

நாளுக்கு நாள் செல்போன்களின் புதிய வரவு கணக்கிலடங்காதவையாக ஆகிவிட்டன. இன்று இதுதான் நல்ல தரமானது என உறுதிப்படுத்தி வாங்கிய மறுநாளே அதைவிட மேலான வகையில் புதிய ரக செல்போன்கள் களம் காண்கின்றன. இருப்பினும் இந்த வரிசையில் முற்றிலும் மாறுபட்டு குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரக செல்போன்தான் ரோபோஹோன்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஷார்ப் நிறுவனம் தயாரித்துள்ள இந்த செல்போன் பெயரை கேட்டாலே தெரிகிறது, இது ஒருவகையான ரோபோ என்பது.
ஆம், குழந்தைகள் விளையாடும் சிறிய பொம்மை வடிவிலான ரோபாட்டை, செல்போனாக உபயோகிக்கத்தக்க வகையில் வடிவமைத்துள்ளனர். மேலும் இந்த ரோபாட்டால் நடக்கவும் நடனமாடவும் முடியும். குரல் மற்றும் முகம் அறியும் திறன் வசதி உள்ளதால் செல்போன் உரிமையாளரின் வாய்மொழி கட்டளைக்கு அது கீழ்படியும்.
19.5 செ.மீ. உயரம் உடைய இந்த செல்போன் ரோபாட்டின் முன்புறம் 8 எம்.பி. கேமராவும், பின்புறம் 2 அங்குல அளவில் தொடு திரையும் உள்ளது. திரை அளவு சிறியதாக உள்ளதே என கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால், இதில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள், விடியோக்களை இதில் இணைக்கப்பட்டுள்ள புரொஜக்டர் மூலம் திரையில் காணும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு இயங்குதளமாக உள்ளது. 1800 அமெரிக்க டாலர் விலையில் இது அறிமுகமாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.