தொழில் முனைவோராகி...சாதிக்க விரும்புகின்றவர்களுக்கு!

படித்தவர்களில் பலருக்கு வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது.
தொழில் முனைவோராகி...சாதிக்க விரும்புகின்றவர்களுக்கு!
Updated on
1 min read

படித்தவர்களில் பலருக்கு வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் சிலருக்கோ, தாமும் தொழில் தொடங்கி பலருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென்ற எண்ணம், ஆர்வம் எப்போதும் அவர்களுடைய அடிமனதில் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

தொழில் முனைவோராக வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதுமா? அதுமட்டுமே வெற்றிக்கு வழிவகுக்காது. அதற்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு, திறமை எல்லாம் அவசியம், தேவை. அது மட்டுமா? தொழில் நடத்துவதற்கு தேவையான இடத்தை தேர்வு செய்தல், தொழிலை துவங்கி நடத்துவதற்கான முன் அனுபவம், பயிற்சி ஆகியவையும் அவசியம்.

தோல்வி ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்வதற்கான தளராத முயற்சி, தொழில் அனுபவம் உள்ளவரை பணிக்கு அமர்த்தி அவர்களிடமிருந்து ஆலோசனை பெறுதல், தொழில் முன்னேற்றத்திற்கு புதிய உத்திகளைக் கையாளுதல், மற்றவர்கள் பின்பற்றாத புதிய முயற்சிகளை எடுத்தல், நுகர்வோரை அல்லது வாடிக்கையாளரைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான கவர்ச்சித் திட்டங்கள் போன்ற பல அம்சங்களைக் கையாளும் போதுதான் தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். வெற்றி பெற்ற தொழில் முனைவோர் பலருக்கு இத்தகைய திறமைகள் இருப்பதை நாம் கண் கூடாகப் பார்த்து வருகிறோம்.

ஒரு தொழிலை சிறப்பாக நடத்திச் செல்வதற்கு திட்டமிடல், செயலாக்கம், சுய மதிப்பீடு ஆகியவை முக்கிய காரணியாக உள்ளது.

திட்டமிடல்: தொழில் தொடங்குபவர்களுக்கு திட்டமிடல் மிகவும் அவசியம். முன்னெச்சரிக்கையான முதலீடு, வங்கிக் கடன், உற்பத்தி பொருள் அல்லது சேவைக்கு உள்ள சந்தை வாய்ப்புகள், திறன்மிக்க பணியாளர்களைக் கண்டறிந்து பணியமர்த்துதல், அவர்களுக்கான ஊதியம் நிர்ணயம் செய்தல், முதலீட்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், பாதகமான அம்சங்கள் ஆகியவை திட்டமிடலின்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.

செயலாக்கம்: சேமிப்பு நிதி, மூலதனம், வங்கிக் கடன் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றைக் கொண்டு எவ்வாறு தொழிலை இடையூறு இல்லாமல் நடத்திச் செல்ல வேண்டும். துவக்கத்திலேயே நுகர்வோரைக் கவர்வதற்கான புதிய உத்திகளைக் கையாள வேண்டும்.

சுயமதிப்பீடு: சேவை மற்றும் உற்பத்தியை கவனத்தில் கொள்ள வேண்டும். உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவையின் தரத்தை அடிக்கடி சுயமதிப்பீடு செய்ய வேண்டும்.

முன்னேற்ற படிக்கட்டு: தொழிலைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தொழிலை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும். புதிய அணுகுமுறைகள், வாடிக்கையாளர் அல்லது நுகர்வோருடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் பின்பற்றினால் சிறந்த தொழில் முனைவோராக விளங்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com