நீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம்

இன்றையச் சூழலில் குடும்பத் தேவைக்கான பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. பெண்கள் வீட்டிலிருந்தபடியே
Updated on
2 min read

முதலீடு ரூ.500! மாத வருவாய் ரூ.20,000

இன்றையச் சூழலில் குடும்பத் தேவைக்கான பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. பெண்கள் வீட்டிலிருந்தபடியே ஏதாவது தொழிலில் ஈடுபட்டு சாதிக்கும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

 மதுரை பாலரெங்காபுரத்தைச் சேர்ந்த ஊர்மிளா, சிறுதானிய ரெடிமிக்ஸ் பவுடரைத் தயாரித்து அதை விற்பனை செய்வதிலும் வெற்றியடைந்து வருகிறார். வளர்ந்து வரும் தொழில்முனைவோரான அவரிடம் அவர் கடந்து வந்த பாதையைப் பற்றிக் கேட்டோம்: ""கணவர் சங்கர்லால். மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 2 மகன்களும் படித்து வருகின்றனர். வீட்டில் சமையல் நேரம் போக மீதி நேரத்தில் ஏதாவது தொழில் செய்யலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. மதுரை அருகே உள்ள விவசாயக் கல்லூரி வளாகத்தில் உள்ள மனையியல் கல்லூரியில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருள் தயாரிக்கும் பயிற்சியில் சேர்ந்தேன். இரு நாள்களுக்கு ரூ.300 கட்டணம். அங்கு சோளம், கம்பு, தினை, வரகு, கேழ்வரகு, சாமை, குதிரைவாளி ஆகியவற்றின் மாவு மூலம் ரெடிமிக்ஸ் பவுடர் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

 தற்போதைய உணவு வகைகள் உடல்நலத்திற்கு உகந்ததாக இல்லாத நிலையில், பழைய தானிய உணவு வகைகளைத் தற்காலத்துக்கு ஏற்ப உணவாக்கி உண்ணவே மக்கள் விரும்புகின்றனர். அதன்படி அடைமாவு, புட்டுமாவு, சோளத் தோசை, ரவாதோசை, கம்பு தோசை, வெந்தயக் களி, உளுந்தம் களி, கேழ்வரகுப் புட்டு மற்றும் சத்து மாவு ஆகியவற்றுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதை அறிய முடிந்தது. ஆனால், பலருக்கு இவற்றைத் தயாரிக்கத் தெரியாது. அப்படித் தயாரிக்கத் தெரிந்தவர்களுக்கு அவற்றைச் செய்வதற்கான நேரம் இருக்காது. எனவே நாமே இவற்றைத் தயாரித்து விற்றால் என்ன? என்று தோன்றியது. உடனே செயலில் இறங்கினேன்.

மாவுகள் தயாரிக்கத் தேவைப்படும் தானியங்களை வாங்குவதற்காக வெறும் 500 ரூபாயே என்னுடைய  முதல் முதலீடு.  பின்னர், தானியங்களை வறுப்பதற்கான ரோஸ்டர் சாதனத்தை மாவட்ட தொழில் வளர்ச்சி மையம் மூலம் ரூ.1 லட்சம் கடனுதவியில் வாங்கினேன். வறுத்த தானியங்களைத் தனியார் அரவை மில்லில் கொடுத்து மாவாக அரைத்து வருகிறேன். தலா 450 கிராம் கொண்ட பையில் மாவை அடைத்து விற்பனைக்கு கொடுத்து வருகிறேன்.

எனக்கு உதவியாக கணவர், குழந்தைகள், அண்ணி மற்றும் எனது அம்மா ஆகியோர் உள்ளனர். தினமும் சுமார் 300 கிலோவுக்கும் மேலாக மாவு தயாரிக்க முடிகிறது. அதை பாக்கெட்டில் அடைத்து மோட்டார் சைக்கிளில் சென்று, நானே கடைகளில் கொண்டு போய் விற்கிறேன். தற்போது மதுரையில் மட்டும் அல்லாமல், பொள்ளாச்சி, விழுப்புரம் என பிற ஊர்களிலும் ரெடிமிக்ஸ் மாவுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளிலேயே மாதம் ரூ.20,000 வருவாய் கிடைத்து வருகிறது. இன்னும் தொழிலை விரிவுபடுத்த உள்ளேன். குழந்தைகள் விரும்பும் வகையில் கம்பு லட்டு, தினை லட்டு, வரகரிசி முறுக்கு ஆகியவற்றையும் தயாரிக்க உள்ளேன்.

எங்கள் தயாரிப்புக்கு மாவட்ட உணவுப் பாதுகாப்பு பிரிவில் தரத்துக்கான சான்றும் பெற்றுள்ளேன். புதிய உணவுக்கான மாவு தயாரிக்கும்போது அதன் சத்து உள்ளிட்ட விவரத்தை விவசாயக் கல்லூரி மனையியல் ஆராய்ச்சிப் பிரிவில் விளக்கி ஒப்புதல் பெற்றே தயாரிக்கிறேன்.

வீட்டிலிருந்தபடியே சிறிய முதலீட்டில் உழைப்பை மூலதனமாக்கி தொடங்கிய ரெடிமிக்ஸ் இன்று எனக்குத் தேவையான வருமானத்தை ஓரளவு தருவதுடன், மன தைரியத்தையும் அளிப்பதாக உள்ளது.

தற்போது குடும்பத்தில் உள்ளவர்களே ரெடிமிக்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். தொழில் வளர்ந்து வருவதால், வேலை செய்ய ஆட்களைத் தேவைக்கேற்ப நியமிக்கவும் உள்ளோம்'' என்றார் ஊர்மிளா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com