படும் கை, கால், காது, மூக்கு பகுதிகளில் உறைபனி காயத்தை குணப்படுத்த கற்றாழையில் களிம்பை கண்டுபிடித்தேன். களிம்பைத் தடவிக்கொண்டு சென்றால், உறைபனிக் காயம் ஏற்படாது. ஒருவேளை காயம் ஏற்பட்டாலும், களிம்பை தடவினால் குணமாகும்.

மலைப்பகுதியில் வீரர்களுக்கு ஆரம்பகட்டத்தில் தூக்கம் வராமல் இருப்பது நல்லதுதான் என்று கண்டறிந்தேன். மலையில் ஆழ்ந்து தூங்கிவிட்டால், நுரையீரலில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்துவிடும். அப்போது உடலில் உள்ள உணர்வி, நமது மூளைக்கு தகவலை அனுப்பி நம்மை எழுப்பிவிடும்.

விழித்துகொண்ட பிறகு ஆக்சிஜன் அளவு அதிகமாகும். மூச்சுத்திணறலைத் தவிர்க்க இயற்கையாக உடலில் மேற்கொள்ளப்படும் செயல்பாடு இது என்பதை ஆராய்ச்சியில் கண்டுபிடித்து, தூக்கம் வராதது பற்றி கவலைப்பட தேவையில்லை என்று அறிவித்தேன்.

எனவே, தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தெரிவித்தேன். இதன்பிறகு கிர்கிஸ்தான் நாட்டில் உயர்ந்தமலை மருத்துவ ஆராய்ச்சி மையத்தை அமைத்து தந்தேன்.

படைவீரர்களிடம் எதிர்பார்க்கும் திறன்களைக் கண்டறியும் தேர்வுமுறை, விமானியைத் தேர்வு செய்வதற்கான தேர்வுமுறைகளை வடிவமைத்தேன். நிலம், மலை, பாலைவனம் போன்ற வெவ்வேறு நிலப்பகுதிகளில் பணியாற்றும் வீரர்களுக்கு எவ்வளவு கலோரி உணவளிக்க வேண்டும் என்பதையும் ஆராய்ச்சி செய்து, ஊட்டச்சத்து அளவு விகிதங்களை முடிவுசெய்தேன்.

வேதி, அணு, கதிரியக்க, உயிரி ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் போர்களில் படைவீரர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள அணிய வேண்டிய ஆடைகளை வடிவமைத்தேன்.

போர்விமானங்களில் விமானிகளுக்கு சிலிண்டர்களில் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்தது. விமானத்தில் சிலிண்டர்களை எடுத்துச் சென்றால், ஆயுதங்களைக் குறைத்துகொள்ள நேரிடும். இதை மாற்றி, விமானிக் கூடத்திலேயே ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் முறையை கண்டுபிடித்தேன். காற்றில் 79 சதவீதம் நைட்ரஜன், 20.6 சதவீதம் ஆக்சிஜன் உள்ளன. எனவே, காற்றில் உள்ள நைட்ரஜன் அளவை குறைத்தால், ஆக்சிஜன் அளவு கூடிவிடும். அதை விமானிகள் சுவாசிக்கலாம். இதற்காக ஆக்சிஜன் உற்பத்திக் கருவியைத் தயாரித்தேன்.

உயர்ந்த மலைப்பகுதிகளில் மனித கழிவுப் பொருள்கள் தேங்கத் தொடங்கினால், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். அன்டார்டிகாவில் கழிவுப் பொருள்களில் சைக்ரோஃபிலிக் பாக்டீரியா இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இது கோடை, குளிர்கால வெப்பங்களைத் தாங்கிக் கொண்டு பிழைத்துகொள்ளும் தன்மையைக் கொண்டிருந்தது. எனவே, அந்த பாக்டீரியாவை ஆய்வுக்கூடத்துக்குக் கொண்டு வந்து, ஆய்வு செய்து, மனிதக்கழிவை அழிக்கும் உயிரிசிதைவுக்கருவியை(பயோ டைஜெஸ்டர்) கண்டுபிடித்தோம்.

