சுய முன்னேற்றம் - 3: எட்டும் வரை எட்டிப் பிடி!

""தினம் காலையில் எழுந்து அமைதியாக அரைமணி நேரம் யோகாசனப் பயிற்சி செய்து விட்டுப் பிறகு ஒரு மணி நேரம் படித்துப் பார்... கூட ஒரு பத்து மார்க் அதிகமாகக் கிடைக்கும்'' என்று ஒரு மாணவனிடம் சொன்னேன்.
சுய முன்னேற்றம் - 3: எட்டும் வரை எட்டிப் பிடி!

""தினம் காலையில் எழுந்து அமைதியாக அரைமணி நேரம் யோகாசனப் பயிற்சி செய்து விட்டுப் பிறகு ஒரு மணி நேரம் படித்துப் பார்... கூட ஒரு பத்து மார்க் அதிகமாகக் கிடைக்கும்'' என்று ஒரு மாணவனிடம் சொன்னேன்.

""சார்..அதெல்லாம் எதுக்கு சார்?... எக்ஸôமுக்கு ஒரு மாசம் முன்னாடி படிச்சே நான் எழுபது மார்க்குக்கு மேலே வாங்குறேன். அதே போதும் சார்'' என்றான்.

இவன் தினமும் படித்தால் எழுபது மார்க் என்ன, ஸ்டேட் முதல் ரேங்க்ல கூட வரலாம் இல்லயா?

உங்களிடமுள்ள திறமைக்கான முழுப்பலனையும் நீங்கள் அடைய வேண்டும். நீங்கள் 80 மதிப்பெண்கள் வாங்கத் தகுதியுடையவராக இருந்து 79 மதிப்பெண்களே வாங்குவீர்கள் என்றால் அது தேர்வில் தோற்றதற்குச் சமம். 50 மதிப்பெண்களே வாங்கக் கூடிய மிதமான திறமையுள்ள ஒரு மாணவன் முயன்று 60 மதிப்பெண்கள் வாங்கினால் அதுதான் உண்மையான முதல் ரேங்க். இதைத்தான் ஆங்கிலத்தில் Maximising ones talent என்பார்கள். திறமையின் எல்லை வரை சென்று போராடி ஜெயிக்க வேண்டும்.

நீங்களே உங்கள் போட்டியாளர்:

செர்ஜி புப்கா (Sergey Bubka) என்ற பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அப்படி இல்லையென்றால் உங்களிடம் விளையாட்டிற்குக் கூட விளையாட்டைப் பற்றி மூச்சுவிடக் கூடாது. ஆம். முதல் தர உலகப் போட்டி விளையாட்டுகளில், போல் வால்ட் என்ற நீளக் கொம்பு வைத்து உயரத் தாண்டுதல் போட்டியில்,இவருக்கிணையாக யாரையும் சொல்ல முடியாது. 1980 - 90களில் இவர் படம் வராத நாளிதழ்களே இருந்திருக்க முடியாது.

ஒலிம்பிக்ஸ் 1988-இல் சியோலில் தங்கப் பதக்கம் வென்றவர். ஆனால் இவரைப் பற்றி அதைவிட முக்கியமான செய்தி இருக்கிறது. உலக அளவில் நடந்த போட்டிகளில் இவர் தனது சாதனையையே பலமுறை முறியடித்திருக்கிறார். ""அப்படியா? எத்தனை முறைகள்?'' என்று அலட்சியமாக வினவாதீர்கள் கேட்டால், மயங்கி விழுந்துவிடுவீர்கள். ஆம் 35 முறைகள் தன் ரெகார்டை தானே முறியடித்துள்ளார்.

1985 இல் 5.88 மீட்டர் தாண்டி உலக சாதனை புரிந்தவர் 12 வருடங்களில் அவ்வுயரத்தை 6.14 மீட்டர் உயரமாக உயர்த்திக் காட்டினார். தனக்கு முன்னால் யாரும் தாண்டவில்லை என்று தெரிந்தும் கூட. இன்னும் விரைவாக ஓடி, தன்னுடைய சாதனை ரெகார்டை தானே முறியடிக்கும் இப்பண்புதான் செர்ஜி புப்காவுக்கு உலகச் சாதனையாளர்கள் பட்டியலில் ஒரு தனியிடத்தைக் கொடுத்துள்ளது.

உள்பக்கம் இருந்து முட்டி முட்டித்தான், முட்டைக்குள் இருந்து பறவைக் குஞ்சு வெளிவருகிறது. நீங்களும் தொடர்ந்து எட்டி எட்டிப் பிடித்துத்தான் எட்டா உயரங்களைத் தொட இயலும். உங்களுக்குள் ஒரு செர்ஜி புப்காவை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே போட்டியாளராக மாறுங்கள்.

உங்கள் திறமை உங்கள் உரிமை:

நீங்கள் பழ மரங்களும் பூஞ்செடிகளும் உள்ள ஒரு சோலைக்கு உரிமையாளராக இருந்தால், அங்கே என்னென்ன பழங்கள் விளைகின்றன? எத்தன வகை மலர்ச் செடிகள் வளர்கின்றன என்று பார்க்க மாட்டீர்களா? இல்லை, எனக்கென்ன என்று விட்டுவிடுவீர்களா?

