இருக்கும் இடத்தை விட்டு... இல்லாத இடம் தேடி!

உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றான மெரினா பீச். மாலை வெயில் விடைபெற்றுக் கொண்டுவிட்டது. கைரேகை மறையும் நேரம். காந்தி சிலையின் பின்னால் இருக்கும் சர்வீஸ் ரோடு.
இருக்கும் இடத்தை விட்டு... இல்லாத இடம் தேடி!

சுய முன்னேற்றம் - 4

உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றான மெரினா பீச். மாலை வெயில் விடைபெற்றுக் கொண்டுவிட்டது. கைரேகை மறையும் நேரம். காந்தி சிலையின் பின்னால் இருக்கும் சர்வீஸ் ரோடு.

ஒருவர் அங்குமிங்கும் பதட்டத்தோடு ஓடிக் கொண்டிருந்தார். இல்லையில்லை... தேடிக் கொண்டிருந்தார். ஸ்கூட்டரை வைத்துவிட்டு கடல் அருகே கால் நனைக்கச் சென்றாராம். திரும்பி வருவதற்குள் இருட்டி விட்டது. வரிசையாகவும் நெருக்கமாகவும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கும் மேலுள்ள வண்டிகளில் அவருக்கு எங்கே தன் வண்டியை விட்டுச் சென்றோம் என்பது மறந்துவிட்டது.

பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ""உங்கள் வண்டி மாடலை வைத்துத் தேடலாமே?'' என்றேன்.

""அதே மாடலில் ஐம்பது வண்டிகளைப் பார்த்து விட்டேன். என்னோடது இல்லை'' என்று முனகினார்.

""நீங்கள் வண்டியை நிறுத்தியிருந்த இடத்திற்கு அருகே இருந்த லேண்ட் மார்க் ஏதாவது நினைவிருக்கா?'' என்று கேட்டேன்.

கொஞ்சம் முகம் பிரகாசமடைந்து, ""ஆமா... ஆமா ஒரு விளக்குக் கம்பம். அருகே ஒரு வேர்க்கடலை வண்டி இருந்தது'' என்றார். ம்.. என்ன பிரயோசனம். கடற்கரையில் நூறு மீட்டர் இடைவெளியில் விளக்குக் கம்பங்கள் தொடர்ந்து இருக்கின்றன. வேர்க்கடலை வண்டியோ மொபைல் வண்டி

""நேரம் ஆனாலும் அங்குமிங்கும் ஓடாது, ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை முறையாகத் தேடுங்கள்'' என்றேன். அவ்வாறு தேடியவுடன் வண்டி கிடைத்தது. இந்த, கால விரயத்தையும், மனக்கலக்கத்தையும், எங்கே வைத்தோம்? என்பதைச் சரியாக நினைவு வைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம் அல்லவா?

பல இளைஞர்களின் பொன்னான நேரம் தேடுவதிலேயே கழிந்துவிடுகிறது. இது சரியா?

""தேடல் என்பதுதானே வாழ்க்கைத் தத்துவம் சார். கல்வி என்பதே அறிவுத் தேடல்தானே சார்?'' என்று யாராவது பதில் சொன்னால், நிச்சயம் ஒரு வாரம் அவர்களோடு பேசமாட்டேன். நான் அதையா சொல்ல வருகிறேன்? பள்ளி கல்லூரி செல்லும் இளையவர்கள் சாதாரணமாக அன்றாடம் வகுப்புக்குத் தேவையான பொருட்களைக் கூட மறந்து விட்டுத் தேடுகிறார்களே, அதைச் சொல்கிறேன்.

கல்லூரியில் அறிவியல் பரிசோதனைக் கூடத்தில் (Science Lab) பயிற்சி ஏட்டினை (Record) ஏன் எடுத்து வரவில்லை என்று கேட்டால், ""சார் மறந்துட்டேன்... வீட்டிலேயே வச்சிட்டு வந்திட்டேன்'' என்பதுதான் நாற்பது வருடங்களாக நான் கேட்ட ஸ்டாண்டர்ட் பதில். ஒன்றாவது வகுப்பிலிருந்து கல்லூரிப் படிப்பு முடியும் வரை ஒருமுறையேனும் கிளாஸ் டீச்சரிடம், ""மிஸ்... சார்... நான் மறந்துட்டேன்'' என்று சொல்லாதவர் யாரேனும் இருந்தால் சான்றுகளோடு எனக்குச் சொல்லுங்கள். நான் மறக்காமல் அவருக்கு ஒரு பரிசு தருகிறேன்.

