உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்!

உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்...!
Updated on
3 min read

உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்...!

ஓர் எதிர்பார்ப்போடு ஆரம்பிக்கும் இந்தப் பல்லவிக்கு கவியரசு கண்ணதாசன் பாட்டுத் தொடரில் உடனே பதிலையும் தருவார். உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்.. சரி அறிந்தால் என்ன கிடைக்கும்? இந்த உலகத்தில் போராடலாம். ஆம். உலக வாழ்க்கையில் போராடத் தொடங்குபவர் முதலில் செய்ய வேண்டியது தன்னைத் தான் அறிவது.

ஒழுங்கு என்பது தன்னை அறிவதில் தொடங்குகின்றது.

நாட்டின் பிரபலமான மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட்டில் மாணவர் சேர்க்கைக்கான இன்டர்வ்யூ நடக்கிறது. கண்களில் அறிவும் ஆர்வமும் பொங்கி வழியும் அந்தத் துடிப்பான இளைஞன் ஒரு மெல்லிய புன்னகையோடு எல்லா வினாக்களுக்கும் மிகச் சரியான விடை தந்து கொண்டிருக்கிறான்.

இந்தியாவில் மொத்தம் எத்தனை மாநிலங்கள் உள்ளன? கடைசியாகச் சேர்க்கப்பட்ட மாநிலம் எது? இந்திய அரசு இவ்வாண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புக்கென ஒதுக்கிய தொகை எவ்வளவு? சென்ற ஆண்டு விண்வெளி ஆய்வுக்கென்று அமெரிக்கா செலவு செய்த தொகை எத்தனை? ஆப்பிரிக்க கண்டத்தின் எத்தனை விழுக்காடு பாலைவனப் பகுதி? குரங்குகள் வெஜிடேரியனா இல்லை நான் - வெஜிடேரியனா? கேள்விகள்... கேள்விகள்...

இவை போன்ற பொது அறிவுக் கேள்விகளுக்கு கண நேரமும் தாமதிக்காமல் சரியான பதில்களைச் சொன்ன இளைஞனைப் பார்த்து நேர்முகத் தேர்வு குழுவில் இருந்த அனைவரும் "பலே' என்று தலையாட்டி "ஓகே' சொல்ல இருந்த போது அக்குழுவின் தலைவர் கேட்டார்.

இன்னும் ஒரே கேள்வி.. ""உங்களுடைய சட்டைப் பாக்கெட்டில் ஏதோ வைத்துள்ளது போலத் தெரிகிறதே?''

""ஆமாம்'' இளைஞன் தலை ஆட்டினான்.

""அதில் என்னென்ன இருக்கின்றன என்று சரியாகச் சொல்ல முடியுமா?''

முதல் முறையாகக் கொஞ்சம் தயங்கி நின்ற இளைஞன், ""ஏதோ கொஞ்சம் பணம், சில ரசீதுகள் இருக்கின்றன. ஆனால் பணம் எவ்வளவு என்றும் பேப்பர் துண்டுகளும் ரசீதுகளும் என்ன என்றும் குறிப்பாகச் சொல்ல இயலாது'' என்றான்.

குழுத் தலைவர் சொன்னார்: ""மற்ற செய்திகளெல்லாம் இத்தனை துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிறாய். நல்லது. அதற்கு பதில் தெரியாவிட்டாலும் ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை. மதிப்பெண்தான் போகும். ஆனால் உன் சட்டைப் பையில் உள்ளதை நீயே மறந்துவிட்டால், வாழ்க்கையே அல்லவா பிரச்னை ஆகிவிடும்?''

இன்னொரு மாணவரிடம் கேட்டார்கள்:

""எந்த உயிரினத்தின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்?''

""ஸ்குவிட். ஆக்டோபஸ் போன்ற நீர்வாழ் உயிரினங்களின் இரத்தம் நீலமாக இருக்கும்''

""மிகச் சரியான விடை. உங்களுடைய இரத்த வகை (Blood Group) என்ன?''

"" அது தெரியாது ஐயா... இனிமேல்தான் பார்க்க வேண்டும்'' என்றான்

""இரத்தம் பற்றிய பொது அறிவு தேவைதான்..ஆனால் தன் உடலில் ஓடும் இரத்தவகை என்ன? என்ற அறிவு கூட இல்லையென்றால் பொது அறிவால் என்ன பயன்? ஓர் எமெர்ஜென்ஸியில் பிறருக்கு இரத்ததானம் செய்யக் கூட முன் வர இயலாது போய்விடும் என்று அறிவுரை தந்தார் ஆசிரியர்.

""உலகச் செய்திகளை அறிந்து வைத்திருந்தாலும் உன்னை நீ அறியவில்லை என்றால் வாழ்வில் உயர முடியாது''

உன்னை அறிந்து கொள்வதில் (Know Yourself) இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று உடல் சம்பந்தப்பட்டது (Physical) இன்னொன்று செயல்திறமை, அறிவு (Talent and Knowledge) தொடர்புடையது.

