இந்திய அணுக் கருவியலின் தந்தை!

இந்தியாவின் பாதுகாப்புக்குத் தேவையான அணு ஆயுதங்களும் வல்லரசு நாடுகளுக்கு இணையாக நம்மிடம் இன்று உள்ளன. இவற்றுக்கு அடிகோலியவர், "இந்திய அணுக்கருவியலின் தந்தை' என்று அழைக்கப்படும் டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா.
இந்திய அணுக் கருவியலின் தந்தை!

இந்தியாவின் பாதுகாப்புக்குத் தேவையான அணு ஆயுதங்களும் வல்லரசு நாடுகளுக்கு இணையாக நம்மிடம் இன்று உள்ளன. இவற்றுக்கு அடிகோலியவர், "இந்திய அணுக்கருவியலின் தந்தை' என்று அழைக்கப்படும் டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா.

1909 அக்டோபர் 30-இல் மும்பையில் வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்த பாபா, இளம் வயதிலேயே படிப்பிலும் அறிவியல் ஆராய்ச்சியிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். தனது தந்தையின் விருப்பப்படி பிரிட்டன் சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து எந்திரவியலில் பட்டம் (1930) பெற்ற பாபா, வெளிநாடுகளின் அறிவியல் வளர்ச்சியால் கவரப்பட்டார்.

பிறகு, கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) என்ரிகோ, ஃபெபெருமி போன்ற வெளிநாட்டு பிரபல விஞ்ஞானிகளுடன் இணைந்து அவர் ஆராய்ச்சி மேற்கொண்டார். "காமா கதிர்களைக் கவர்வதில் எலக்ட்ரான் பொழிவுகளின் பங்கு' என்ற ஆய்வுக் கட்டுரையால் அவருக்கு நியூட்டன் கல்வி உதவித்தொகை மூன்றாண்டுகளுக்குக் கிடைத்தது. 1934-இல் முனைவர் பட்டம் பெற்றார் பாபா.

1935-இல் துகள் மின் இயக்கவியலில் (Quantum ElectroDynamics) எலக்ட்ரான் - பாசிட்ரான் நுண்துகள்களிடையிலான கதிர்வீச்சுச் சிதறல் குறித்த பாபாவின் சிறப்பான ஆய்வறிக்கை ராயல் சொûஸட்டி இதழில் வெளியானது. பின்னாளில் அதற்கு "பாபா கதிர்வீச்சுச் சிதறல்' என்று (Bhabha Scattering) பெயரிடப்பட்டது.

1937-இல் ஜெர்மனி நாட்டு விஞ்ஞானி ஹைட்லருடன் இணைந்து அவர் மேற்கொண்ட அண்டக்கதிர் (Cosmic rays) தொடர்பான ஆராய்ச்சி அவருக்கு மிகுந்த புகழைத் தந்தது. அவற்றில் "மேசான்' (Meson) எனப்படும் அடிப்படைத் துகள் இருப்பதை பாபா கண்டறிந்தார்.

இரண்டாம் உலகப்போர் துவங்கியபோது (1939) தாய்நாடு திரும்பிய பாபா, பெங்களூரில் இயங்கிய இந்திய அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார். அதன் தலைவராக இருந்தவர் நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானியான சர் சி.வி.ராமன். அப்போது அவருக்குக் கிடைத்த டாடா நிறுவனத்தின் ஆராய்ச்சி நிதியுதவியைக் கொண்டு, அண்டக் கதிர் ஆராய்ச்சி மையத்தை நிறுவினார். அணுக் கருவியலில் (Nuclear Physics) இந்தியாவின் துவக்கத்துக்கான முதல் புள்ளி அதுவே.

