
சுய முன்னேற்றம் - 65
"இந்த உலகில் ஏதேனும் ஒன்றை உங்களால் நிச்சயமாக இம்ப்ரூவ் செய்ய முடியுமென்றால், அது உங்களையேதான்' என்று நகைச்சுவையாகச் சொன்னவர் அல்டஸ் ஹக்ஸ்லே (Aldous Huxley) என்ற அறிஞர். அந்த நகைச்சுவைக்குப் பின்னே நிரம்பவும் உண்மை இருக்கின்றது.
பிறரைத் திருத்துவதைவிட நம்மை நாமே சரி செய்து கொள்வது எளிது. ஆனால் அதற்கு மிகுந்த தன்னம்பிக்கையும், பொறுப்புணர்ச்சியும் தேவை. அவை இரண்டையும் அளிப்பதே சுயமுன்னேற்றம் பற்றிய தொடர்கள். இத் தொடர்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தால் போதாது.
வாழ்க்கையிலே அக்கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு செயல்படுத்த வேண்டும். தேவையான கருத்துகளைப் படிப்பது, அதன்படி நடப்பது, அதனால் பயன் பெறுவது என்ற சுழற்சியிலே, நாம் எத்தகைய முன்னேற்றத்தைப் பெற்றுள்ளோம் என்று ஒவ்வொரு மாணவரும் தன் நிலையைக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும் (Stock Taking). அதன் முதல் படி, நடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கப் பழகுவது.
இன்றியமையாத இடைவேளை
எந்தச் செயலைத் தொடர்ந்து செய்தாலும், அவ்வப்போது இளைப்பாறுதலும் இடைவேளையும் தேவை. எட்டு மணி நேரம் வேலை செய்த பிறகு ஒரு மணி நேரமாவது கட்டாயமாக ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உடல்நல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இது ஒரு பொதுவான அறிவுரையே தவிர, மிகுந்த கவனம் தேவைப்படும் சில பணிகளுக்கு அதிகமான ஓய்வும் தேவைப்படலாம். உடல் உழைப்பை முன்னிறுத்திச் செய்யும் தொழில்கள் அனைத்திலும், இடைவேளையின் அவசியத்தைப் பெருவாரியானவர்கள் உணர்ந்துள்ளார்கள். ஆனால் இது எல்லாவகைச் செயல்பாடுகளுக்கும் பொருந்தும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.
தேர்வுக்குப் படித்துக் கொண்டு இருக்கிறீர்களா? ஐந்து அல்லது எட்டு மணி நேரம் படித்து முடித்த பிறகாவது, கொஞ்சம் நின்று திரும்பிப் பார்ப்பது அவசியம்.
1. இதுவரை எவ்வளவு படித்து முடித்துள்ளோம்?
2. படிக்கும் வேகம் எளிதாக இருக்கிறதா இல்லை கொஞ்சம் விரைவைக் கட்டுப்படுத்திக் கொண்டு படிக்க வேண்டுமா?
3. படித்ததில் எத்தனை தகவல்களைச் சரியாக மனத்தில் நினைவு வைத்துக் கொள்ள இயல்கிறது?
4. படிக்கும் முறையில் அல்லது குறிப்புகள் எடுக்கும் முறையில் ஏதாவது மாற்றம் தேவையா?
இவை போன்ற இன்னும் பல வினாக்களை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொண்டு, தவறுகள் இருப்பின் திருத்திக் கொண்டு முன்னேற, இடைவேளை நேரங்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்.
செய்த செயல்களையும் எடுத்த முடிவுகளையும் மறுபடி மனத்திலே அலசிப் பார்ப்பதை திரும்ப எண்ணிப் பார்த்தல் (Reflection) என்பார்கள். இது பற்றி ஆய்வுகள் செய்தவர்கள் முன் வைக்கும் முக்கியமான நன்மைகள் பின்வருமாறு:
1. உங்கள் தவறுகளிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள உதவுகின்றது. தவறுகள் விரும்பத்தகாதவை என்ற நிலையிலிருந்து மாறி, அவை நாம் கற்றுக் கொள்ள உதவும் ஒரு கருவி என்று மாற்றம் பெறுகிறது.
2. புதிய சிந்தனையைத் தோற்றுவிக்கின்றது. செய்த செயல் சரியாகவே இருந்தாலும், இன்னும் அதைச் செம்மையாகவும், நேர்த்தியாகவும் செய்யும் வாய்ப்புக்கு வழிகாட்டுகின்றது.
3. பிறருக்கு வழிகாட்ட உதவுகின்றது. மறுபடியும் நீங்கள் ஒரு செயலைப் பற்றி சிந்திக்கும் போது, பல கருத்துகள் புலப்படும். அவற்றில் நீங்கள் பயன்படுத்தாத சில புதிய வழிமுறைகள் பிறருக்கு உதவுவதாக அமையக்கூடும்.
