
சுய முன்னேற்றம் - 64
"ஆதி இதென்ன பிடிவாதம்? இந்த முறை நீ கிளாஸ் டூர் போக முடியாதுன்னு அப்பா சொல்லிட்டாரில்ல. ஏன் திரும்பத் திரும்ப கேட்டுக்கிட்டு இருக்கே?''
"அம்மா நீ தானே எல்லாத்துலேயும் விடா முயற்சி வேணும்னு சொல்லிக் கொடுத்தே?''
"உண்மைதான். எடுத்த காரியத்தைத் தொய்வின்றித் தொடர்ந்து செய்வதற்கு பிடிவாதம் என்ற குணம் துணை புரியும். ஆனால் அது விடாமுயற்சி என்ற நிலையிலிருந்து வழுவி, வறட்டுப் பிடிவாதமாக மாறிவிட்டால், முன்னேறங்கள் நிச்சயம் தடைபடும்.''
வாதமும் பிடிவாதமும்
சாதனையாளர்களுக்கும் இலட்சியவாதிகளுக்கும் பிடிவாத குணம் இருந்தது என்பதை வரலாறு சுட்டிக் காட்டுகின்றது. ஆங்கிலம் அல்லது வடமொழியைப் படித்து முன்னேற வேண்டும் என்று பாட்டனார் வற்புறுத்தியும் பிடிவாதமாகத் தமிழ்தான் கற்பேன் என்று சொன்னவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா. நமது தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிடிவாத குணம் உலகறிந்ததே. இங்கிலாந்தில் நடந்த வட்ட மேஜை மாநாட்டிற்கும் அரையாடையோடுதானே சென்றார்? அறிவியல் மேதைகளும், கண்டுபிடிப்பாளர்களும். இவர்களுக்குச் சற்றும் குறையாத பிடிவாத குணம் கொண்டவர்கள் என்பதும் உலகறிந்த செய்தியே.
ஆனந்த விகடனில் ஆசிரியராகப் பணி புரிந்துகொண்டிருந்த போது, தேச விடுதலைப் போரில் குதித்தவர் கிருஷ்ணமூர்த்தி. பத்திரிகையின் அதிபர் எஸ்.எஸ். வாசன், "என் அனுமதி இல்லாமல் நீங்கள் எப்படி சத்யாக்ரகப் போராட்டத்தில் ஈடுபடலாம்? சிறை சென்று திரும்ப வந்தால் இங்கே இடம் கிடையாது'' என்றார். தன் கொள்கைக்காகப் பிடிவாதத்துடன் வேலையைத் துறந்துவிட்டு சிறை சென்று பின் தானே ஒரு பத்திரிகை தொடங்கினார். அவர்தான் கல்கி. அரசியல் துறையிலும் திரைத்துறையிலும், விளயாட்டுத் துறையிலும் சாதனைகள் புரிந்த அனைவரிடமும் இருந்த முக்கியமான குணம், பிடிவாதம்.
பிடிவாதம் நல்ல குணமா?
வாழ்க்கையில் சாதிக்க உதவினாலும் பிடிவாதத்தை நல்ல குணமாகப் பலர் ஏற்க மறுக்கின்றனர். இதற்கு ஓர் அடிப்படைக் காரணமுண்டு. எல்லாராலும் எல்லா நேரத்திலும் தங்கள் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காமல் நிற்க முடியாது. சிலநேரம் சிலர் தங்கள் பிடிவாதத்தை அடுத்தவர் மேல் சுமத்துவார்கள். தாம் கொண்ட பிடிவாதத்திற்காகச் சில பெற்றோர், தங்கள் பிள்ளைகளை அவர்களுக்கு விருப்பம் இல்லாத துறையிலே பயில வைப்பார்கள். இன்னும் சிலர் பிடிவாதமாக அடுத்தவர் வளர்ச்சியைத் தடை செய்வார்கள். வேறு சிலர் பிடிவாதமாக நல்ல அறிவுரைகளைக் கேட்க மறுப்பார்கள். இவையெல்லாம்தான் பிடிவாதம் நல்ல குணம் இல்லையென்ற கருத்தைச் சமுதாயத்தில் உலவ வைக்கின்றது.
தான் பின்பற்றும் கொள்கைகளுக்காகப் பிடிவாதம் பிடிப்பதும், தன் வளர்ச்சியில் கொஞ்சமும் தளராமல் முன்னேறப் பிடிவாதமாக நிற்பதும் தவறென்று யாரும் சொல்ல முடியாது. பிடிவாத குணம் கொண்டோரிடம் உள்ள நல்ல அம்சங்களைப் பார்ப்போம்.
1. புயலையும் எதிர்த்து நிற்கும் துணிவும் நம்பிக்கையும் கொண்டவர்கள்.
2. கொள்கைப் பிடிப்பை எக்காரணத்திற்காகவும் விட்டுக் கொடுக்காதவர்கள்.
3. தனக்கு என்ன வேண்டும் அல்லது தான் என்ன செய்ய வேண்டும் என்பதிலே தெளிவாக இருப்பவர்கள்.
