பயம் உங்கள் மனதில் இருக்கிறது!

"ஏன்டா ஆதி உனக்கு தனியா இருக்கும் போது பயம் வருமா? இல்லை... கூட்டத்தில இருக்கும் போது பயம் வருமா?''
பயம் உங்கள் மனதில் இருக்கிறது!
Updated on
2 min read

சுய முன்னேற்றம் - 44
முனைவர் வ.வே.சு.
 கல்வியாளர்
 "ஏன்டா ஆதி உனக்கு தனியா இருக்கும் போது பயம் வருமா? இல்லை... கூட்டத்தில இருக்கும் போது பயம் வருமா?''
 ""சின்ன வயசில ராத்திரியில தனியாப் போக பயப்படுவேன். இப்போ கூட்டத்தில போய் பேசணும்னா பயப்படறேன்.''
 ""ஆக மொத்தம் இரண்டு வேளையிலும் பயம்தான் உனக்கு.''
 ""எனக்கு அந்த பயமெல்லாம் கிடையாது. ஆனா... கரப்பான் பூச்சி, பல்லி இதெல்லாம் பயம்''
 "" சரி விடு. நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு விஷயத்தில பயமே கிடையாது.''
 ""எது சொல்லு''
 ""சொல்றது என்ன? படிப்புல பயம் இருந்தா இப்படியா மார்க் வாங்குவீங்கன்னு வீட்ல திட்டுறது மறந்து போச்சா?''
 ஆம். எல்லாருக்கும் பயம் இருக்கிறது. ஆனால் எதற்கு பயப்படுகிறார்கள் என்பதில்தான் வேறுபாடு. அதுமட்டுமல்ல, சில நேரங்களில் பயம் தேவை என்றும் புரிகிறது.
 அச்சம் என்பது ஆழ்மன உணர்வு:
 அச்சம் இல்லாமல் யாராவது இருக்கிறார்களா என்றால், நிச்சயமாக யாரும் இருக்கமாட்டார்கள். உயிருள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அச்சம் என்பதை ஆண்டவன் இயற்கையிலே வைத்துள்ளான். பாம்புக்கும் கீரிக்கும் உள்ள பகை, அச்சத்தை அடிப்படையாகக் கொண்டது. காட்டில் புலியைப் பார்த்து மான் பயப்படுவது இயற்கை. அதே போல வெள்ளம், நிலநடுக்கம், காட்டுத்தீ, சுநாமி போன்றவற்றைக் கண்டு மனிதன் பயம் கொள்வது இயற்கை. இது போல, பிறக்கும் போதே உடன் பிறந்த அச்சத்தை வெல்வது எளிதா?
 மனிதனின் நீண்டகாலப் பரிணாம வளர்ச்சியிலே அச்சம் என்ற உணர்வை வெல்வதற்கும் அச்சம்தான் பயன்பட்டது. ஆம். இருளைக் கண்டு பயந்த மனிதன் விளக்கைக் கண்டுபிடித்தான். காற்றையும் கடும் மழையையும் பார்த்து பயந்தவன், பாதுகாப்பான வீடுகள் கட்டிக் கொண்டான். மனித வளர்ச்சியின் எந்தப் பக்கத்தைத் திருப்பிப் பார்த்தாலும் அதிகமான கண்டுபிடிப்புகள், அச்சம் கொடுத்த உந்து சக்தியில் பிறந்தவைதாம்.
 மனிதனை ஆட்டிப் படைக்கின்ற உணர்வுகளில் இவ்வுணர்வு, பிறப்பிலிருந்து இறப்பு வரை உடன் வருவது. பிறந்த குழந்தை இரண்டு காரணங்களுக்காகவே அழும் பாலுக்கு அழும். இல்லையென்றால் பயத்தில் அழும். முதல்நாள் பள்ளி செல்லும் குழந்தை ஏன் பயப்படுகின்றது? பழக்கப்பட்டவர்கள் காணாமல் போய்விட்டார்கள்; புதியவர்கள் அருகே சூழ்ந்துள்ளார்கள். எனவே அச்சத்தோடு அழுகிறது. இவ்வுணர்வு குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரிவர்களுக்கும் கூடத்தான் இருக்கிறது.
 எனவேதான் மகாகவி பாரதியார் தனது புதிய ஆத்திசூடியை "அச்சம் தவிர்' என்று தொடங்குகிறார். இதிலே தவிர் என்பது முக்கியமான சொல். அச்சத்தை அழிக்க முடியாது. ஆனால் தவிர்க்க முயற்சி செய்து பழக வேண்டும்.