4. புதிய பார்வையும் புரிதலும் கிடைக்கின்றது. மீள்பார்வையும், கலந்துரையாடல்களும் பல புதிய கோணங்களையும், இதுவரை எண்ணப் போக்கில் சிக்காத புதிய பார்வைகளையும் தரக்கூடும்.
5. புத்துணர்ச்சி கிடைக்கின்றது. தொடர்ந்து செய்துவரும் பணியில் இத்தகைய பிரேக் மனச்சோர்வை அகற்றும் மருந்தாகும். போர் அடிக்காது. திரும்பப் பணியைத் தொடர இது ஒரு புதிய உற்சாகத்தை அளிக்கும்.
கருத்துகளை உள்வாங்கும் நேரம்
உடல் உழைப்புக்கு எவ்வாறு ஓய்வு தேவையோ அதைப் போன்றே, சிந்தனைகளுக்கும் ஓய்வு தேவை. கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கையில்தான், நம் இலக்கு இருக்கும் தொலைவை அடைய எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறோம் என்று புரியும்.
நமது கல்வித் திட்டத்தின் அடிப்படையே, ஒன்றன் மேல் ஒன்றாக பாட திட்டங்களை அடுக்கி... அடுத்த உயர் நிலைக்குக் கொண்டு செல்வதுதானே? இளங்கலைப் பட்டப் படிப்பு முடிந்து முதுகலைப் படிப்புக்கு ஒரு மாணவர் செல்கிறார் என்றால், அவர் ஏற்கெனவே கற்றுக் கொண்டதை மறக்காமல் இருக்க வேண்டும். இவ்வாறு கற்றுக் கொண்டதன் மேல்தான் புதிய கல்வியறிவைப் பெற வேண்டும். பெற முடியும்.
"ஆதி... இலையுதிர் காடுகளின் தன்மை பற்றி விளக்கிச் சொல்லு..''
"சார் அது போன செமெஸ்டர் பாடம். பாஸ் பண்ணியாச்சு. இப்ப ஞாபகம் இல்ல''
"சரி காற்றை எவையெல்லாம் மாசு படுத்துகின்றன? சொல்லு. அது இந்த செமெஸ்டர் பாடம் தானே?''
"ஆமாம்... ஆனா இன்னும் நடத்தல சார்''
இந்த அடுக்கு முறைக் கல்வியைச் (Pyramid type) சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்றால், கடந்து வந்த பாடத்திட்டங்களையும், பயிற்சிகளையும் அவ்வப்போது திரும்பிப் பார்த்து நினைவில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு செமெஸ்டரில் படித்தது, அந்தத் தேர்வில் பாஸ் செய்ய மட்டுமல்ல, அவற்றில் பெற்ற அறிவுத் தளத்தில்தான், அடுத்த நிலைப் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பழைய செமெஸ்டர் பாடங்களையே ஒரு மாணவர் மறந்துவிடுவார் என்றால், பட்டப் படிப்புத் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு அவர் படித்த பாடங்கள் நினைவில் நிற்காமல் போய்விடுமல்லவா? இதைச் சரி செய்ய ஒரே வழி, அவ்வப்போது நாம் படித்த பாடங்களை மறுபடி திரும்பப் பார்க்க வேண்டும். இடைவேளை நேரங்களை, இவை போன்ற செயல்களுக்குப் பயன்படுத்துகின்றவர்களே, வாழ்க்கையில் எளிதாக முன்னேறுகிறார்கள்.
விடைபெறும் நேரம்
இந்தச் சுயமுன்னேற்றத் தொடரைத் தொடர்ந்து படித்துவரும் மாணவர்கள், இதுவரை நாம் பார்த்த கருத்துகளை மீண்டும் படித்துப் பாருங்கள். இவற்றின் பின்னணியில் உங்களுக்கும் சில புதிய கருத்துகள் தோன்றலாம். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல, இத்தொடர் பகிர்ந்து கொண்ட நல்ல செய்திகளைப் படித்து இரசித்ததால் மட்டும் முன்னேற்றங்கள் வந்துவிடாது. அவற்றை வாழ்க்கையில், அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுக்கும்.
தேர்வுகளிலும், பணிகளிலும் வெற்றியும் முன்னேற்றமும் காண வேண்டும் என ஆர்வத்தோடு செயல்படும் அனைத்து மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்து இத்தொடரை நிறைவு செய்கிறேன். மீண்டும் சந்திப்பேன். வணக்கம்.
(நிறைவு பெற்றது)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.