எங்கள் வகுப்பில் ஒரு மாணவன் பள்ளிக்குப் பேனா இல்லாமல்தான் வருவான், எத்தனை சொல்லியும் மறந்துவிட்டேன் என்பான். ஒருமுறை ஆசிரியரிடமே பேனா இரவல் கேட்டான். அவரும் கொடுத்தார். அவன் வாங்கி எழுதினான். வகுப்பு முடிந்து பேனாவைத் திருப்பிக் கொடுக்கச் செல்லும் போதுதான் பார்த்தான், விரல்களிலெல்லாம் மைக் கறை.

""என்ன சார் ஓட்டைப் பேனாவைக் கொடுத்துட்டீங்க? இத எப்படி சார் யூஸ் பண்ணுறீங்க?'' என்று கிண்டலாகக் கேட்டான் ( அப்போதெல்லாம் பவுண்டன் பேனாதான். பால் பாயிண்டு பேனா வராத காலம்.)

ஆசிரியர் கோபப்படாமல் சொன்னார்: ""தம்பீ, என்னிடம் நல்ல பேனா இருக்கு. அது நான் யூஸ் பண்றதுக்கு. இரவல் கேக்கற மாணவர்களுக்காகத்தான் இது. இனிமே மறக்கமாட்டியே?''

எடுத்ததை எடுத்த இடத்தில் வைப்பது எத்தனை பேர்?

ஒழுங்கு முறை என்பதெல்லாம். என்ன என்று கேட்பவர்களுக்கு ஒரு கேள்வி. ஏதாவது ஒரு பொருளை எடுத்தால் அதை மறுபடியும் அதே இடத்தில் வைப்பீர்களா? சில பேருக்கு இந்தக் கேள்வியே புரிவதில்லை. "அத எதுக்கு அதே இடத்துல வைக்கணும்' என்று நினைப்பவர்கள் இவர்கள். ஆமாம். ஏன் அப்படி வைக்க வேண்டும்? மறுபடி அதே பொருள் தேவை என்றால், எங்கே என்று தேடாமல் உடனே எடுக்கலாம். நேரம் மிச்சமாகும். அது மட்டும் அல்ல. தேவைப்படும் போது நமது பொருளைப் பிறரைக் கொண்டு எடுத்துவரச் சொல்வது எளிது.

எனது அடுக்ககத்தில் மேலே உள்ள அபார்ட்மெண்டில் வசிக்கும் நண்பர் குடும்பம் அண்மையில் கோடை விடுமுறைக்கு மொரீஷஸ் சென்றார்கள். வீட்டு சாவியைப் பாதுகாப்பாக எங்களிடம் கொடுத்திருந்தனர். அவர்கள் புறப்பட்டுச் சென்று ஒரு மணி நேரத்திற்குப் பிறகு விமான நிலையத்திலிருந்து அந்தக் குடும்பத் தலைவி பேசினார். அவர்களது ஐ பேடை வீட்டிலேயே விட்டுவிட்டார்களாம். செல்லில் பேசினார். ""ட்ரைவர் வருகிறார், வீட்டைத் திறந்து தயவு செய்து கொஞ்சம் எடுத்துக் கொடுங்கள்'' என்று வேண்டினார்.

வீட்டைத் திறந்து பார்த்தால் ஒரே களேபரம், எங்கென்று தேடுவது? ஒரு யானைக்குட்டியை மறந்திருந்தால் கூடத் தேடிப் பிடிக்க முடியாது. நல்ல வேளை... மறுபடி போன் வந்தது. இந்தமுறை அவர்கள் வீட்டு கடைக்குட்டிப் பெண்.

