

முப்பரிமாணத்தில் படங்கள் வரைவதெற்கென ஆட்டோகேட், விசுவல் ஸ்டுடியோ 3 டி ஸ்டுடியோ உள்ளிட்ட பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. இவற்றில் வரையப்பட்ட 3 டி மற்றும் அனிமேஷன் படங்களை நாம் கணினியில் இயக்கலாம். மேலும் தொழில்நுட்ப உதவியால் முப்பரிமாண கண்ணாடி அணிந்து திரையில் 3 டி படமாகவே பார்த்து ரசிக்கலாம்.
ஆனால், இவ்வாறு வரையப்பட்ட ஒரு முப்பரிமாண படத்தில் நேரடியாக உள்ளே நுழைந்து நடந்தோ, காரிலோ பயணம் செய்வது போன்ற ஓர் அனுபவம் கிடைத்தால்...!
இந்த அனுபவத்தை ஏற்படுத்தித் தருகிறது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள கருவி ஹோலோ லென்ஸ் (holo lens).
இக்கருவி நாம் சாதாரணமாக அணியும் கண் கண்ணாடியை போன்றதுதான். ஆனால் கணினியில் சிபியு இருப்பது போல இதில் ஹெச்பியு (holo processing unit) உள்ளது. எனவே இதை ஹோலோ கிராபிக்ஸ் கணினி என்றே அழைக்கலாம். இதில் 64ஜிபி ஹார்ட் டிஸ்க், 2ஜிபி ரேம், புளுடூத், வைபை, ஹெட்போன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும் இதிலுள்ள ஹை}டெபனிசன் கண்ணாடி வழியே காட்சிகளை முப்பரிமாணத்தில் காணலாம். இதில் மைக்ரோசாப்ஃட் நிறுவனத்தால் ஏற்கெனவே பல்வேறு காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேற்கொண்டு நாம் வரைந்த முப்பரிமாண படங்களையும் இதில் பதிவேற்றம் செய்து காணலாம்.
ஹோலோ லென்ஸ் உதவியால் காண வேண்டிய முப்பரிமாணப் படங்களை மைக்ரோசாஃப்ட் விசுவல் ஸ்டுயோ 2015 என்ற மென்பொருள் உதவியால் வரைந்து கொள்ளலாம்.
இவ்வாறு நமது கற்பனையில் கலை நுணுக்கத்துடன் முப்பரிமாண முறையில் கணினியில் வரைந்துள்ள பல மாடி கட்டடத்தை ஹோலோ லென்ஸ் கருவியில், புளுடூத், வைபை உதவியால் பெற்றுக் கொண்டு, அந்த கட்டடத்தின் உள்ளே நுழைந்து ஒவ்வொரு அறையும் எவ்வாறு உள்ளது என்பதைக் காணமுடியும். இதனால் எந்த அறையில், எந்த பொருள்களை, எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை நம்மால் முன்கூட்டியே திட்டமிடமுடியும்.
இதுபோலவே, வேற்று கிரக ஆய்வின் போது நாம் அந்த கிரகத்தினுள் சென்று அங்கு நிலைமை எவ்வாறு இருக்கிறது? என்பதை நேரடியாக காண்பது போல ஆய்வு மேற்கொள்ளலாம். மேலும் வாகனத் தயாரிப்பு, மருத்துவம் உள்ளிட்ட சோதனைகளிலும் ஹோலோ லென்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.
கனடா நாட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இக்கருவியின் விலை 3000 அமெரிக்க டாலர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.