இந்தக் கருவியானது மனிதக்கழிவைப் பயன்படு நீராகவும், சூழல் பாதிப்பில்லா வாயுவாகவும் மாற்றிவிடும். வாயுவை சமைக்க பயன்படுத்தினால், நீரை பாசனத்துக்குப் பயன்படுத்த முடியும். இந்த தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே நிர்வாகம் தனது ரயில்களில் பயன்படுத்திக்கொண்டது.''

யோகா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து...?

40 ஆண்டுகளுக்கும் மேலாக யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். 75 வயதானாலும் திடமாகவும், மகிழ்ச்சியாகவும், ஊக்கத்துடனும் இருப்பதற்கு யோகா தான் காரணம். பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்கு யோகா பயிற்சியை அளிக்க வேண்டும். இது குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும். உலக மக்கள் அனைவரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டால், மகிழ்ச்சியான உலகத்தைப் படைக்க முடியும்.

எந்தச் சூழ்நிலையிலும் உடல், மனபலத்தைக் குறையாமல் வைத்திருக்க யோகா உதவுகிறது. தற்போதைய போர்முறையில் வெற்றி பெற துடிக்கும் "செய் அல்லது செத்துமடி' என்ற மன எழுச்சி மிகவும் அத்தியாவசியம்.

பொதுமக்களுக்கு பயனடைய மேற்கொண்ட திட்டங்கள் எவை?

படைவீரர்களுக்குத் தயாரித்த உடனடி உணவுப் பொருள்களின்(ரெடி டூ ஈட்) தொழில்நுட்பங்களை வணிக நிறுவனங்களுக்கு வழங்கி, பொதுச்சந்தையில் கொண்டுவந்தோம்.

டி.ஆர்.டி.ஓ. உருவாக்கிய பல தொழில்நுட்பங்கள், கருவிகள், உணவுப்பொருள் தயாரிப்புமுறைகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கியிருக்கிறோம்.

கரோனா காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க, அனைத்து மருத்துவமனைகளிலும் பயன்படுத்திய ஆக்சிஜன் செறிவூட்டிகள் எனது கண்டுபிடிப்புதான்.

உங்கள் பார்வையில் அப்துல் கலாம்...?

"இக்னைடட் மைன்ட்ஸ்' என்ற ஆங்கில நூலில் அப்துல்கலாம் "எனது நண்பர்' என்று என்னை அழைத்துள்ளார். உயர்ந்த மலைப்பகுதியான சியாச்சின் மலைப் பகுதிக்கு அப்துல் கலாம் சென்றபோது, அவருடன் நானும் இருந்தேன். எனது மேலதிகாரியாக இருந்தாலும், நண்பரை போல நடத்துவார். அடிக்கடி கவிதைகளைச் சொல்லிக் கொண்டே இருப்பார். "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது' என்று தொடங்கும் அவ்வையாரின் பாடலை அடிக்கடி முணுமுணுப்பார். அந்தப் பாடலை 1000 முறையாவது நானும் அவரும் சேர்ந்து உச்சரித்திருப்போம்.

அப்துல்கலாம்தான் என்னை டி.ஆர், டி.ஓ,வின் ராணுவ உடலியல், சார் அறிவியல் மையம், ராணுவ மனநல ஆராய்ச்சி மைய இயக்குநராக நியமித்தார். பத்து ஆய்வுக் கூடங்களில் தலைமை கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றவும், டைரக்டர் ஜெனரலாக உயரவும் அப்துல்கலாம் உறுதுணையாக இருந்தார். அப்துல் கலாமின் உரையைத் தயார்செய்ய நான் துணையாக இருந்தேன்.

இதற்காக, குடியரசுத் தலைவர் மாளிகையில் எனக்காக தனி அறை கொடுத்து, என்னை ஆலோசகராக நியமித்திருந்தார். ஆன்மிகப் பயணங்களில் என்னை அழைத்து செல்வார். நிறைய நாள்கள் இரவெல்லாம் அமர்ந்து ஆலோசனை நடத்தி இருக்கிறோம். அவருடனான நட்பு என்றைக்கும் மனமகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தரக்கூடியது. இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய அறிவுச்செல்வம் கலாம். அவரோடு இருந்த நாள்கள் பொன் போன்றவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com