

விருந்தோம்பல் துறையைப் போல், நிகழ்ச்சி தொகுப்பாளர் பணியிலும் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
ஆனால், திறமைவாய்ந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் இப்போது கிடைப்பதில்லை. பயிற்சி கொடுக்க முறையான நிறுவனங்களும் இல்லை என்கின்றனர் அத்துறை வல்லுநர்கள்.
வாய்ப்புகளும், வருமானமும் அதிகம் உள்ள இந்தத் துறையில், திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகளே பெரும்பாலும் ஈடுபட்டு வருகின்றனர்.முழு நேரப் பணியாக அல்லாமல், பகுதி நேரத்தில் ஈடுபட்டு கூடுதல் வருவாயை ஈட்டி வருகின்றனர்.ஆனால், இவர்களில் பெரும்பாலானோரிடம் முழுத் திறன் இருப்பதில்லை. எந்தெந்த நிகழ்ச்சிக்கு எப்படிப் பேச வேண்டும். தெளிவான உச்சரிப்பு, மொழி வளம் என எந்தத் தகுதியும் இவர்களிடம் இருப்பதில்லை.
படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களும், இளம் பெண்களும் இந்தத் திறன்களை வளர்த்துக் கொண்டால் இத்துறையில் ஜொலிக்கலாம் என்கிறார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்றி வரும் என். நீலகண்டன்.
இப்பணிக்கு கல்வித் தகுதி என்று எதுவும் தேவையில்லை. தமிழோ, ஆங்கிலமோ சொற்களைச் சரியாக உச்சரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இந்த இரண்டு மொழி தொகுப்பாளர்களுக்கும், இப்போது சமமான வாய்ப்பு கிடைக்கின்றது.
நல்ல மொழி வளம், ஓரளவு பொது அறிவு, தற்போதைய நாட்டு நிகழ்வு குறித்து அறிவும் பெற்றிருக்க வேண்டியது அடிப்படை. இதுதவிர பணியாற்றவுள்ள நிகழ்ச்சி, அந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள சிறப்பு விருந்தினர்களைப் பற்றிய விவரங்களையும் அறிந்திருக்க வேண்டியதும் அவசியம்.
நடக்கின்ற நிகழ்ச்சியை வைத்தே வருகின்ற ரசிகர்களை எடை போட்டு, அவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் பேச வேண்டும். இந்தத் திறமைகளுடன், ஓரளவு நல்ல தோற்றம், குரல் வளம் உள்ளவர்களுக்கு இத்துறையில் வாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கின்றன.
ஆரம்பக் கட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வரைதான் கிடைக்கும் என்றபோதும், முழுத் திறனையும் வளர்த்துக் கொண்டபின் ஒரு நிகழ்ச்சியிலேயே ரூ. 30 ஆயிரத்துக்கும் மேல் சம்பாதிக்க முடியும் என்கிறார் நீலகண்டன்.
இதற்கான முறையான பயிற்சி எதுவும் இப்போது இல்லை. இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இதற்கான பயிற்சி நிறுவனங்கள் உருவாக வேண்டும் என்கின்றனர் இத்துறை வல்லுநர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.