மொழி அழிந்தால் இனமும் அழிந்து விடும்: தமிழ்ப் பேராசிரியை மு.குருவம்மாள்

ஒரு மொழி அழிந்தால், அதனைப் பின்பற்றும் அந்த இனமும் அழிந்து விடும் என, காந்தி கிராம பல்கலைக்கழக
Updated on
2 min read

ஒரு மொழி அழிந்தால், அதனைப் பின்பற்றும் அந்த இனமும் அழிந்து விடும் என, காந்தி கிராம பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியை மு. குருவம்மாள் தெரிவித்தார்.

  திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் இளங்கலை தமிழ்த் துறை (சுயநிதிப் பிரிவு) துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, காந்தி கிராம பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியை மு. குருவம்மாள் தலைமை வகித்து, வகுப்புகளைத் தொடக்கி வைத்துப் பேசியது:

  உலகில் பல்வேறு மொழிகள் வழக்கத்தில் இருந்தாலும், ஆயுதம் (ஆயுத எழுத்து) தாங்கி நிற்கும் மொழியாக தமிழ் மட்டுமே உள்ளது. அந்த வகையில், ஆயுதம் தாங்கிய மொழியைச் சேர்ந்தவர்களான நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.

  நடைமுறைக்குச் சாத்தியமில்லாத பல்வேறு செயல்களை நம் குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறோம். இந்த நிலையை மாற்றி அமைப்பதற்கு, இலக்கியப் படைப்பாளிகள் முன்வர வேண்டும்.

  பெயர் எழுதத் தெரிந்துவிட்டாலே, அவரைக் கற்றவராக ஏற்கும் நிலை உள்ளது. அந்த எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். குழந்தைகளைப் போல் மாணவர்களும் தொடர்ந்து கேள்வி கேட்கும் வழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

  மாணவர்களின் சுயசிந்தனைக்கு வாய்ப்பளிக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள். கேட்க உதவும் செவிகளின் அமைப்பே, கேள்விக் குறி போல் இருப்பதை அனைவரும் உணர வேண்டும்.

  தமிழ் கற்றால் வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற தவறான எண்ணத்தை மாணவர்களும், பெற்றோர்களும் கைவிட வேண்டும். தமிழ் சமுதாயத்தின் கலாசாரத்தினையும், பண்பாட்டினையும் தமிழ் கற்கும் மாணவர்களால் மட்டுமே உணர முடியும். தமிழ் கற்கும் ஆவல் உள்ளவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடாது.

  ஒரு மொழி என்பது அதனை பேசும் மக்களின் கருத்துகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்தும் ஆயுதமாகும். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அவர்கள் பேசும் மொழியை அழித்தாலே போதுமானது. அந்தச் செயலை சரியாக செய்த நாடு இலங்கை. 

  உங்கள் வாழ்க்கையினை அடுத்தவர் கையில் ஒப்படைக்காமல், நீங்களே (மாணவர்கள்) தீர்மானிக்கும் சக்தியாக உருவாக வேண்டும். ஆயுதம் தாங்கிய தமிழ் மொழியை கற்க வரும் மாணவர்கள், அதனை சரியான பாதையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.

கல்லூரி முதல்வர் நா.மார்கண்டேயன்:    தாய் மொழியான தமிழில் ஞானம் இல்லாதவர்களுக்கு, பிற மொழியிலும் சரியான ஞானத்தைப் பெற இயலாது. 50 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தக் கல்லூரியில் தற்போது, சுயநிதிப் பிரிவில் தமிழ்த் துறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, பத்திரிகை துறையில் தமிழ் மாணவர்களுக்கு அதிகமான வரவேற்பு உள்ளது என்றார்.

  நிகழ்ச்சியில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழ்த் துறையில் சேர்ந்துள்ள 28 மாணவ, மாணவிகளுக்கு ஜி.டி.என். கல்லூரியின் தனி அலுவலர் இரா. ஆறுமுகம் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டன. விழாவில், அக் கல்லூரியின் செயலர் வெ. ஆதிநாராயணசாமி, தமிழ்த் துறை தலைவர் மு. விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com