

1 முதல் 100 நானோ மீட்டர் தடிமனில் அமைந்துள்ள துகள், நானோ துகள்கள் என அழைக்கப்படுகின்றன. 100 கோடியில் ஒரு பங்காக உள்ள நானோ துகள்களை சாதாரணமாகப் பார்க்க முடியாது. நுண்ணோக்கி போன்ற அறிவியல் சாதனங்களின் மூலமாகவே அவற்றைப் பார்க்க இயலும். அவ்வளவு சின்ன்...னது!
""வெள்ளி, தங்கம், தாமிரம் ஆகியவற்றின் நானோ துகள்களைப் பயன்படுத்தி, உணவுப் பொருள்களில் உள்ள நச்சுத் தன்மையைக் கண்டறிய முடியும்'' என்கிறார் காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் வேதியியல்துறை தலைவர் ஆப்ரஹாம் ஜான்.
""எப்படி?'' என்று கேட்டோம்.
""நானோ துகள்களின் தடிமனைப் பொருத்து, அவற்றின் நிறம் மாறுபடும். வெள்ளி நானோ துகள்கள் மஞ்சள் நிறத்திலும், தங்க நானோ துகள்கள் சிவப்பு நிறத்திலும் காணப்படும்.
மாம்பழம், திராட்சை போன்ற பழ வகைகளைப் பூச்சி,வண்டு தாக்காமல் இருக்க மேலத்தியான் கலந்த பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மேலத்தியான் பூச்சிக் கொல்லி மருந்து அடிக்கப்பட்ட பழங்களைச் சாப்பிட்டால், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்குகின்றன. கருவுற்ற பெண்கள் இந்தப் பழங்களைத் தின்றால், அது வயிற்றிலுள்ள குழந்தையைப் பாதித்துவிடும். அந்த அளவுக்கு மேலத்தியான் கலந்த பூச்சிக்கொல்லி மருந்தின் வீரியம் உள்ளது. மேலத்தியான் கலந்த தண்ணீரை குடிக்கும் விலங்களும், நோய்களால் பாதிக்கப்படுகின்றன. இந்த பூச்சிக் கொல்லி மருந்து நாம் உண்ணும் பழங்களில், உணவுகளில் இருக்கிறதா? என்பதைக் கண்டறிய முடியும். குறிப்பாக, சில்வர் நானோ துகள்களின் மூலம் ஒரு மில்லி கிராமுக்குக் குறைவாக மேலத்தியான் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் கண்டறிந்துவிட முடியும்.
பால்பவுடரில் மெலமைன் என்ற வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை பால்பொருள்களை பயன்படுத்தும் போது, புற்றுநோய் பாதிப்பு ஏற்படும். தங்க நானோ துகள்களைப் பயன்படுத்தி, மெலமைன் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டறிய முடியும்.
அன்றாடம் பயன்படுத்தப்படும், பிளாஸ்டிக் கப், டம்ளர் உள்ளிட்ட பொருகளில் பிஸ்ஃபினால் என்ற வேதிப் பொருள் கலந்துள்ளது. இதனால், புற்றுநோய் ஏற்படும் என்பதை அறிந்து, வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. பிஸ்ஃபினாலின் பாதிப்பு உடனடியாகத் தெரிவதில்லை. மெல்ல கொல்லும் விஷம் அது.
நானோ துகள்களைப் பயன்படுத்தி, உணவுப் பொருள்களில் உள்ள நச்சுத் தன்மையை சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு ஏற்ற தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து, (ஸ்ட்ரிப்) வடிவில் நானோ துகள்களை விற்பனை செய்ய வேண்டும். அதைப் பயன்படுத்தி உண்ணும் உணவில் நச்சத் தன்மையில்லை என்பதைப் பொதுமக்களை தெரிந்து கொள்ள முடியும். இதற்கான ஆராய்ச்சிகளை விரைவில் தொடங்க வேண்டும்'' என்றார் ஆப்ரஹாம் ஜான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.