"" அங்கிள் ஐ பேடைக் கண்டு பிடிச்சீங்களா?இல்லதானே?... நிச்சயமா ஒங்களால முடியாது. அதனாலதான் போன் பேசறேன். நேர லெப்ட் சைடு பெட் ரூமுக்குப் போங்க. அங்க கார்னர்ல நிறைய துணி கும்பலாக் கெடக்கும். அதுக்குக் கீழ ஒரு டேபிள் தெரியும். அதுல ரண்டாவது டிராவில கருப்பு கீ செயின்ல இருக்கற சாவிய எடுத்து முதல் அலமாரியத் திறந்து பாருங்க, அங்க இருக்கும் ஐ பேடு'' என்றது.

பல ஆண்டுகள் அரசாங்கப் பணியில் இருந்த காரணத்தால் நான் அப்படியே இன்ஸ்ட்ரக்ஷனைப் பாலோ பண்ணி, ஐ பேடைக் கண்டுபிடித்து எடுத்துக் கொடுத்துவிட்டேன். அந்தச் சிறுமியை உண்மையிலேயே பாராட்ட வேண்டும். ஒரு பொருள் வீட்டில் எங்கே இருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறாளே, இதுவே அவள் வாழ்க்கையில் முன்னேறுவாள் என்பதற்கு அறிகுறி.

இன்னும் சிலர் இல்லங்களில் ஒரு பொருள் காணாது போய்விட்டால், அது எங்கு வேண்டுமானாலும் இருக்கும். காணாது போன வளையல் ஃப்ரிட்ஜ்ஜுக்குள் கிடைக்கும். கடலைப் பருப்பு டப்பாவுக்குள் கைக்கடிகாரம் கிடக்கும். ஒரு வீட்டில் ஹாலில் உள்ள அலங்காரப் பொருட்கள் வைக்கும் கண்ணாடி அலமாரியில், மஞ்சள் தூள் டப்பாவும் இருந்தது. சமையல் செய்பவர் சற்றே கவனப் பிசகாக வைத்திருக்கலாம். வைத்தது ஆணா? பெண்ணா? என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை.

இவ்வளவு ஏன்? பலருடைய வீட்டில் போனில் பேசும் போது, எதிர்முனையில் பேசுபவர் ஏதாவது முகவரியோ அல்லது தொலைபேசி எண்ணோ கொடுத்தால் ஒரு பிட் பேப்பரோ எழுதக்கூடிய ஒரு பேனாவோ பென்ஸிலோ கிடைக்காது. இன்னும் சிலருடைய வீட்டில் பேனா இருக்கும்; ஆனால் எழுதாது. பேப்பர் கிடைக்கும்; ஆனால் அதில் எழுதுவதற்கு இடமே இருக்காது பென்ஸில் இருக்கும்; ஊக்கு உடைந்திருக்கும். அதைச் சீவ பிளேடு கிடைக்காது. சிலர் வீடுகளில் ஜோடிச் செருப்புகள் கூட இடம் மாறித் தேட வைக்கும்.

ஒரு வரலாற்றுச் செய்தி: தமிழ்த் தென்றல் திரு. வி.க. தனது முதிய வயதில் நோயுற்று, கண் பார்வை பழுதுபட்டு, படுக்கையிலேயே கிடந்தார். அவருடைய தமையனாரின் மூன்று பெயர்த்திகளில் ஒரு பெண் தனது சிறிய தாத்தாவுக்குப் பணிவிடை செய்வதற்காகப் பள்ளிப் படிப்பையே துறந்து உதவிக் கொண்டிருந்தாள். அவளுடைய உதவியின் மூலமாகத்தான் பல நூல்களை அவர் இறுதி நாட்களில் படைத்தார். "படுக்கைப் பிதற்றல்' என்ற பெயரிலேயே ஒரு நூல் எழுதினார். கண்பார்வை இல்லாத போதும் தனது நூலகத்தில் எந்த இடத்தில் எந்த நூல் இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் குறிப்பிட்டுச் சொல்வாராம் திரு,வி.க.

""ரொம்ப நேரமா எதையோ தேடுறயே.. அது என்ன?''

""ஹி..ஹி.. அதத்தான் சார் மறந்துட்டேன்''

இளைய தலைமுறையே... எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்கப் பழகுங்கள். வாழ்க்கையில் இடரின்றி முன்னேற, அது உதவும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com