1941-இல் பெருமைக்குரிய லண்டன் ராயல் சொûஸட்டிக்கு ஆய்வு உறுப்பினராக பாபா தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றியபோது அணுக்கருவியல் உள்ளிட்ட உயர் இயற்பியல் துறைகளில் ஆராய்ச்சி செய்யத் தேவையான போதிய வசதிகள் நமது நாட்டில் இல்லை என்பதை உணர்ந்த பாபா, நாட்டின் பெரும் செல்வந்தராகத் திகழ்ந்த தொரப்ஜி ஜாம்ஷெட்ஜி டாடாவின் உதவியை நாடினார். அவரது உதவியுடன் 1944-இல் அடிப்படை அறிவியலுக்கான டாடா ஆராய்ச்சி நிறுவனத்தை ((tifr- Tata Institute of Fundamental Research) பாபா மும்பையில் நிறுவினார். அங்கு பல விஞ்ஞானிகள் உருவானார்கள்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பிரதமர் நேருவிடம் விவாதித்து, இந்தியா அணு ஆராய்ச்சியில் தன்னிறைவு பெற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார் பாபா. அதன் விளைவாக, 1948-இல் இந்திய அணுசக்தி ஆணையம் (Atomic Energy Commission of India) நிறுவப்பட்டது. அதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், 1966-இல் இறக்கும் வரை தனது தலைமைப் பண்பாலும் கடும் உழைப்பாலும் அதை பல மடங்காக விரிவாக்கினார்.

பிற்பாடு மும்பை மாகாண அரசு டிராம்பே என்ற இடத்தில் வழங்கிய அரசு நிலத்தில் 1954-இல் டிராம்பே அணு ஆராய்ச்சி மையத்தைத் துவங்கினார் பாபா. அது தற்போது பாபா அணு ஆராய்ச்சி மையம் (ஆஅதஇ) என்ற பெயரில் இயங்குகிறது.

மின்னணுவியல், விண்வெளி அறிவியல், நுண்ணுயிரியல், மின்காந்த வானியல் துறைகளிலும் பாபா ஆர்வம் கொண்டிருந்தார். விண்வெளித் துறையில் நாடு முன்னேறுவதற்காக, இளம் விஞ்ஞானி விக்ரம் சாராபாய் தலைமையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு அமையத் தூண்டுகோலாக இருந்தார் பாபா.

இந்தியா உலக அரங்கில் பாதுகாப்புடன் விளங்க வேண்டுமானால் அணு ஆயுதம் தயாரிக்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர் பாபா தான். அவரையே இந்திய அணு ஆயுதத் தயாரிப்பு திட்டத்தின் தலைவராகவும் நியமித்தார் பிரதமர் நேரு.

உலக அளவிலான அணுவியல் கழகத்தின் இந்தியப் பிரதிநிதியாக இருந்தபோது, அமைதிக்கான அணு ஆற்றலின் பயன்பாடாக அணு மின்சக்தியை உலக நாடுகளுக்குப் புரியச் செய்தவர் பாபா.

உலகிலேயே வேறெங்கும் இல்லாத புதுமையாக, தோரியம் தனிமத்தைப் பயன்படுத்தி அணு மின்சக்தி உற்பத்தி செய்யும், மூன்றுநிலை அணு மின்சக்தி திட்டத்தை (Three- Stage Nuclear Power Programme) வடிவமைத்தவர் ஹோமி ஜஹாங்கீர் பாபா.

அணு ஆற்றலுக்கு அடிப்படைத் தனிமமான யுரேனியம் இந்தியாவில் குறைவாக இருப்பதால், தோரியம் தனிமத்தை பாபா தொலைநோக்குப் பார்வையுடன் தேர்வு செய்தார். நமது நாட்டில் 5 லட்சம் டன் தோரிய இருப்பு உள்ளதால், இத்துறையில் நீண்டகாலத்துக்கு தன்னிறைவுடன் நம்மால் செயல்பட முடியும்.

தென் இந்திய கடற்கரைகளில் அதிக அளவில் கிடைக்கும் மானசைட் (monazite) கனிமப் படிவுகளில் இருந்து பெறப்படும் தோரியம் தான் இப்போது நம்மை அணு ஆற்றல் நாடாக்கி இருக்கிறது. இதற்கு மூலகாரணமானவர் பாபா.

இவ்வாறாக இந்தியா அணுவியலில் முன்னேற உறுதியான அஸ்திவாரம் அமைத்த ஹோமி ஜஹாங்கீர் பாபா, 1966, ஜனவரி 24-ஆம் தேதி வியன்னாவில் நடைபெற்ற உலக அணுவியல் கருத்தரங்கிற்குச் செல்லும் வழியில் விமான விபத்தில் உயிரிழந்தார். அதன் பின்னணியில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. இருந்ததாக பிற்பாடு தகவல்கள் வெளியாகின.

உலக அளவில் முக்கியமான அணுவியல் விஞ்ஞானியாகத் திகழ்ந்த பாபாவுக்கு 1954-இல் பத்மபூஷண் விருது வழங்கி இந்திய அரசு கெளரவப்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com