

இணையத்தில் தகவல்களைத் தேடுபவர்கள் கூகுள் (Google), யாகு (Yahoo), அல்டாவிஸ்டா (Altavista) போன்ற ஒரு சில தேடுபொறிகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்தத் தேடுபொறிகள் (Search Engine) தேடுதல் பெட்டியில் நாம் உள்ளீடு செய்த குறிச்சொற்களை அடிப்படையாகக் கொண்டு, அந்தக் குறிச் சொல் இணையத்தில் எங்கெல்லாம் இடம் பெற்றிருக்கிறது என்பதைத் தேடிப் பட்டியலிடுகின்றன. இவற்றிலிருந்து நமக்குத் தேவையான தகவல்கள் இருக்கின்றனவா? என்று அறிய மேலும் பல தேடுதல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.
இந்தத் தேடுதல் முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, பல்வேறு தகவல்களை இணையத்திலிருந்து எளிமையான முறையில் பெற்றுக் கொள்ள ஒரு தேடுபொறி உதவுகிறது.
இந்தத் தளத்தின் முகப்புப் பக்கத்தில் (Home Page) சில குறிப்புகளின் ஆய்வுகள் (Explore some of things) இத்தளத்தில் செயல்படுத்த முடியும் எனும் தலைப்பின் கீழ் கணிதம் (Mathematics), படிப்படியான தீர்வுகள் (Step by Step Solutions), சொல் மற்றும் மொழியியல் (Words & Linguistics), அளவுகள் மற்றும் அளவீடுகள் (Units & Measures), புள்ளியியல் மற்றும் தரவுப் பகுப்பாய்வு (Statistical & Data Analysis), மக்கள் மற்றும் வரலாறு (People & History), நாட்கள் மற்றும் நேரங்கள் (Dates & Times), வேதியியல்
(Chemistry), பண்பாடு மற்றும் ஊடகம் (Culture & Media), பணம் மற்றும் நிதி (Money & Finance), இயற்பியல் (Physics), கலை மற்றும் வடிவமைப்பு (Art & Design), சமூகப்பொருளாதாரத் தரவு Socioeconomic Data), வானியல் (Astronomy) , இசை (Music), உடல்நலம் மற்றும் மருந்துகள் (Health & Medicine), பொறியியல் (Engineering), என்பன போன்ற பல்வேறு தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
இந்தக் குறிப்பிட்ட தலைப்பில் சொடுக்கி, அத்தலைப்புடன் தொடர்புடைய துறைகளிலான பல்வேறு அரிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆய்வு மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இத்தளம் மிகுந்த பயனளிப்பதாக இருக்கிறது.
இந்தத் தேடுபொறியிலும், பிற தேடுபொறிகளில் குறிச்சொற்களை உள்ளீடு செய்து தேடுவது போல் தேடமுடியும். ஆனால், இந்தத் தேடுபொறி பிற தேடுபொறிகளைப் போன்று முடிவுகளைப் பட்டியலிடுவதில்லை. அதற்குப் பதிலாக, உள்ளீடு செய்த குறியீட்டுச் சொல்லுடன் தொடர்புடைய தகவல்கள் அனைத்தையும் ஒன்றாய்த் திரட்டித் தொகுத்துத் தருகிறது.
உதாரணமாக, இங்கு அறிவியலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் குறித்த தகவலை அறிய வேண்டுமானால், அவரது பெயரை ஆங்கிலத்தில் பட்ர்ம்ஹள் அப்ஸ்ஹ உக்ண்ள்ர்ய் என்று உள்ளீடு செய்து தேடுதலுக்கான பொத்தானைச் சொடுக்கி விட்டால் போதும், தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கையோடு தொடர்புடைய அனைத்துத் தகவல்களும் வந்துவிடுகின்றன. உதாரணமாக, தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி ஓர் ஆவணப் படம் எடுக்கப்பட்டிருந்தால் அந்தத் தகவலும் கூட வந்துவிடுகிறது.
இப்படித் தரப்படும் தகவல்களில் சில சொற்கள் அடிக்கோடிட்டுக் (Underline) காட்டப்பட்டிருக்கும், அடிக்கோடிடப்பட்டிருக்கும் சொல்லின் மேல் சொடுக்கினால், அந்தச் சொல்லுடன் தொடர்புடைய பல்வேறு தகவல்களையும் பெற முடியும்.
ஒவ்வொரு தேடுதலின் போதும், கீழ்ப்பகுதியில் அத்துடன் தொடர்புடைய வினாக்கள் (Related Queries) போன்றவையும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வினாச் சொற்களில் சொடுக்கி அது தொடர்பான கூடுதல் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.
ஒரு சில சொற்கள் இரு வேறு செயல்களுடன் தொடர்புடையதாக இருந்தால் அதில் முக்கியமானதாகக் கருதும் ஒன்றைப் பற்றிய குறிப்புகளை முதலில் தொகுத்துத் தருகிறது. உதாரணமாக, பைத்தான் (Python) என்பது ஆங்கிலத்தில் உயிரினமான மலைப்பாம்பு மற்றும் கணினி நிரலாக்க மொழிகளில் ஒன்றையும் குறிப்பிடுகிறது என்பது பலருக்கும் தெரியும்.
இத்தளத்தில் பைத்தான் (Python) என்று ஆங்கிலத்தில் உள்ளீடு செய்து தேடினால் மலைப்பாம்பு குறித்த தகவல் குறிப்புகளைத் தொகுத்துத் தருகிறது. இருப்பினும் மேற்பக்கத்தில் பைத்தான் எனும் பெயரில் ஒரு காட்டு உயிரினம் (Amusement Park Ride), திரைப்படம் (Movie), கணினி நிரலாக்க மொழி (Programming language), சொல் (Word) போன்றவை இருக்கின்றன எனும் குறிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதன் மூலம் நாம் தேவையானதைச் சொடுக்கி, அது குறித்த தகவல் குறிப்புகளை விரைவாகப் பெற முடியும்.
இந்தத் தளத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்த விவரங்கள் இத்தளத்தின் முகப்புப் பக்கத்திலேயே இடம் பெற்றிருக்கின்றன. இதன் மூலம் இத்தளத்தினைப் பயன்படுத்தும் வழிமுறையினை விரைவில் கற்றுக் கொள்ள முடியும்.
இந்தத் தளத்தைப் பயன்படுத்திப் பார்க்க விரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் http:www.wolframalpha.com எனும் இணைய முகவரிக்குச் சென்று உங்கள் தேடல்களைத் தொடங்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.