 அச்சத்தை அண்ட விடாதே:
 ""தம்பி காலேஜ்ல சேருவதற்கான இண்டர்வ்யூ இது. இதுல நான் கேட்ட கேள்வி எதற்குமே நீ பதில் சொல்லலியே.. அட ஏதாவது பதில் சொல்லப்பா''
 அப்போதும் வாயே திறக்காமல் மெளனமாக நிற்கும் பையன். அவனுடைய தந்தை, ""சார் தப்பா நெனச்சுக்காதீங்க. அவனுக்கு சப்ஜெக்ட் தெரியும். ஒங்களப் பாத்து கொஞ்சம் பயப்படறான்''
 ஆம். பல நேரங்களில் நாம் தோல்விக்குக் காரணமாக அச்சத்தைக் காட்டுகிறோம். பிறகு தோல்வியைக் கண்டும் அஞ்சுகிறோம். இந்தச் சுழலில் சிக்கினால் வாழ்வில் முன்னேற்றம் காண முடியாது.
 காசியைச் சேர்ந்த குரங்குகள் மிகவும் பொல்லாதவை முரட்டுத்தனமாய் நடந்து கொள்ளக் கூடியவை. தங்கள் பாதையில் என்னைச் செல்ல விடக் கூடாது என்று நினைத்தன போலும். எனவே நான் செல்லச் செல்ல அவை கிறீச்சிட்டுப் பெரும் சப்தமிட்டபடி என் கால்களைப் பற்றின. அவை நெருங்க நெருங்க நான் ஓட ஆரம்பித்தேன். ஆனால் நான் ஓட ஓட அவையும் பின்தொடர்ந்து ஓடிவந்து என்னைக் கடித்தன. அந்தக் குரங்குகளிடமிருந்து தப்பவே வழியில்லை என்று எனக்குப் பட்டது. ஆனால் அப்போது முன்பின் அறிமுகமில்லாத ஒருவரை வழியில் சந்தித்தேன். அவர் என்னை நோக்கி, ""குரங்குகளை எதிர்த்து நில்'' என்று கூவினார். நான் திரும்பிக் குரங்குகளை எதிர்த்து நின்றேன். அவை பின்வாங்கி, முடிவில் ஓடியே மறைந்தன. இதுவே வாழ்க்கை முழுவதற்கும் படிப்பினையாகும்.
 ""துணிவு என்பது அச்சமற்ற நிலையல்ல. அச்சத்தை எப்படி எதிர்நோக்க வேண்டும், இல்லை கையாள வேண்டும் என்று அறிந்த நிலை. வாழ்க்கையில் எதைக் கண்டும் அஞ்சக் கூடாது. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்'' என்று இரு முறை நோபல் பரிசு பெற்ற மாடம் கியூரி அம்மையார் (Marie Curie) சொல்லியுள்ளார்.
 ""எது உங்களுக்கு அச்சம் ஊட்டுகிறதோ, அதைத் தவிர்க்காமல் அதனை எதிர்கொள்ளுங்கள்'' என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். வாழ்வாதாரப் பிரச்சனைகளைக் கண்டு அச்சப்படாமல் இருக்க வேண்டுமென்றால் அதையும் இளம் வயது முதலே கற்றுக் கொள்ள வேண்டும்.
 எக்ஸாம் ஜுரம் வராமல் இருக்க வேண்டுமென்றால், நிறையத் தேர்வுகளில் பங்கெடுங்கள். இண்டெர்வ்யூக்களில் பேச பயமாக இருந்தால் அல்லது மேடைகளில் பேச பயமாக இருந்தால் அவை போன்ற நிகழ்வுகளுக்கான வாய்ப்புகளை அதிகமாக்கிக் கொள்ளுங்கள். பயம் என்பது, நீங்கள் பயப்படும் விஷயங்களில் இருப்பதில்லை அது உங்கள் மனதில்தான் இருக்கிறது.
 எங்கள் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி (Science Exhibition) ஒருமுறை வைக்கப்பட்ட போது, பாம்புப் பண்ணையிலிருந்து பலவகைப் பாம்புகளைக் கண்ணாடித் தொட்டிக்குள் வைத்திருந்தார்கள். முதல் நாள் அதன் அருகிலே நின்று பார்வையாளர்களுக்கு விளக்கம் தருவதற்கு எந்த மாணவனும் முன் வரவில்லை. காரணம் பயம். வனவிலங்குத் துறை சார்ந்த ஒருவர் மாணவர்களுக்கு, பாம்புகளைத் தொட்டு எடுத்துக் கையாள ஓரிருமுறைகள் கற்றுக் கொடுத்தார். அதன் பிறகு கண்காட்சி நடைபெற்ற அடுத்த மூன்று நாட்களும் அந்த வகுப்பு மாணவர்கள் அச்சமின்றிப் பாம்புகளைக் கைகளில் வைத்துக் கொண்டு விளக்கம் சொல்லிப் பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்தார்கள்.
 ஆம். அச்சம் தரும் சூழலைத் துணிவோடு ஒருமுறையேனும் எதிர்கொள்ளுங்கள். அச்சம் உங்களை விட்டு ஓடியே போய்விடும். அச்சம் நீங்கினால் ஆற்றல் பெருகும்; முன்னேற்றம் வசப்படும்.
 (தொடரும்)
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com