வாங்கி வந்த புடவையைப் பிரித்துப் பார்த்தால், அது துப்பட்டா மாதிரி சிறிதாக இருந்தால், பரவாயில்லை... துப்பட்டாவையே புடவையாகக் கட்டிக் கொள்கிறேன் என்று எந்தப் பெண்ணாவது சொல்வாரா?

பேரம் பேசி ஒரு டஜன் ஆப்பிள் முன்னூறு ரூபாய்க்கு வாங்கினால் 12 இருக்கிறதா? என்று எண்ணிப் பார்க்க மாட்டீர்களா?

அதுபோல்தானே உங்கள் திறமையும்? நன்றாகப் படித்து நூறு மதிப்பெண்கள் பெற வேண்டிய மாணவர் பத்து மதிப்பெண்களைத் தொலைத்துவிட்டால், அது ஒரு டஜன் பழத்துக்குப் பணம் கொடுத்துவிட்டு பத்துப் பழங்களையே கொண்டுவந்தது போல் ஆகும்.

நூற்றுக்கு நூறு வாங்கக் கற்றுக் கொடுப்பதுதானே வகுப்பறைகள்? அதற்கு நீங்கள் ஏன் விதிவிலக்காக இருக்க வேண்டும்?

இமயமலையில் ஏறி, எவரெஸ்டு சிகரத்தில் முதன் முதலில் வெற்றிக் கொடி நாட்டிய டென்சிங் கிடம் கேட்டார்கள், ""எவரெஸ்டு சிகரத்தை எட்டிப் பிடிக்க வேண்டுமென்று ஏன் தோன்றியது? என்று.

""அது அங்கே இருக்கிறது என்ற காரணம் போதாதா?'' என்று பதில் சொன்னார் டென் சிங்.

அதே போல ஏன் நூறு மார்க் வாங்க வேண்டுமென்றால், ""அது வினாத் தாளில் இருக்கிறதே.. அந்தக் காரணம் போதாதா?'' என்ற பதிலையன்றோ நீங்கள் சொல்ல வேண்டும்? இதுதான் சாதாரணத் தேர்வுக்கும் (pass exam) போட்டித் தேர்வுக்கும் (competitive exam) உள்ள வித்தியாசம். சாதாரணத் தேர்வில் பாஸ் மார்க் வாங்கினால் வெற்றி. போட்டித் தேர்வில் முதலிடங்களைப் பெற்றால்தான் வெற்றி. போட்டியில் ஜெயிப்பவன் தான் வாழ்க்கையில் பாஸ் ஆவான்.

உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வயதும் வாய்ப்பும் தடைகளாக இருக்கக் கூடாது.

பிகாரைச் சேர்ந்த ததாகத் அவதார் துளசி பதினேழாவது வயதில் ஐஐடி-இல் இயற்பியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூர் தனது முதல் கவிதையை எழுதிய போது அவருக்கு வயது எட்டு. தனது பதினைந்தாவது வயதிலேயே 72 மேள கர்த்தா ராகங்களிலும் பாடல் எழுதி இசையமைத்த பெருமைக்குரியவர் நம்நாட்டின் இசைச் செல்வமாக விளங்கும் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா.

அதிக வயது ஆவதும் திறமைகளை வளர்த்துக் கொள்ள ஒரு தடையல்ல. 23 மொழிகளைக் கற்றறிந்த தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமன், தனது 95-வது வயதில் அரபு மொழியைக் கற்றுக் கொண்டு, திருக்குரானை மூலத்தில் படித்து ஆய்வு செய்தார் என்பது இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.

மறைந்த ஓவிய மேதை கோபுலு வயதான காலத்தில் ஸ்ட்ரோக் வந்து வலதுகை பயன்படாதிருந்த நிலையில், இடது கையால் ஓவியம் வரையப் பழகி, அதில் திறமையை வளர்த்துக் கொண்டு முன் போலவே ஓவியம் வரையத் தொடங்கினார் என்றால், இருக்கும் திறமைகளைச் சாக்கு போக்கு சொல்லாமல் நமது இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டாமா?

இளைஞர்களே உங்களிடமுள்ள திறமை வளர வேண்டும் என்றால் அத்திறமையைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள். எத்தனை திறமை உங்களுக்குள் இருக்கிறதோ அதை முழுதும் பயன்படுத்துங்கள். போட்டிகளை எதிர் கொள்ளுங்கள்.

எனக்குப் பிடித்த ஒரு விளம்பரம்:

பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த சுட்டிப் பையன், சமையலறையில் செய்து வைத்திருக்கும் குலாப் ஜாமூனில் இரண்டை எடுத்துக் கொண்டு ஓடுகிறான்.

""என்ன விஷயம்?'' என்றார் தந்தை.

அம்மா சொல்கிறாள்: ""இவன் இன்று பள்ளி ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவது இடத்தில் வந்திருக்கிறான்''

""அப்படியா வெரி குட்.. ஆமாம், எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்?''

""இரண்டு பேர்'' சொல்லிவிட்டு பையன் மறுபடி ஓடிவிடுகிறான்.

ஆம் எல்லாவற்றிற்கும் திறமை வேண்டும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com