எல்லா மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தமது உடல் பற்றிய அடிப்படைத் தகவல் தெரிந்திருக்க வேண்டும் தோராயமாகத் தெரிந்தால் போதாது. துல்லியமாகத் தெரிய வேண்டும். நான் சில மாணவர்களிடம் அவர்களது உயரம் என்ன? எடை என்ன? என்று கேட்டேன். ஓரிரண்டு பேர்களைத் தவிர, எல்லாரும் ஏறக்குறைய ஐந்தடி ஆறடி என்றார்களே தவிர, சரியாகச் சொல்லவில்லை.

சரியாகச் சொன்ன மூன்று மாணவர்களும், ஒரு மாணவி உட்பட ஐ ஏ எஸ் முதல் கட்டத் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருப்பவர்கள். சரியான விடையை சென்டிமீட்டரிலும் கிலோ

கிராமிலும் சொன்னார்கள். அது மகிழ்ச்சியே. ஆனால் இது போன்ற அடிப்படைத் தகவல்களை எல்லோரும் அறிந்திருக்க வேண்டாமா?

இதைவிட முக்கியமான விஷயம், தங்களுக்குள் இருக்கும் திறமைகளை உணர்ந்து கொள்வது; அதை முழுவதுமாகப் பயன்படுத்துவது.

படித்த படிப்புக்கேற்ற துறையில்தான் முன்னேற வேண்டுமென்ற கட்டாயத்தை வைத்துக் கொண்டால், பல நேரங்களில் வெற்றி வசப்படாது. ஒரு துறையிலே முறை சார்ந்த கல்வி பெற்றிருந்தாலும், வேறு துறையிலே தம் திறமை இருக்கிறது என்று அறிந்ததும், தயங்காமல் அத்துறையில் முயன்று, உழைத்து சிகரம் தொட்டவர்கள் உண்டு.

நமக்கு நன்கு அறிமுகமான பல பிரபலங்களை இந்த விஷயத்தில் நான் உதாரணம் காட்ட முடியும்.

மிருதங்கச் சக்கரவர்த்தியாக விளங்கும் உமையாள்புரம் சிவராமன், துக்ளக் சோ, சுகி சிவம் போன்றோர் வக்கீல் படிப்புப் படித்தவர்கள். கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், கிரேஸி மோகன் போன்றோர் பொறியியல் துறையில் பட்டங்கள் பெற்றவர்கள். இசைக் கலைஞர் உன்னிகிருஷ்ணன், சஞ்சய் சுப்பிரமணியன் போன்றோர் வணிக இயல் கற்றவர்கள். நடனமணி ஸ்ரீநிதி சிதம்பரம், பேச்சாளரும் எழுத்தாளருமான சுதா சேஷய்யன் போன்றோர் மருத்துவத் துறையில் பணியாற்றும் டாக்டர்கள்.

ஒவ்வோர் இளைய பருவத்தினரும், எந்தத் துறையில் தன் திறமை ஒளிவிட்டுப் பிரகாசிக்குமென்ற சுய மதிப்பீடு செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிளஸ் டூ எழுதிய மாணவரிடம் கேளுங்கள்:

""நான் இஞ்சினீயர்... நான் டாக்டர்... நான் சாப்ட்வேர்... நான் ஸி.ஏ'' என்ற பதில்களே கிடைக்கும். இவை அவரவர் தம் திறமையை அளவிட்டு, எடை போட்டு எடுத்த முடிவுகளா இல்லை பெற்றோரும் உறவுகளும் கூடப் படிக்கும் நண்பர்களும் ஏற்படுத்தும் ப்ரஷெரினால் வெளியாகும் வெற்று வார்த்தைகளா? பெரும்பான்மை நேரங்களில் இவை சொந்த முடிவுகளாக இருப்பதில்லை.

யாரும் ஒரு நூலகராகவோ, வனப் பாதுகாவலராகவோ, சிற்பியாகவோ, ஓவியராகவோ, பசுமை விவசாயியாகவோ, மாசுக் கட்டுப்பாடு அலுவலராகவோ இன்னும் இது போன்ற ஒரு நூறு தொழில்களில் ஈடுபடுபவராகவோ ஏன் தன்னை இனம் கண்டு கொள்வதில்லை? இத் துறையில் எல்லாம் பலர் திறமையோடு பணிபுரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் இத்துறைக்குத்தான் வருவேன் என்று எத்தனை பேர்கள் அடம் பிடித்து வந்துள்ளார்கள்.

ஒருவன் டாக்டரிடம் போனான்:

""டாக்டர் எனக்கு என்ன வியாதின்னு சொல்லுங்க..''

""உடம்புக்கு என்ன பண்ணறதுன்னு நீங்க சொல்லுங்க''

""அட... நீங்கதானே இங்க டாக்டர்? நீங்களே கண்டு பிடிங்க''

இந்தச் சிரிப்புக்குப் பின்னால் ஒருவனின் அறியாமை என்ற சோகம் இருக்கிறதே!

வாழ்க்கை ஒழுங்குபட இயங்கினால்தான் முன்னேற முடியும். அதற்குள்ள முதல் வழி உன்னை நீ அறிந்து கொள்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com