

போட்டிகள் நிறைந்த நமது நாட்டில் இளைஞர்களுக்குப் பணி வாய்ப்புகள் கொடுப்பதற்காகப் பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. பல்கலைக்கழகங்களில் - கல்லூரிகளில் - உதவிப் பேராசிரியராகப் பணி வாய்ப்புப் பெற நெட் (NET) அல்லது செட் (SET) தேர்வு ஏதாவதொன்றில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெறுவது என்பது அனைவருக்கும் சாத்தியம் இல்லை. ஆனால் நெட், செட் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மாணவர்களுக்கு உள்ளன. நெட் தேர்வு எழுதி ஜெ.ஆர்.எப். (JUNIOR RESEARCH FELLOW) கிடைத்தால் மாத நிதி உதவியுடன் முனைவர் பட்டம் மேற்கொள்ளலாம். இப்படிப்பட்ட நிலையில் "நெட் தேர்வை எதிர்கொள்வது எப்படி?' என்பது குறித்து இங்கு விவரிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி: "நெட்' தேர்வு எழுதுவதற்கு முதுகலை / முதுஅறிவியல், முதுவணிகவியல் (MA, Msc, MCom) ஏதாவதொன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். முதுநிலை படிப்பில் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இப்பட்டங்களை பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் பெற்றிருக்க வேண்டும்.
எந்தெந்தப் பாடங்களில் நெட் தேர்வு எழுதலாம்?
நெட் தேர்வு கலைப்பாடங்கள், மொழிப்பாடங்கள், சமூக அறிவியல், கணினி அறிவியல் - பயன்பாடு, மின்னணு அறிவியல் மற்றும் பிற பாடங்களில் இத்தேர்வை எழுதலாம்.
மதிப்பெண் தளர்வு: பொதுப் பிரிவினருக்கு நெட் தேர்வு எழுத முதுநிலை பாடத்தில் 55% பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் ஒபிசி (OBC), எஸ்.சி., எஸ்.டி., (SC/ST) மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகிய பிரிவினர் முதுகலை / முதுஅறிவியல் / முதுவணிகவியலில் 50 சதவிகிதம் பெற்றிருந்தால் நெட் தேர்வு எழுதத் தகுதி பெறுவர்.
இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்: முதுகலை / முதுஅறிவியல் / முதுவணிகவியல் பயிலும் இறுதியாண்டு மாணவர்களும் நெட் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். அத்துடன் மாணவர்களின் தேர்வு முடிவு வெளியாகாமலிருந்தாலும் அல்லது தேர்வு முடிவிற்காகக் காத்திருப்போரும் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர். இருப்பினும் முதுநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் (நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும்) ஜெ.ஆர்.எப். (JUNIOR RESEARCH FELLOW) மற்றும் உதவிப் பேராசிரியர் (Asst.Prof) பணிக்குத் தகுதி பெறுவர்.
முனைவர் பட்டம் பெற்றோர்: முனைவர் பட்டம் பெற்றோர் 19.9.1991-இல் முதுகலை / முதுஅறிவியல் / முதுவணிகவியல் பட்டம் பெற்றிருந்தால் நெட் தேர்வு எழுத 50 சதவிகிதம் பெற்றிருந்தால் போதும்.
முதுநிலையில் என்ன பாடம் பயின்றார்களோ, அந்தப் பாடத்தில் மட்டுமே நெட் தேர்வு எழுத வேண்டும். யு.ஜி.சி.யின் பாடப்பிரிவுப் பட்டியலில் இல்லாத பாடம் பயின்றுள்ளோர் அப்பாடம் சார்ந்த தேர்வை எழுதலாம்.
சட்ட நடவடிக்கை: ஒ.பி.சி. பிரிவினர், எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் நெட் தேர்வு எழுத ஆன் லைன் (Online) மூலம் விண்ணப்பித்திருந்தால் சான்றொப்பச் சாதிச் சான்றிதழ் நகலை (Online) விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மற்ற பிரிவினர் தங்களின் கல்வித்தகுதி மற்றும் சாதிச் சான்றிதழின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். தேர்வு எழுதி வெற்றி பெற்றாலும் "தகுதி இல்லை' என்பதை யு.ஜி.சி. எந்த நிலையில் கண்டறிந்தாலும், வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிப்பதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று யு.ஜி.சி. கூறியுள்ளது.
முதுநிலை பட்டயம் பெற்றோர் (Post graduate Diploma): தத்தமது பாடங்களில் முதுநிலை பட்டயம் (Diploma in Post graduate) சான்றிதழ் பெற்றோர் இத்தேர்வை அவர்களின் சொந்தத் தகுதியின் - நம்பிக்கையின் (Own Risk) அடிப்படையிலேயே எழுத வேண்டும்.
இந்திய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் பட்டயம் பெற்றிருந்தால், அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்களில் முதுகலை / முதுஅறிவியல் / முதுவணிகவியல் பட்டத்திற்கு இணையான சான்றிதழ் பெற வேண்டும்.
உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி விதிவிலக்கு: பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கு நெட் (NET) / ஸ்லெட்(SLET) / செட்(SET) தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் 2009-ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றிருந்தால், உதவிப் பேராசிரியர் பணியில் சேர குறைந்தபட்சத் தகுதியான நெட், ஸ்லெட், செட் தேர்வுகளில் ஏதாவதொன்றில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும். 1989-ஆம் ஆண்டிற்கு முன்பு யு.ஜி.சி., சி.எஸ்.ஐ.ஆர்., ஜெ.ஆர்.எப் (UGC, CSIR, JRF) எழுதி வெற்றி பெற்றிருந்தாலும் நெட் தேர்வு எழுதுவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும்.
செட் (SET) தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றவர்களுக்கு: யு.ஜி.யின் விதிகளின்படி 01.06.2002-க்கு முன்பு செட் தேர்வு எழுதி வெற்றி பெற்றோருக்கு நெட் தேர்வு எழுதுவதிலிருந்து விதிவிலக்களிக்கப்படும். இந்திய அளவில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும் 01.06.2002-க்குப் பின்பு செட் தேர்வு எழுதியோர் அவரது மாநிலத்தில் மட்டுமே உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.