மனித மனங்களின் கோணல்களை சரிசெய்ய நூல்கள் தேவை: தமிழருவி மணியன்
By dn | Published On : 20th June 2013 02:52 PM | Last Updated : 20th June 2013 02:52 PM | அ+அ அ- |

மனித மனங்களின் கோணல்களை சரி செய்ய நூல்கள் தேவை என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் புதன்கிழமை தெரிவித்தார்.
நெல்லை புத்தகத் திருவிழாவின் உரையரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
தகவல், அறிவு, ஞானம் என்ற மூன்று நிலைகளாக அறிவு உள்ளது. இன்றைய நமது கல்வி முறை தகவல்களைத்தான் தருகின்றன. எந்த வகையிலும் அறிவைத் தருவதில்லை. தகவல்களை மூளைக்குள் திணிக்கும் காரியத்தை கல்விக்கூடங்கள் செய்கின்றன..
அறிவு என்பது தன்னை அறிதல் ஆகும். முதலில் தகவல்களை திரட்ட வேண்டும். அத்தோடு நின்றுவிடக்கூடாது. அறிவை நோக்கி நடக்க வேண்டும். அதன்பிறகு ஞானத்தை நோக்கி கனிய வேண்டும். உன்னுள் உலகதத்தில் உள்ள உயிர்கள் அனைத்தையும்; உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்திலும் உன்னையும் காண்பதே ஞானமாகும். ஞானத்தை நோக்கிய தேடல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்று சமூகத்தின் அனைத்து நிலைகளும் சீரழிவை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றன. மனிதர்கள் அன்பற்றவர்களாக மாறி கொண்டிருக்கிறார்கள். சக மனிதர்களை பற்றி நினைப்பதில்லை. இன்னொருவர் துணை இல்லாமல் ஒரு நொடிப் பொழுதுகூட மனிதனால் வாழ முடியாது. பெறுவதல்ல வாழ்க்கை; தருவதே வாழ்க்கை.
நதியை போல நாம் வாழ வேண்டும். நதி உற்பத்தியாகும் போது சிறு நீரூற்றாகத்தான் தோன்றுகிறது. பின்னர் பெரிய நதியாக மாறுகிறது. நதி எந்த இடத்திலும் தேங்காது. தேங்கினால் அது நதியல்ல; சாக்கடை. நதி எத்தனை தடைகள் வந்தாலும் அதனை தகர்த்துவிட்டு தனது பாதையில் பயணிக்கிறது. மோதமுடியாத மலை குறுக்கிட்டால் பாதையை மாற்றி வளைந்து திரும்பி சென்று கடலில் சந்தோஷமாக சங்கமிக்கிறது. நதி தரும் ஞானம் பெரிது.
காந்தியை மகாத்மாவாக மாற்றியது நூல்கள்தான். அதுபோல மனிதனையும் மாற்றக் கூடியது நூல்கள்தான் என்றார் அவர்.