மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி?

பாடச் சுமை, தேர்வுகள், தேர்வில் தோல்வி போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்கள் குழப்பமும், மனச் சோர்வும் அடைகின்றனர்.
மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி?
Published on
Updated on
1 min read

பாடச் சுமை, தேர்வுகள், தேர்வில் தோல்வி போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்கள் குழப்பமும், மனச் சோர்வும் அடைகின்றனர். இதிலிருந்து விடுபட்டு மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி? என்பது குறித்து ஆலோசனை கூறுகிறார் விழுப்புரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் பேராசிரியர் விவேகானந்தன்.

""மாணவர்கள் தங்களுடைய உயர்ந்த அறிவைப் பயன்படுத்தாமல் மனம் போன போக்கில் சிந்தனையை அலைய விடுவதன் மூலம் வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்து துன்பத்துக்கு ஆளாகின்றனர்.

படித்த மாணவர்கள் தேர்வில் தோல்வி அடையும்போது மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயல்கின்றனர். வெற்றி தோல்வி வாழ்வில் நிகழக்கூடிய நிகழ்வே. எனவே தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

இதற்கு மனதை ஒழுங்குபடுத்த வேண்டும். குறிப்பாக ஒரு நிலைப்படுத்த வேண்டும். மனதை ஆல்பா நிலை எனப்படும் அமைதி நிலைக்குக் கொண்டு செல்லப் பழக வேண்டும். இவ்வாறு பழகினால் மனதுக்கு ஆற்றல் கிடைக்கும். மனதுக்கு ஆற்றல் கிடைத்தால்தான் செயலில் வெற்றி கிடைக்கும்.

முறையான மனவளக்கலை பயிற்சி மூலம் மாணவர்களது மனதை ஒழுங்குபடுத்த முடியும். ஒவ்வொரு மனிதனின் செயல்பாட்டிலும் அவனது மனமே மாபெரும் சக்தியாக விளங்குகிறது. எனவே அகப்பண்பாட்டுக் கல்வியின் அடித்தளத்தில் மற்ற கல்விகள் அமைய வேண்டும். அகப் பண்பாடுகளை வளர்க்கும் இயற்கை தத்துவ அறிவு, ஒழுக்க, பழக்க அறிவு மாணவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். இத்தகைய பண்பாட்டுக் கல்வியையே நாங்கள் "மனவளக்கலை யோகா' என்கிறோம். உலக மக்கள் இதைப் பெற வேண்டும் என்பதுதான் வேதாத்திரி மகரிஷியின் விருப்பம்.

மாணவர்கள் வெற்றி பெற வேண்டுமானால் உடல் நலமும், மன நலமும் இருக்க வேண்டும். உடல் நலத்தைப் பாதுகாப்பதற்கு எளிய உடற் பயிற்சிகளையும், மனவளத்தைப் பாதுகாக்க எளிய முறை தியானப் பயிற்சிகளையும் செய்ய வேண்டும். உயிராற்றல் பெருகுவதற்கு காயகல்ப பயிற்சியும் அவசியம்.

உடலில் ஏற்படும் குறைபாடுகள் மன அமைதியைப் பாதிக்கும். எனவே உடற்பயிற்சி மூலம் ஒவ்வோர் உறுப்பையும் ஆரோக்கியம் பெற வைக்க வேண்டும். உடற்பயிற்சியால் உடலில் இயங்கும் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம், காந்த ஓட்டம் சீரடைகின்றன.

தியானப் பயிற்சியின் மூலம் மன அமைதி, மன விரிவு, மன நிறைவு, சகிப்புத்தன்மை ஆகியவை கிட்டும். மன இறுக்கம், மனச் சோர்வு ஆகியவை சரியாகி ரத்த அழுத்தம் சீரடைகிறது. மாணவர்களுக்குச் செயல்திறனும், நினைவாற்றலும் உயர்ந்து, அதிக மதிப்பெண்கள் பெற உதவுவதுடன் நல்வாழ்வுக்குத் தேவையான நல்லொழுக்கமும் கிடைக்கும்.

மாணவர்களுக்காக மனவளக்கலை அறக்கட்டளை மூலம் உடற்பயிற்சி, தியானப் பயிற்சி, காயகல்ப பயிற்சி ஆகியவை தமிழகம் முழுவதும் வழங்கப்படுகின்றன'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com