

சுய முன்னேற்றம் - 49
முனைவர் வ.வே.சு.
கல்வியாளர்
"ஆதி... இந்த மரத்திலே உனக்குப் பிடித்த பகுதி எது?''
""பழம்... இதிலென்ன சந்தேகம்?''
""அதோ அந்த செடி கொடிகளில் பிடித்தது?''
""பழம்.. இல்லேன்னா... பூ... இல்லைன்னா... காய் கூட ஓகே''
ஆம். மரம், செடி, கொடிகளில் பொதுவாக அனைவருக்கும் பிடித்தது பூவும் பழமும்தான். மாவிலை, வாழை இலை, மருத்துவ குணம் கொண்ட இலைகள், கீரை, வெற்றிலை போன்றவையே இதற்கு விதிவிலக்கு. எனினும் இலைகள் இல்லாமல் தாவரங்கள் இல்லை. இலைகள் இல்லா இடத்தும் பசிய இலைகளில் இருக்கும் பசுங்கணிகத்தை (Chlorophyll) தாவரத்தின் வேறொரு பாகம் ஏற்றுக் கொண்டு அதன் பணியைத் தொடரும். ஒளிச்சேர்க்கை(Photosynthesis) என்ற அடிப்படை உணவுத் தயாரிப்பின் (Primary food production) முழுப்பொறுப்பும் இலைகளில் தான் உள்ளது. எனினும் இதை உணர்ந்து எத்தனை பேர் இலைகளைப் பாராட்டுகின்றனர்?
பாராட்டு கிடைக்கிறதோ இல்லையோ, பணியைத் தொடருவேன் என்று இலைகளைப் போல் இயங்குபவர்கள் முன்னேற்றத்தின் முதல் படியைக் கடந்தவர்கள்.
இலைகள் தரும் படிப்பினை
இலைகள் தனித்திருக்கும்; பெரியனவாக இருக்கும்; சிறியதாக இருக்கும். ஒரே கிளையில் நூற்றுக்கணக்காக இருக்கும். வெவ்வேறு வடிவங்களில், வண்ணங்களில் இருக்கும். இலை ஓரங்கள் வளைந்திருக்கும், வெட்டுப்பட்டிருக்கும், செதில்களாகக் காட்சியளிக்கும். மேற்பரப்புகள் வழவழப்பாய் மின்னும். சில இலைகள் முட்களோடு இருக்கும். இவைபோல் ஓராயிரம் வேற்றுமைகள் காணக் கிடைப்பினும் பணியைப் பொறுத்தவரை அவற்றின் இலக்கு ஒன்றே.
மாணவர்களும் இலைகள் போலத்தான். பல நூறு வேற்றுமைகளோடும், பொருளாதார ஏற்ற தாழ்வுகளோடும், மொழி,இன வேறுபாடுகளோடும் பல வித்தியாசமான பள்ளிகள், கல்லூரிகளில் பயின்றாலும், அவர்களது இலக்கும், இலட்சியமும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன. இதனை உணர்ந்து ஆர்வத்தோடும் கவனத்தோடும் செயல்பட வேண்டும்.
""ஏன்டா டிக்ரி படிப்புல பஸ்ட் கிளாஸ் வாங்கல?''
""என் காலேஜ் சரியில்ல அங்கிள்.. வேற சிடி காலேஜ்ல சேர்ந்திருந்தா நல்லா படிச்சிருப்பேன்.''
இதைவிடத் தவறான மனப்பாங்கு மாணவரிடையே இருக்க முடியாது. தமிழகத்தைப் பொறுத்தவரை பள்ளித் தேர்விலும் பட்டப் படிப்புகளிலும், நகரங்கள் அல்லாத கிராமப் புறங்களில் இருந்து பல மாணவ மாணவியர் வெவ்வேறு துறைகளில் கடந்த பல ஆண்டுகளாக முதலிடங்களைப் பெற்றுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
பிரபலமான பள்ளி அல்லது கல்லூரி மாணவனாகப் புகழ் பெறுவதை விடத், தன் வெற்றியால் தான் படித்த கல்விச்சாலைக்குப் பெருமை சேர்க்கும் மாணவனே திறமை மிகுந்தவன்; பாராட்டுக்குரியவன். பரோடா நகரில் இருக்கும் மகாராஜா சயாஜிராவ் பல்கலைக் கழகத்தைப் பற்றி எத்தனை பேர் அறிவார்கள்? சிதம்பரத்தில் பிறந்த விஞ்ஞானி இராமகிருஷ்ணன் 2009 இல் வேதியியல் துறையில் நோபல் பரிசு பெற்ற பிறகு, உலகே அவர் படித்த அந்த பல்கலைக்கழகத்தை உற்றுப் பார்த்தது. ஆம். எங்கிருக்கிறோம் என்பதைவிட எப்படிச் செயல்படுகிறோம் என்பதில்தான் முன்னேற்றம் அமைந்துள்ளது. காற்றில் அசைந்து கொண்டே இலைகள் கற்றுக் கொடுக்கும் பாடமும் இதுவே.
