விடா முயற்சி... கடும் உழைப்பு... வெற்றி! அரசுப் பள்ளி... தமிழ் மீடியம்... இன்று ஐஏஎஸ்!

நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் அருகேயுள்ள படச்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கே.இன்பசேகர். இவர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை செய்துள்ளார். இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா?
விடா முயற்சி... கடும் உழைப்பு... வெற்றி! அரசுப் பள்ளி... தமிழ் மீடியம்... இன்று ஐஏஎஸ்!
Updated on
2 min read

நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் அருகேயுள்ள படச்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கே.இன்பசேகர். இவர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை செய்துள்ளார். இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா?

அவர் ஒரு தோட்டத் தொழிலாளியின் மகன். தமிழ் வழிக் கல்வியில் -அதுவும் அரசுப் பள்ளியில் - ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை படித்தவர். நீலகிரி மாவட்டத்தில் படுகர் இனத்தில் அல்லாமல் பிற பிரிவிலிருந்து ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் முதல் நபரும் இவரே. இவரது தந்தை ஆர்.வி.காளிமுத்து அப்பகுதியில் தையற்காரராகத் தொழில் செய்து வருகிறார். தாயார் பூவதி, அங்குள்ள அரசு தேயிலைத்தோட்டக் கழகத்தின் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளி.

உள்ளூர்க்காரர் - அரசு பள்ளி மாணவர் - தமிழ் வழியில் பயின்றவர் என்பதால் இவரது தேர்ச்சி குறித்த தகவல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவரைப் பாராட்டும் விழாக்கள் நடந்த வண்ணம் உள்ளன.

ஐஏஎஸ் தேர்வில் அவர் எப்படித் தேர்ச்சி பெற்றார்? அதற்காக அவர் செய்த முயற்சிகள் எவை? என்று கேட்டோம்:

""கடந்த 1988ஆம் ஆண்டு மே மாதம் 4ம்தேதி படச்சேரியில் பிறந்தேன். பின்னர் சேரங்கோட்டிலுள்ள டான்டீ தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வியையும், சேரம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும், கூடலூர் அரசு மேனிலைப் பள்ளியில் மேனிலைக் கல்வியையும் பயின்றேன். அதன் பின்னர் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி விவசாயப் படிப்பு. ஹைதராபாத்தில் எம்.எஸ்சி. முடித்தேன். தொடர்ந்து தில்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்தேன். சிறு வயதிலிருந்தே ஊரில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் போன்றவற்றைப் பார்த்திருக்கிறேன். "நாமும் ஏன் கலெக்டர் ஆகக்கூடாது?' என்ற எண்ணம் அப்போதே எனக்குத் தோன்றிவிட்டது. மக்களின் குறைகளை நேரடியாகக் கண்டறிந்து நாமும் தீர்க்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது.

ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்பதனால், பள்ளிப் படிப்புடன், நூலகத்தையும் அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்தேன். அதன் பின்னர் கல்லூரியில் படிக்கும்போது, தொடர்ந்து செய்தித்தாள்களை வாசிக்கும் வழக்கத்தை உருவாக்கிக் கொண்டேன். பேராசிரியர்கள், சக நண்பர்கள் ஆகியோருடன் பேசுவது, இணையத்தின் வழியாக பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்வது என என் சிந்தனை முழுவதும் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முந்தைய வினாத்தாள்களைப் படித்து, தேர்வில் கேள்வி கேட்கப்படும் முறைகளைத் தெரிந்து கொண்டேன்.

இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்காக எங்கும் தனிப்பயிற்சிக்காகச் சென்றதில்லை. அதேபோல, வழிகாட்டியாகவும் யாரையும் வைத்துக் கொள்ளவுமில்லை. நாள்தோறும் சுமார் 16 மணி நேரம் படிப்புக்காக உழைத்தேன்.

2010ஆம் ஆண்டில் பிரிலிமினரி தேர்வில் வெற்றி பெற்றேன். நேர்முகத் தேர்விலும் பங்கேற்றேன். அப்போது இந்திய வனப்பணியில் 49வது இடம் கிடைத்தது. ஆனால், அதில் சேர எனக்குத் தேவையான அளவுக்கு உயரம் இல்லை. அதனால் அப்பணியில் சேர முடியவில்லை.

மீண்டும் 2013இல் தேர்வெழுதினேன். அதில் அகில இந்திய அளவில் 761 வது இடத்தைப் பெற்றேன். ஆனால், ஐஏஎஸ் தவிர வேறு எந்த அரசுப் பணிக்கும் போக நான் விருப்பம் தெரிவிக்காததால் வேறெந்த பணியிலும் என்னால் சேர முடியவில்லை.

அதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி வெற்றி பெற்று 439வது இடத்தைப் பிடித்துள்ளேன். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புபவர்கள், படிப்பில் மொத்த கவனத்தையும் செலுத்த வேண்டும். வாய்ப்புகள் இல்லையென எதிர்மறையாகச் சிந்திக்கக் கூடாது. நமக்காக ஒரு வழியை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். கடுமையான உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் எந்தத் துறையிலும் நம்மால் சாதிக்க முடியும். பெற்றோரையும், ஆசிரியர்களையும் கண்டிப்பாக மதிக்க வேண்டும்.

படிக்கும் காலத்தில் தேவையற்ற கேளிக்கைகளில் ஈடுபடக் கூடாது. இவை எல்லாம் இருந்தால், எத்துறையிலும் நம்மால் சாதிக்க முடியும்'' என்கிறார் இன்பசேகர்.

ஐஏஎஸ் படிப்பில் தேறிவிட்டீர்கள்? என்ன லட்சியம் என்று கேட்டால்,"" கல்வி இருந்தால் ஒழுக்கம் தானாக வரும். வறுமை குறையும், விழிப்புணர்வு ஏற்படும். எனவே கல்வி வாழ்க்கைக்கு அவசியம். விவசாய நாடான இந்தியாவில் விவசாயத்திற்கும் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியும். எனவே நான் கல்விக்கும், விவசாயத்திற்குமே அதிக முக்கியத்துவத்தைக் கொடுப்பேன்'' என்கிறார் அவர்.

இன்பகேகரின் வெற்றியைக் குறித்து மலைத்துப் போயிருக்கிறார்கள் அவரது பெற்றோர். ""நாங்கள் இதுவரை கலெக்டர்களை தூரத்தில் நின்று மட்டுமே பார்த்திருக்கிறோம். தற்போது எங்கள் வீட்டிலேயே ஒரு கலெக்டர் இருப்பது தாங்க முடியாத மகிழ்ச்சியைத் தருகிறது'' என்கிறார்கள்.

27 வயதில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பின்னர் இன்பசேகர், தனது வெற்றிக்கான ரகசியத்தை தான் படித்த பள்ளிகளில் மட்டுமல்லாமல், நீலகிரி மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசு பள்ளிகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள மாணவர்களைச் சந்தித்து அவர்களையும் சிவில் சர்வீஸ் தேர்வெழுத ஆர்வத்தைத் தூண்டி, நம்பிக்கை விதைகளை ஊன்றி வருகிறார் இன்பசேகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com