
சுய முன்னேற்றம் - 62
கல்வியாளர் முனைவர் வ.வே.சு.
"ஏய் ஆதி பேச்சுப் போட்டியில வின் பண்ணலேன்னு மொகத்த தூக்கி வச்சுக்கிட்டு உக்காந்திருக்கியே, எத்தனை முறை நீ இது மாதிரி போட்டியில கலந்துக்கிட்டு இருக்கே?''
"இதுதான் முதல் போட்டி''
"சரி எத்தனை முறை பேசிப் பார்த்து ப்ராக்டீஸ் பண்ணின?''
"ஜஸ்ட் ஒரு முறை சொல்லிப் பார்த்துட்டேன்''
"போதாது... வெற்றி வேணும்னா நிறைய பயிற்சி பண்ணனும். தொடர்ந்து பண்ணனும். அப்பறம் பாரு... நிச்சயம் ஒனக்கு ப்ரைஸ் கிடைக்கும்''
முயற்சி செய்யும் பல மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை அறியாமல், தேர்வுகளிலும், போட்டிகளிலும் தோல்வியைத் தழுவுகிறார்கள் அல்லது எதிர்பார்த்த மதிப்பெண்களோ, இடங்களோ கிடைக்காமல் மன வருத்தம் கொள்கிறார்கள்.
முயற்சி என்பது எடுத்துவைக்கும் முதல் அடி. ஏறத் தொடங்கும் முதல் படி. வெற்றியை நோக்கி நகரும் பாதையிலே பல படிகள் ஏற வேண்டும். அதற்கான வலிமையையும் திறமையையும் வழங்குவது பயிற்சி என்ற இடையறா உழைப்பு. தகுந்த பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளாமல், வெற்றி வாகை சூடியவர்கள் எந்தத் துறையிலும் கிடையாது என்பதை உணர்ந்தால், முன்னேற்றம் வசப்படும்.
பயிற்சி என்பது தொடர்ந்து செய்வது
எந்த ஒரு புதிய திறமையை வளர்த்துக் கொள்வதானாலும், பயிற்சி தேவை என்பதை, அனைவரும் அறிவர். தவழும் குழந்தை தத்தித் தத்தி நடைப் பயிற்சி செய்த பிறகே நடக்கத் தொடங்குகின்றது. மழலை பேசும் குழந்தை பேசிப் பேசித்தான் சரியாகப் பேசத் தொடங்குகிறது. இந்த அடிப்படையை, அனுபவத்தின் மூலம் அறிந்து வளர்ந்துள்ள மாணவர்கள், வளர்ந்த பிறகு ஏனோ மறந்துவிடுகின்றனர்
திரும்பத் திரும்ப ஒரு செயலைச் செய்யும் போது மூளையின் அடிப்படை யூனிட் ஆன நியூரான்கள் அவற்றை அழுத்தமாகப் பதிவு செய்து கொள்கின்றன என்ற உண்மையைப் பள்ளி அறிவியல் பாடப் பகுதியிலேயே மாணவர்கள் படிக்கிறார்கள். எனினும் அது பலர் மனத்தில் பதிவதேயில்லை. எவையெல்லாம் உங்களுக்கு எளிதாகச் செயல்பட வருகிறதோ, அவை அனைத்தும் பயிற்சியின் மூலமாகவே வருகின்றன.
விளையாட்டு மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்குப் பயிற்சியின் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகவே தெரியும். முன்னாள் கிரிக்கெட் வீரர்களில், கபில் தேவ், இம்ரான் கான் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே நோ பால் (No Ball) போட்டவர்கள் என்ற சாதனை புரிந்தவர்கள். இதற்குக் காரணம் சிறந்த பயிற்சி. அவர்கள் இருவரும் வலைப் பயிற்சியின் போது (Net Practice) ஒருமுறை கூட நோ பால் போட்டதில்லையாம் .
