சாலை விதிகளை மதிப்போம்.. விபத்துகளை தவிர்ப்போம்..

சாலை என்று நாம் இணையத்தில் தேட முயன்றாலே அதனுடன் அடுத்து வருவது சாலை விதி என்றோ அல்லது சாலை விபத்து என்ற வார்த்தையோ தான். இதில் ஏதேனும் ஒரு வார்த்தையைத் தான் நாம் தேர்வு செய்ய முடியும். அதாவது சாலை விதியை தேர்வு செய்துவிட்டால் விபத்து நிகழாமல் பார்த்துக் கொள்ளலாம். விதியை தேர்வு செய்யாமல் அலட்சியம் செய்து விட்டால் அடுத்து என்ன விபத்துதான்.
சாலை விதிகளை மதிப்போம்.. விபத்துகளை தவிர்ப்போம்..
Published on
Updated on
2 min read

சாலை என்று நாம் இணையத்தில் தேட முயன்றாலே அதனுடன் அடுத்து வருவது சாலை விதி என்றோ அல்லது சாலை விபத்து என்ற வார்த்தையோ தான். இதில் ஏதேனும் ஒரு வார்த்தையைத் தான் நாம் தேர்வு செய்ய முடியும். அதாவது சாலை விதியை தேர்வு செய்துவிட்டால் விபத்து நிகழாமல் பார்த்துக் கொள்ளலாம். விதியை தேர்வு செய்யாமல் அலட்சியம் செய்து விட்டால் அடுத்து என்ன விபத்துதான்.

எனவே, ஒரு வாகனத்தை இயக்கும் நபர் யாராயினும் முதலில் சாலை விதிகளை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். வாகனத்தை நேராக ஓட்ட தெரிந்துவிட்டாலே பலரும் வீட்டுப் பிள்ளைகளிடம் இரு சக்கர மோட்டார் வாகனங்களைக் கொடுத்து பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள்.

பக்கத்துத் தெரு தானே என்றும், அடுத்த ஊருக்குப் போக என்ன இருக்கிறது என்றோ கேட்காமல், சாலை விதிகள் முழுமையாக கற்றுக் கொடுக்க வேண்டியதும், கற்றுக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

உலக அளவில் மிக அதிகமானோர் சாலை விபத்துகளில் பலியாவது இந்தியாவில்தான் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. உடனே நாம் மக்கள் தொகை அதிகம் அல்லவா அதனால்தான் என்று ஒரு சப்பைக் கட்டு கட்டுவோம். ஆனால், இந்தியாவைவிட அதிகம் மக்கள்தொகையும், மோட்டார் வாகனங்களும் உள்ள நாடு சீனா. ஆனால், அங்கே சாலை விபத்தில் மரணமடையும் நபர்களின் எண்ணிக்கை இந்தியாவோடு ஒப்பிடுகையில் குறைவுதான்.

அதுமட்டுமல்ல, இந்தியாவில் சாலை மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் அதேவேளையில் சீனாவில் இந்த எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து வருகிறார்கள் என்பதுதான் நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

இந்தியாவில் சாலை விபத்துகளில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்கள் கூட குறைவாகவே இருக்க வாய்ப்பு உண்டு. ஏன் எனில், இந்தியாவில் நடக்கும் பல விபத்துகள் முறையாக வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மரணமடைவது இந்தப் புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படுவதும் இல்லை.

இந்தியாவைவிட அதிக அளவில் வாகனங்கள் இருந்தாலும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் சாலை விபத்துகள் கணிசமாகக் குறைந்து இருப்பதற்கு முக்கியக் காரணம், அங்கே சாலை விதிகள் மிகவும் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன என்பதும், விபத்துகள் நேராமல் இருப்பதற்கான வழிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து திருத்தங்களை அவ்வப்போது கொண்டு வந்தபடி இருப்பதும்தான்.

சுவீடன், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மிகக் குறைவாகவே சாலை விபத்துகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் மிக அதிகமாகப் பலியாவது லாரி ஓட்டுநர்களும், உதவியாளர்களும்தான். சாலை மரணங்களில் 22 சதவிகிதம் பலியாவது இவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்கிறது ஒரு அறிக்கை. அதற்கு முக்கியக் காரணம், குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதும், முறையான உரிமம் இல்லாமல் உதவியாளர்கள் லாரியை இயக்குவதும், சரியான வாகனப் பரிசோதனை இல்லாமல் இருப்பதும்தான் என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இந்தியாவிலேயே மிக அதிகமாக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்கள் என்கிற பெருமையை ஆந்திரப் பிரதேசமும் மகாராஷ்டிரமும் பிடித்துள்ளன. தமிழ்நாடு இதில் எதற்கும் சளைத்ததில்லை என்கிற அளவுக்குத்தான் உள்ளது.

நகர்ப்புற சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்கள், அரசு போக்குவரத்துக் கழகங்கள்தான் என்று பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டி உள்ளன. மேலும் ஆட்டோக்களும், இரு சக்கர வாகனங்களும் சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்கள் என்று குற்றம்சாட்டப்படுகின்றன. ஆனால், நாம் கவனிக்காமல் விட்டுவிடும் விஷயம் என்னவென்றால், சாலை விதிகளை மதிக்காமல் நினைத்த இடத்தில் சாலையைக் கடக்கும் பாதசாரிகளும்கூட சாலை விபத்துகளுக்குக் காரணமானவர்கள் என்பதை.

வளர்ச்சி பெற்ற நாடுகளில் பாதசாரிகள் மற்றும் சைக்கிள்கள் செல்ல அகலமான நடைமேடைகள் நகர்ப்புறங்களில் எல்லாம் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. பிளாட்பாரங்கள் கடைத்தெருவாகி விடும் நிலையில் பாதசாரிகள் சாலையைப் பயன்படுத்தியாக வேண்டிய நிர்பந்தம் இங்கே ஏற்பட்டு விடுகிறது. மேலும், ஆங்காங்கே இடைவெளிவிட்டு பாதசாரிகள் சாலையைக் கடக்கப் போதிய வசதிகள் செய்யப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. பாதசாரிகளின் பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு சாலைகளும், சாலை விதிகளும் வளர்ச்சி பெற்ற நாடுகளில் அமைக்கப்படுவதால்தான் அங்கே விபத்து விகிதம் குறைகிறது என்று தோன்றுகிறது.

கட்டணச் சாலைகளை பராமரிக்க அரசு காட்டும் முனைப்பும் அக்கறையும், விபத்துகளைத் தவிர்ப்பதில் காட்டத் தவறுவதும், சாதாரண சாலைகளை பராமரிக்கத் தவறுவதும் விபத்துக்கு முக்கியக் காரணங்கள் என்றே சொல்லலாம்.

உரிமம் வழங்குவதிலும், வாகனப் பரிசோதனையிலும் லஞ்சம் வாங்கிக் கொண்டு எதுவுமே தெரியாதவர்களுக்குக் கூட ஓட்டுநர் உரிமம் கொடுத்துவிட்டு, கணக்கு வழக்கில்லாமல் வாகனங்களைச் சாலையில் ஓட விட்டுவிட்டு, சாலைகளையும் சரியாக பராமரிக்காமல் இப்படி புள்ளி விவரங்களைப் பார்த்து பெருமூச்சு விடுவதில் எந்த பயனும் இல்லை தான்.

எனவே, விபத்துக்களை தவிர்க்கவே முடியாது என்ற நிலையில், நாமாவது சாலை விதிகளை மதித்து நம்மால் முடிந்த அளவுக்கு சாலை விபத்துகளை தவிர்க்கவும், மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முயற்சிப்போம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com