சுய முன்னேற்றம் - 59: மறக்கப் பழக வேண்டும்!

""அம்மா  நாலாவது படிக்கும் போது என் கூட சண்டை போடுவானே மது... அவன் இப்ப எங்க கிளாஸ்ல ப்ளஸ் ஒன் சேர்ந்திருக்கான். ஹாய் அப்படின்னான்...
சுய முன்னேற்றம் - 59: மறக்கப் பழக வேண்டும்!
Published on
Updated on
2 min read

""அம்மா  நாலாவது படிக்கும் போது என் கூட சண்டை போடுவானே மது... அவன் இப்ப எங்க கிளாஸ்ல ப்ளஸ் ஒன் சேர்ந்திருக்கான். ஹாய் அப்படின்னான்... நான் பேசாம வந்திட்டேன்''
""ஆதி  இது தப்பு... என்னிக்கோ நடந்ததை இன்னுமா நீ மறக்காம இருக்கே?''
""நீ தானே  நினைவாற்றலை வளர்த்துக்கணும்... எதையும் மறக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கே?''
""இதென்ன இடக்குப் பேச்சு?  வேண்டாத விஷயங்கள மறந்துதான் ஆகணும்.''
ஆமாம். மறக்கக் கற்றுக் கொள்வதும் ஒரு வகையில் படிப்புதான்.
மிகைத் தகவல்களைச் சேமிக்க, கணினியில் ப்ரீ ஸ்பேஸ் (Free Space) இருக்கிறதா? என்று கவலைப்படுவது போல, நமது மூளையைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. கணினியை விடப் பல மடங்கு ஆற்றல் நம் மூளைக்கு உண்டு. என்றாலும் தேவையில்லாத தகவல்களையும், மறக்க வேண்டிய அனுபவங்களையும் விடாப்பிடியாகச் சேமித்து வைத்துக் கொள்வது இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு நிச்சயம் தடையாக அமையும். பயன்படுத்திக் கொண்டுவிட்ட எரிபொருள் கலங்களை, ஒன்றன் பின் ஒன்றாக விடுவித்துக் கொண்டு, மேலே மேலே என்று சீறிப் பாயும் விண்வெளி ராக்கெட்டுகள் போல, தேவையற்ற தகவல்களையும், எதிர்வினைச் சிந்தனைகளை (Negative thoughts) உருவாக்கும் பழைய நினைவுகளையும், உதறித் தள்ளிவிட்டு, வளர்ச்சியை நோக்கிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடர இளைஞர்கள் உறுதியாகச் செயல்பட வேண்டும். அதற்கு உறுதுணையாக என்ன செய்ய வேண்டும்?  மறக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மறதி நல்லது!
 மறக்க வேண்டியதை மறப்பதே உண்மையான கல்வி (True learning is judicious forgetting). உண்மையில் அன்று இந்த வார்த்தைகளின் வலிமையும் ஆழமும் புரியவில்லை. ஆண்டுகள் உருண்டு, அனுபவங்கள் சேரச் சேரத்தான் அதன் முழுப் பொருளையும் உணர முடிந்தது.
இன்றைய மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும், தகவல்கள், அனுபவங்கள் இரண்டும் மிக அதிகமாகவே கிடைக்கின்றன. உலக நடப்புகளையெல்லாம் ஒற்றை விரல் நகர்வில், கைபேசியிலேயே கண்டு படித்துவிடலாம். தேவையென்றால் கைபேசியையே வானொலிப் பெட்டியாகவோ தொலைக்காட்சியாகவோ பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போதுள்ள அதி விரைவு 4ஜி அலைக்கற்றைகள், காலையில் செய்தித்தாள் வரவுக்குக் காத்திருந்த காலத்தைக் கற்கால வரலாறாக மாற்றிவிட்டதல்லவா?  இவற்றில் நல்லவை, கெட்டவை எவை?  தேவையானவை எவை?  என்று தரம் பிரிக்கும் அறிவு இல்லையென்றால், நமது மூளை வெறும் தகவல் குப்பைத் தொட்டி ஆகிவிடும். அனைத்தையும் நினைவிலே பதியவைத்துக் கொள்வது காலத்தையும், கவனத்தையும் இழக்கும் செயலாக மாறிவிடும். தகுதி அறிந்து சிலவற்றை மறவாமல் நினைவிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டும்: சிலவற்றை மறக்க வேண்டும். இதுதான் ஜுடிசியஸ் பர்கெட்டிங்.