மேலைநாட்டு இசை மேதை மொஸார்ட் (Mozart) பிறவிக் கலைஞனாகப் போற்றப்படுபவர். முதலில் அவர் கம்போஸ் செய்த இசை எதுவும் தனித்துவம் பெற்றுச் சிறப்பாக விளங்கவில்லை. பத்து ஆண்டுகள் கடினப் பயிற்சிக்கும், உழைப்புக்கும் பிறகே அவர் இசை, உலகையே வசமாக்கிய உன்னதத் தன்மையைப் பெற்றது. ஒரு மேதைக்கே, இத்தனை பயிற்சி தேவை என்றால், வெற்றி பெற, நாம் எத்துணை கடினமாகப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
பயிற்சியெனும் படிக்கட்டு
ஒரு சாதாரணத் திறமையை, வலிமை பொருந்திய ஆற்றலாக மாற்றுவது பயிற்சி. தெரு முனைகளிலே நாம் அனைவருமே கிரிக்கெட் அல்லது கால்பந்து ஆடிவிடலாம். ஆனால் அதை அடுத்த நிலைக்கு முன் நகர்த்துவது எது? ஓடத் தெரிந்த ஒரு கோடிப் பேர்களில் ஒலிம்பிக்ஸில் ஓடுபவரை, பயிற்சி மட்டும்தான் தீர்மானிக்கும். பயிற்சி எடுத்துக் கொள்ளாததால் பலபேர் பாத்ரூம் பாடகர்களாகவே விளங்குகிறார்கள். எழுதும் திறமை இருந்தால் போதாது. பயிற்சி ஒன்றே ஒருவரை எழுத்தாளராக மாற்றும். சாதாரணமான பேச்சுத் திறமையை தகவல் தொடர்பு ஆற்றலாக மாற்றுவது எது? இன்னும் பொதுப்படையாகச் சொன்னால், ஒரு தனி மனிதனின் எளிய திறமையை, தொழில் முறைத் திறனாக (Professional Efficiency) உருவாக்கிக் காட்டுவதே பயிற்சி ஆகும். வளர்ந்து வரும் புதிய கார்ப்பரேட் சூழலில் (Corporate Culture), பணிபுரியும் அனைவருக்கும் அவ்வப்போது சிறப்புப் பயிற்சி முகாம்கள் (Special Training Camps)
அளிப்பது பணித் திறனை அதிகரிக்கின்றது என்று கண்டுபிடித்துள்ளனர். இளைஞர்களே, சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பழந்தமிழ் வரிகளை மறந்துவிடாதீர்கள்.
பயிற்சியைப் படிக்கட்டுகளாக நினைப்பவர்கள் கவனிக்க வேண்டிய குறிப்புகள்:
1.உங்களிடம் என்ன திறமை ஒளிந்துள்ளது என்று கண்டு பிடித்து, அதனைத் தொழில்முறைத் தகுதியாக (Professional Eligibility) மாற்றிக் கொள்ளுங்கள்.
2. அந்தத் திறமையைச் சரியாகப் பயன்படுத்தும் முறையை, அதில் தேர்ந்தவரிடம் கற்றுக் கொண்டு, முதல் சில மாதங்களுக்கு அவர் மேற்பார்வையில் பயிற்சி செய்யுங்கள்.
3. பயிற்சியைத் தவறாகத் தொடங்கினால், பயிற்சியே பாதகமாக முடிந்துவிடும். பயிற்சியே முழுமை தரும் (Practice begets perfection) என்ற வழக்கு, பயிற்சி சரியானதாகவும் பெர்பெக்ட் ஆகவும் இருந்தால்தானே உண்மையாக மாறும்.
4. பயிற்சிக்கு விடுமுறையோ விதி விலக்குகளோ இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
5. எந்தத் துறையாக இருந்தாலும், அத்துறைகளிலே உங்களைத் தவிர, வேறு பலரும் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இல்லையென்றால், தூங்கிய முயலை ஆமை வென்ற கதையாகிப் போய்விடும்
6. பயிற்சியைக் கடனே என்று செய்யாதீர்கள். உண்மையான ஆர்வத்தோடு செய்யப் பழகுங்கள்.
பயிற்சியில் வளர்ச்சி
தொடர்ந்து பயிற்சி செய்யும் போது அதிலே தேக்க நிலை வந்துவிடக் கூடாது. அதையும் தாண்டிச் செல்லும் துணிவும் ஆர்வமும் வேண்டும். கபில்தேவ், தோனி போன்ற விளையாட்டு வீரர்கள் முதலில் பேட்ஸ் மேன் என்றுதான் பெயர் பெற்றார்கள். ஆனால் அந்தத் துறையிலே மட்டும் நிற்காமல் ஆல் ரவுண்டர் என்ற சிறப்பையும், பிற துறைப் பயிற்சிகளின் மூலம் பெற்றார்கள்.
கல்வி பயிலும் போதும், பணியில் சேர்ந்த பிறகும், மற்றவரை விட அதிகமாக என்னால் என்ன செய்ய முடியும் என்று எண்ணுபவர்களே முன்னேற்றம் காண விழைபவர்கள். அவர்கள் முழுமை தரும் பயிற்சி முறைகளை என்றும் கைவிட மாட்டார்கள். உங்கள் தனித்துவத்தைக் காட்டி வாழ்வில் வெற்றிச் சிகரங்களைத் தொட, பயிற்சியே பற்றுக்கோடாகும்..
முயற்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இடைப்பட்ட முதன்மைப் பாலம் பயிற்சியே.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.