இலைகள் போல் நிழல் கொடுங்கள்
இலைகள் பிறருக்கு நிழல்தர வேண்டுமென்று, குடைகளைப் போல சூரிய ஒளியைத் தடுப்பதில்லை. உணவு தயாரிக்கும் செயலில் இயற்கையாக ஈடுபடும் போது அவை சூரிய ஒளியை எடுத்துக் கொள்கின்றது, அச்செயல் பிறருக்கும் நன்மையாக அமைகின்றது. நாம் நமது பணியைச் செவ்வனே செய்து முடித்தால் அதன் பயன் நம்மோடு நின்றுவிடுவதில்லை. அது நாம் எதிர்பார்க்காத வேறு பல நிலைகளிலும் பிறருக்குப் பயன் தரக்கூடும் என்ற அரிய உண்மையை இலைகள் சொல்கின்றன. இதைப் புரிந்து கொள்ளும் மாணவர்கள் முன்னேற்றம் என்பதன் முழுமையான பொருளை உணர்ந்து கொள்வர்.
முனைவர் பட்டத்துக்கான ஆய்வேட்டை மதிப்பீடு செய்ய நடக்கும் நேர்முகத் தேர்வில் (Ph.D- Viva-Voce), ""நீங்கள் மேற்கொண்ட ஆய்வின் பயன் என்ன?'' என்று எக்ஸôமினர் கேட்ட கேள்விக்கு, ""எனக்கு முனைவர் பட்டம் கிடைக்கும்'' என்று ஒரு மாணவர் பதிலளித்தார். கூடியிருந்தவர்கள் சிரித்துவிட்டார்கள். முனைவர் பட்டம் கிடைக்கும் என்பதை விட, அந்த ஆய்வினால் அக்குறிப்பிட்ட துறைக்கோ அல்லது அதன் மூலம் சமுதாயத்துக்கோ என்ன பயன் கிடைக்கும் என்று குறிப்பிடுவது அன்றோ சிறப்பு?
இலைகள் போல் இயங்க இயலுமா?
மனிதர்கள், விலங்குகள் போன்ற எல்லா உயிரினங்களும் சுவாசிக்கும் போது, பிராணவாயுவை (Oxygen) உள்ளிழுத்து, கரியமில வாயுவை (Carbon-di-oxide) வெளியே விடுகின்றன. ஆனால் இலைகள்தாம் இதற்கு மாறாகக் கரியமில வாயுவைப் பயன்படுத்திக் கொண்டு ஆக்சிஜனை வெளியே விட்டு, இயற்கைச் சூழலைத் தூய்மை செய்கின்றன. உயிரியல் செயல்பாட்டின்படி நம்மால் இலைகள் போல் இயங்க முடியாது. நாம் சுவாசிக்கும் போதெல்லாம் இயற்கையை மாசுபடுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இதற்கு மாற்று வழி என்ன? என்பதை மாணவர்கள் அறியவேண்டும்.
வேளாண் துறையிலும், காய்கறி, பழம் பயிரிடும் தோட்டங்களிலும், கோழி, கால்நடை வளர்ப்புப் பண்ணைகளிலும் இன்று ஆர்கானிக் முறையிலே, செயற்கை உரங்கள் ஏதுமின்றி, பசுமை வழியிலே உற்பத்தியைப் பெருக்குவோம் என்று செயல்படுவதை மாணவர்கள் அறிவார்கள். இதன் பொருள் என்ன? நாம் பயன் பெறுவதற்கான செயலில் ஈடுபடும் போது இயற்கையை மாசு படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை நிலை நிறுத்தத்தானே?
ஆம். பாராட்டு கிடைக்கவில்லையென்றாலும் பணிபுரிவதிலும், தம் செய்கைகள் மூலமாகப் பிறருக்கு மரநிழல் போல உதவுவதிலும், சுற்றுச் சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதிலும் தான் உண்மையான முன்னேற்றம் இருக்கிறது.
இலைகள் அசையும் போதெல்லாம், இதைத்தான் சொல்கின்றன. புரிந்து கொள்பவர்கள் தாங்களும் முன்னேறுவார்கள்; தம்மைச் சார்ந்தவரையும் முன்னேற்றுவார்கள்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.