

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை - பிறரது குற்றங்களை பார்த்துக் கொண்டிருந்தால், நமக்கு என்று யாருமே இருக்க மாட்டார்கள் என்பதை உணர்த்தும் பழமொழி இது.
மற்றவர்கள் தவறு செய்தால் அதை மன்னிக்க வேண்டும் என்ற மனப்பக்குவம் இருப்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் மற்றவர்கள் செய்யும் நியாயமான தவறுகளை மன்னிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் மறந்துவிடுங்கள்.
ஒரு தவறு செய்து விட்டார் என்பதற்காக அவரிடம் கோபித்து கொள்வதோ, எதிரியாக பாவிப்பதோ தவறு. அதையும் தாண்டி, ஒருவரிடம் இருக்கும் நல்ல குணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
எதிரி என்று யாரையும் எண்ணிக் கொள்ளாதீர்கள். அவர்களது செயல் உங்களை துன்புறுத்தினால் அவர்களுடனான தொடர்பை குறைத்துக் கொள்ளுங்கள். அவர்களை பழிவாங்கவோ, தண்டனை அளிக்கவோ முயல வேண்டாம். இதனை கடவுளிடம் விட்டுவிடுங்கள்.
நம்பிக்கையை எப்போதும் இழக்காதீர்கள். நம்பிக்கையை இழந்தவன் நடைபிணம். ஒருவன் செய்த தவறுக்காக மற்றொரு தவறால் அவனுக்கு பதில் கூறாதீர்கள்.
உங்களைத் தேடி பசியோடு வந்தவருக்கு பசி தீருங்கள். தாகத்துடன் வந்தவருக்கு தண்ணீர் கொடுங்கள். பகைவனாக இருந்தாலும் இதனை மறுக்காதீர்கள்.
மற்றவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகிக்காதீர்கள். உங்களின் வார்த்தைகளில் அன்பு இருக்கட்டும். வார்த்தைகளை சாட்டையாக பயன்படுத்தாதீர்கள்.
ஒரு மனிதன் செய்த தவறுக்காக அவனது குடும்பத்தையே வெறுப்பதும், தண்டிப்பதும் நியாயமல்ல. யாருக்கும் ஒரு மன்னிப்புக் கொடுத்து பாருங்கள்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ஒவ்வொருவரிடமும் குற்றம் பார்த்துக் கொண்டே இருந்தால் உறவுகள் இருக்காது.
நீங்கள் தவறு செய்தீர்கள் என்று உணர்ந்தால் மன்னிப்புக் கோருங்கள். மன்னிப்பு தவறைக் குறைக்கும். நியாயப்படுத்துவதால் தவறு இரட்டிப்பாக்கும்.
இந்த பூமியைப் படைக்கும் போது இறைவன், மனிதர்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் அது நடக்கவில்லை.
இறைவனின் ஆசையே நிறைவேறாதபோது, மனிதனின் ஆசைகள் எம்மாத்திரம். எனவே ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பை விட்டுவிட்டு, லட்சியங்களை அடையும் வழியில் செல்லுங்கள்.
மனிதன் விழலாம். அதில் தவறில்லை. ஆனால் விழுந்தே கிடக்கக் கூடாது.
யாரும் மற்றவர்களை ஏமாற்ற முடியாது. ஒருவன் தன்னைத்தான் ஏமாற்றிக் கொள்ள முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.