குறைந்த முயற்சி...நிறைய லாபம்!

வீடுகள், அலுவலகங்கள், உணவு விடுதிகளில் தற்போது அலங்கார மீன்களைத் தொட்டிகளில் வளர்ப்பது என்பது பெரிய அளவில் நடைமுறையில் உள்ளது.
குறைந்த முயற்சி...நிறைய லாபம்!
Updated on
1 min read

வீடுகள், அலுவலகங்கள், உணவு விடுதிகளில் தற்போது அலங்கார மீன்களைத் தொட்டிகளில் வளர்ப்பது என்பது பெரிய அளவில் நடைமுறையில் உள்ளது. சிறிய வகை அலங்கார மீன்களை சாலையோரங்களில் விற்பனை செய்வதையும் பார்க்க முடிகிறது. அலங்கார மீன்களின் தேவை அதிகரித்து வருகிறது.
 சிறிய அளவில் இந்த மீன்களை இணையாக வளர்க்கலாம். அவ்வாறு இணையாக வளர்ப்பதால் அவை முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் அடைகின்றன. இதைச் சொல்வது எளிதாக இருந்தாலும், அலங்கார மீன் வளர்ப்பு சிறிது அனுபவம் தேவைப்படும் தொழிலாகும்.
 மீன்களின் தன்மை, அவற்றின் இயல்பு, முட்டையிடும் காலம், அவை பொரித்த பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு போன்றவற்றை, கவனமுடன் கண்காணித்து செயல்பட வேண்டும். சில இன மீன்கள் தங்களது முட்டைகளையோ அல்லது பொரித்த குஞ்சுகளையோ கூட தாங்களே தின்று விடுவதும் உண்டு. இவற்றையெல்லாம் கண்காணிக்க வேண்டும்.
 ஆனால் அவ்வாறு செயல்பட்டால் கிடைக்கும் விளைவு மகத்தானதாகும். ஓர் இணையிலிருந்து பல நூறு குஞ்சுகள் கிடைக்கின்றன. அவற்றைச் சில நாட்கள் வளர்த்தால், உருவில் பெரியதாகி விற்பனைக்குத் தயாராகின்றன.
 இந்த மீன்களை வளர்க்க பெரிய குளமோ குட்டையோ தேவையில்லை. பொதுவாக சிறிய அளவிலான சிமெண்ட் தொட்டிகள் இருந்தால் கூட போதும். வீட்டின் மாடி, கொல்லைப்புறம் அல்லது தனி இடங்களில் வைத்துப் பராமரிக்கலாம்.
 சென்னை, தூத்துக்குடி போன்ற கடற்கரை நகரங்களில் பல வகையான அலங்கார மீன்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. சீனாவிலிருந்து தருவிக்கப்படும் வாஸ்து மீன்களும் மிக பிரபலமடைந்து வருகின்றன.
 சிலகாலம் நல்ல அனுபவம் கிடைத்த பிறகு வெளிநாடுகளிலிருந்து நேரடியாக இறக்குமதியும் செய்யலாம்.
 இந்த அலங்கார மீன்களை வளர்த்து விற்பனை செய்யும்போது, அவற்றை வளர்ப்பதற்கான கண்ணாடித் தொட்டிகள், காற்று ஊதும் பம்புகள், நீருக்குள் வைக்க வேண்டிய கூழாங்கற்கள், அலங்கார கற்கள், சிறிய பொம்மைகள், நீர் மற்றும் கடல் தாவரங்கள், ஆயத்த நிலை உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பலவற்றையும் இணைத்து விற்கலாம். இந்தப் பொருட்கள் சென்னை, பெங்களூரு, கோவை போன்ற நகரங்களில் செயல்படும் மொத்த விற்பனையாளர்களிடம் மலிவு விலையில் கிடைக்கின்றன. அல்லது இணையம் வாயிலாகவும் வாங்கலாம்.
 மிகுந்த உழைப்பு இல்லாமல், பொழுதுபோக்காக செய்யக்கூடிய சில வாணிபங்களில் இந்த அலங்கார மீன் வளர்ப்பும் ஒன்றாகும்.
 - ஜெ.வீரநாதன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com