இரும்புக் குதிரைகள்!

உதகையில் கோடைக்காலத்தில் நடத்தப்படும் பந்தயங்களில் பங்கேற்பதற்காக வரும் பந்தயக் குதிரைகள்தான் பல லட்ச ரூபாய் மதிப்புள்ளவை என நினைத்திருந்தவர்களுக்கு, உதகைக்கு வந்த இரும்புக் குதிரைகளான மோட்டார் பைக்குகள் அவற்றைப்போல பல மடங்கு விலை அதிகம் கொண்டவை என்பது வியப்பைத் தருவதாக இருந்தது.
இரும்புக் குதிரைகள்!
Updated on
2 min read

உதகையில் கோடைக்காலத்தில் நடத்தப்படும் பந்தயங்களில் பங்கேற்பதற்காக வரும் பந்தயக் குதிரைகள்தான் பல லட்ச ரூபாய் மதிப்புள்ளவை என நினைத்திருந்தவர்களுக்கு, உதகைக்கு வந்த இரும்புக் குதிரைகளான மோட்டார் பைக்குகள் அவற்றைப்போல பல மடங்கு விலை அதிகம் கொண்டவை என்பது வியப்பைத் தருவதாக இருந்தது.

பெங்களுருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்குவது "ரீபப்ளிக்கன் ரைடர்ஸ் கிளப்'பாகும். இதில் உறுப்பினராவதற்கு என்ன தகுதி தெரியுமா? 800 சி.சி. திறனுள்ள மோட்டார் பைக்குகளை வைத்திருக்க வேண்டும்.

அப்படி உறுப்பினராகியுள்ள சிலர் வைத்துள்ள மோட்டார் பைக்குகளின் விலையைக் கேட்டால் ஒரு நொடி நமக்கு மயக்கமே வந்துவிடும். ரொம்ப அதிகமில்லை. ரூ.45 லட்சத்திலிருந்து ரூ.65 லட்சம் வரையிலான விலையுள்ள மோட்டார் பைக்குகளே அவை.

ஹார்லி டேவிட்சன், டுகாட்டி, பி.எம்.டபிள்யு போன்ற விலை உயர்ந்த பைக்குகள் உதகையில் சுற்றித் திரிந்தபோது அவற்றை கண் இமைக்காமலும், வாயைப் பிளந்தும் பார்த்த இளைஞர் பட்டாளம் ஏராளம்.

இந்த விலை உயர்ந்த மோட்டார் பைக்குகள் மற்றும் ரீபப்ளிக்கன் ரைடர்ஸ் கிளப்பைக் குறித்து அந்த கிளப்பின் நிர்வாகிகள் பிரசாத்தும் ஷியாம் ஷெட்டியும் உதகையில் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:

பொதுவாக இக்கால இளைஞர்கள் மோட்டார் பைக்குகளை அதிக அளவில் விரும்புகின்றனர். அதிலும் வேகமாக செல்லக் கூடிய பைக்குகள் மீது இவர்களது மோகம் உள்ளது. ஆனால், ரீபப்ளிக்கன் ரைடர்ஸ் கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் வேகத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை. பாதுகாப்பான மற்றும் இனிமையான பயணத்திற்கே முக்கியத்துவம் தருகின்றனர். அதனால் இவர்கள் எங்கே சென்றாலும் தங்களது பயணத்தை பந்தயமாக மாற்றிக் கொள்ளாமல் இயற்கையையும், சூழலையும் அனுபவிக்கும் வகையிலேயே அமைத்துக் கொள்கின்றனர்.

அதிக வேகமில்லாமல் இயக்கப்படுவதால் இவை குறிப்பிட்ட அளவு வேகத்தில்தான் போகுமென கூற முடியாது. மிக வேகமாக செல்லக் கூடிய 600 சி.சி. முதல் 800 சி.சி. வரையிலான திறன் கொண்ட இந்த மோட்டார் பைக்குகள் விலை உயர்ந்த பைக்குகள் என்றாலும், இந்த பைக்குகளில் அனைத்து விதமான நவீன வசதிகளும் இடம் பெற்றிருந்தாலும் இவர்கள் வேகமாகச் செல்வதில்லை. விலை உயர்ந்த பைக்கை வைத்திருப்பதே இவர்களுக்குப் பெருமை என்று நினைக்கின்றனர்.

35 வயது முதல் 65 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள இந்த கிளப் முதலில் பெங்களூருவில் தொடங்கப்பட்டது என்றாலும், இக்கிளப்பின் செயல்பாடுகளைப் பார்த்து சென்னை, மும்பை, தில்லி என நாடு முழுதும் இதன் கிளைகளைத் தொடங்க வேண்டுமென கோரிக்கைகள் வந்துள்ளன. இக்கிளப்பில் ஆண்கள் மட்டுமின்றி, ஏராளமான பெண்களும் உறுப்பினர்களாக உள்ளனர். பி.எம்.டபிள்யு போன்ற ஆட்டோ கியர் கொண்ட பைக்குகளை இவர்கள் மிக எளிதாக ஓட்டிச் செல்கின்றனர். இந்த பைக்குகளின் டயர்கள் மிக அகலமாக இருப்பதால் அவ்வளவு எளிதில் கீழே சாய்ந்து விடாது. அதனால் எத்தகைய சரிவிலும் இவை அநாயசமாகச் செல்லும்.

இவர்களது பயணத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு திரில்லிங் இருக்க வேண்டுமென்பதற்காகவே குடகு மலை, மூணாறு, நீலகிரி போன்ற மலைப் பகுதிகளுக்கும் ஆண்டுக்கொருமுறை வந்து செல்வதாகவும் தெரிவித்தனர்.

நாட்டில் மோட்டார் வாகனங்களைப் பொறுத்தமட்டில் எத்தனையோ கிளப்புகள் இருந்தாலும், விலை உயர்ந்த பைக்குகளை வைத்துக் கொண்டு, அதன் வேகத்தை காட்டாமல் அதற்கான அந்தஸ்தை அளிக்கும் வகையில் செயல்பட்டுவரும் இந்த கிளப்பைக் காட்டிலும், அதன் உறுப்பினர்கள் கொண்டு வந்த மோட்டார் பைக்குகளில் பயணிக்க மட்டுமின்றி, தொட்டுப் பார்க்கவே ஆசைப்பட்ட இளைஞர்களை உதகையின் பல்வேறு பகுதிகளிலும் பார்த்தது வித்தியாசமான காட்சியாகவே இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com