தொழில்முறைத் தேவைகள்
கணக்காயர்கள் (Auditors) வழக்கறிஞர்கள் (Advocates) போன்ற தொழில்முனைவோர்கள் (Professionals) தங்கள் வாடிக்கையாளர் அல்லது வழக்காடுபவர் ஆகியோர் பற்றிய அத்துணை விவரங்களையும் நினைவில் கொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை. வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தேடி எடுக்கும் ஆற்றல் இருந்தால் அதுவே போதுமானது. இவை போன்ற துறைகளுக்கான விதிமுறை மாற்றங்களை ஒவ்வோர் ஆண்டும் அரசு பதிப்பித்துத் தொகுதிகளாக வெளியிடுகின்றது. இவற்றையெல்லாம் மனப்பாடம் செய்து நினைவில் வைத்துக் கொள்ளுதல் யாருக்கும் எளிதல்ல. அது தேவையும் அல்ல. வேண்டும் போது அச்சுப்பிரதியிலோ அல்லது மென்பிரதியிலோ (Soft Copy) பார்த்துப் பயன்பெறலாம். அதுமட்டுமல்ல, தொழில்முறையில் அவரவர்கள் தங்கள் துறைகளுக்குள்ளேயே சில குறிப்பிட்ட பகுதிகளில் வல்லுநர்களாகப் (Specialists) பணிபுரிய வேண்டிய அவசியம் நேரும் போது, அனைத்துப் பொதுத் தகவல்களையும் அவர்களால் நினைவு வைத்திருக்க இயலாது.
அறிவியல் மேதை ஐன்ஸ்டைன் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அருகில் ஒரு குறும்புக்காரச் சிறுவன்.
""குட் மார்னிங் சார்...  நீங்கள் தானே மேதை ஐன்ஸ்டைன். ஒரு கேள்வி  கேட்கலாமா?''
""ஆமாம்... குட் மார்னிங். என்ன கேட்க நினைக்கிறாயோ கேள்''
""என்னால் எல்லா எண்களுக்கும் ஸ்கொயர் ரூட் சொல்ல முடியும். அத்தனையும் மனப்பாடம் செய்துள்ளேன். உங்களால் முடியுமா?''
ஐன்ஸ்டைன் சிரித்துக் கொண்டே சொன்னார்:
""அதை மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமென்ன?  தேவைப் பட்டால் கிளர்க் அட்டவணையைப் (Clarkes Table) எடுத்துப் பார்த்துக் கொள்வேன்.  
ஆம். தேவையில்லாதவற்றை மனப்பாடம் செய்வது என்பது, தேவையானவற்றை நினைவு கொள்வதற்குத் தடையாகக் கூட அமையலாம். மறத்தல் என்பது மூளைக்கு ஓய்வையும், புத்துணர்ச்சியையும் தருகின்றது  முக்கியமானவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் திறமையையும் (Recalling efficiency) வளர்க்கின்றது என நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் (Neuroscientists) குறிப்பிட்டுள்ளனர்.
அன்றாட நல்வாழ்வுக்கு மறதி அவசியம்
 என்றோ நடந்த சண்டையின் சொற்காயங்கள், யார் மூலமாகவோ ஏற்பட்ட ஏமாற்றங்கள், அவமானங்கள், எதற்காகவோ அடைகாத்து நின்ற கோபதாபங்கள், தோல்விகள் கொடுத்த வலிகள், சில இழப்புகள் சுமத்திவிட்டுச் சென்ற சோகங்கள் ஆகிய இன்ன பிற சுமைகளை இறக்கி வைக்க உதவும் ஒரே சுமைதாங்கி மறதியல்லவா?
 எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்த மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு மாணவன் ஒருவனால் ஆங்கிலப் பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற இயலவில்லை. திரும்பத் திரும்பத் தோற்றுக் கொண்டிருந்தான். ஆலோசனைக்கு (Student Counseling) அவனை அழைத்துப் பேசிய போது, ஓர் உண்மை புலப்பட்டது. கல்லூரியில் முதலாமாண்டு முதல் தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் அவன் கண்ட தோல்வியை அவனால் கடந்த மூன்றாண்டுகளாக மறக்க இயலவில்லை. அந்த நினைவே அவனுக்குப் பகையாகி அவனது தன்னம்பிக்கையைக் கிள்ளிப் போட்டுவிட்டது. முள்ளாக உள்ளத்தில் குத்திக் கொண்டிருந்த இந்தச் சின்ன நினைவை மறந்த பிறகே அவன் தேர்வில் வெற்றி பெற்றான்.
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று தினந்தோறும் எண்ணம் கொள்ளச் சொன்னவர் மகாகவி பாரதியார். ஒவ்வொரு விடியலும் வெறும் காலக் குறியீடு அல்ல, அது நமது வாழ்வின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் ஒளி என்ற சிந்தனையைப் பெற வேண்டுமானால், மறக்க வேண்டியதை மறக்கப் பழக வேண்டும்.
இறந்த காலச் சுமைகளை இறக்கி வையுங்கள்.  தேவையில்லாதவற்றை மறக்கப் பழகுங்கள்  எதிர்கால வெற்றிகளை எளிதாக அடையுங்கள்.
(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com