4. இது நம்மால் முடியாது என்று எந்த நிலையிலும் பின்வாங்காமல் நிற்பவர்கள்.
5. விட்டுக் கொடுக்காத தங்கள் குணத்தால் பிறரை ஊக்குவிப்பவர்கள்.
6. தங்களுக்கான வாய்ப்புகளைத் தாமே உருவாக்கிக் கொள்பவர்கள்.
7. எதிர்ப்புகளையும், எதிர்மறை வினைகளையும் கொஞ்சம் வித்தியாசமாக எதிர் கொள்பவர்கள்.
8. எடுத்த காரியம் நிறைவேறத் தியாகம் செய்யக் கூடத் துணிந்தவர்கள்.
9. பேசியோ, வேறேதும் செய்தோ இவர்களை, தாங்கள் மேற்கொண்ட பாதையிலிருந்து திருப்பமுடியாது.
10. தங்கள் தனித் தன்மையை இழக்க விரும்பாதவர்கள்.
11. முடிவுகள் எடுப்பதில் திறம் மிக்கவர்கள். எடுத்த முடிவுக்கான பொறுப்பை ஏற்பவர்கள்.
12. பிறர் கருத்துகளைக் காரணத்தோடுதான் ஏற்பார்கள் அல்லது மறுப்பார்கள்.
இத்தனை நல்ல குணங்களை வளர்க்கும் பிடிவாதத்தை எப்படி தீதென்று சொல்ல முடியும்? நன்மையை நாடிச் செயல் படும் போது இதையே விடாமுயற்சி என்கின்றோம். இன்னும் ஆய்ந்து பார்த்தால் மேலே குறிப்பிடப்பட்ட அத்தனை குணங்களும் விடாது முயற்சி செய்வோரிடம் நிச்சயமாக அமைந்திருக்கும்.
கடிவாளம் தேவை
பிடிவாதமும், விடாமுயற்சியும், இதுவா,அதுவா என்று தேர்ந்தெடுக்க, இரண்டு எதிர்மறை விஷயங்களே அல்ல. அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஒரே திசையில் பயணம் செய்யும் உணர்வுகள். அடிப்படையாகப் பின்னணியில் இருக்கின்ற குணம் பிடிவாதம் வெளியே செயலாகப் படரும் போது அது விடா முயற்சி. ஏ.கே. செட்டியாருக்கு, மகாத்மா காந்தி வாழும் போதே அவரது வரலாற்றை ஆவணப் படம் ஆக்கவேண்டுமென்ற ஆசை அவர் மனத்தில் இருந்தது. அதை எப்படியும் நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் வலுத்தது. அது பிடிவாதம். ஆனால் அதற்காக, மூன்று ஆண்டுகள், நான்கு கண்டங்களில் உள்ள முப்பது நாடுகளில் இலட்சம் மைல்கள் பயணம் செய்து, நூறு காமிராக்காரர்கள் எடுத்த 50000 அடி நீளப் படச் சுருளைச் சேகரித்தார் அதிலிருந்து 12000 அடி ஆவணப்படம் தயாரித்தார். அது விடாமுயற்சி.
வாழ்க்கையிலே கொஞ்சம் பிடிவாத குணம் இருக்க வேண்டும். யார் எதைச் சொன்னாலும் தலையாட்டுவது, முக்கியமான விஷயங்களில் யாராவது முடிவெடுக்கட்டும் என்று ஒதுங்கிக் கொள்வது போன்றவை உங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாகும்.
வேகமாக ஓடும் குதிரைக்கு ஏன் கடிவாளம் போடுகிறோம்? கடிவாளம் என்பது, குதிரையின் ஓட்ட வேகத்தை நம் பிடிக்குள் வைத்திருப்பதற்கே. அதே போல, பிடிவாதத்திற்கும் ஒரு கடிவாளத்தை வைத்துக் கொள்ளுங்கள். விட்டுக் கொடுக்காமலும், தேவை என்று உங்கள் மனம் எண்ணும் போது, கடிவாளத்தைக் கொஞ்சம் தளர்த்தி விட்டுக் கொடுத்தும், உங்கள் பிடிவாதக் குதிரையை ஓட்டப் பழகுங்கள்.
அடிப்படையிலே எதிர்மறைக் குணங்கள் (Negative thoughts) என்று பொதுவாகச் சொல்லக் கூடிய மனிதர்களுக்குள்ள இயல்பான குணங்களை, மறுபடியும் ஆய்ந்து பாருங்கள். பிடிவாதம், சினம், சுயநலம் போன்ற குணங்களும் ஒரு குறிப்பிட்ட சூழலில் முன்னேற்றப் பாதைக்கு உதவுவதாகவே முடியும்.
எதையும் ஒதுக்கித் தள்ளாமல், எல்லாவற்றிலும் உள்ள நற்பண்பையும், ஆக்க பூர்வமான பார்வைகளையும் பயன்படுத்தி முன்னேறுங்கள்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.