கணினி யுகத்தில் கையெழுத்து பழகுவதா?

இது பழைய ஜோக். இப்போது பல டாக்டர்கள் மருந்துச் சீட்டைக் கையால் எழுதுவது கிடையாது.
கணினி யுகத்தில் கையெழுத்து பழகுவதா?
Published on
Updated on
2 min read

சுய முன்னேற்றம் - 56
"நான் நிச்சயமா எதிர்காலத்துல ஒரு டாக்டரா வருவேன்னு அக்கா சொல்றாம்மா.. அவ்வளவு நல்லாவா நான் படிக்கறேன்?''
""அய்யோ.. ஆதி...  ஒன் கையெழுத்து அவ்வளவு மோசமா படிக்க முடியாம இருக்குன்னு சொல்றா அக்கா. ஒனக்கு இது புரியலையா?'' -   தங்கை இடைமறித்துக் கேலியாகச் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

இது பழைய ஜோக். இப்போது பல டாக்டர்கள் மருந்துச் சீட்டைக் கையால் எழுதுவது கிடையாது. எல்லாவற்றிற்கும் கம்ப்யூட்டர் வந்துவிட்டது.  இருபதாம் நூற்றாண்டின் கடைசியிலேயே காணாமல் போகத் தொடங்கி, வாழும் நூற்றாண்டில் வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கும் கையெழுத்துப் பயிற்சி(Hand Writing Practice), தொழில்நுட்ப வளர்ச்சியினால் முற்றும் தொலைந்து போய்விடும் அபாயம் உலகெங்கிலும் பரவி வருகின்றது. கையெழுத்து அழகாக இருக்கிறதா? இல்லையா? என்பதல்ல கேள்வி,  கையால் எழுதும் பழக்கம் அறவே நின்றுவிட்டால், அது மாணவர்களின் கல்வி கற்கும் திறனையும், மூளை வளர்ச்சியையும் பாதிக்கும் என்பது இத்துறை சார்ந்த மருத்துவ ஆய்வுகளின் முடிவு. முன்னேற விரும்பும் மாணவர்கள் இந்தக் கருத்தின் முக்கியத்துவத்தை உணரவேண்டும்.

கையெழுத்தே தலையெழுத்து
இப்போதும் கூட நமது நாட்டின் தென்பகுதிகளில் சிறு குழந்தைகளுக்கு முதன்முதலாக எழுத்துக்களைச் சொல்லிக் கொடுக்க, ஒரு தட்டில் நெல் பரப்பி அதன் மீது குழந்தையின் சுட்டுவிரல் பிடித்து எழுதக் கற்றுக் கொடுப்பது வழக்கம். ஆற்றுமணல் பரப்பி அதன் மீது எழுதக் கற்றுக் கொடுத்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர்தான் தமிழ்த் தாத்தா உ.வே.சா.  அதன் பிறகு சிலேட்டும் பல்பமும் வந்தது. அதைத் தொடர்ந்து பயிற்சிக் கையேடுகளும் பென்ஸில்களும் (Exercise notebooks and Pencils) வந்தன. கட்டைப் பேனாக்களும் மைக் கூடுகளும் (Nib-mounted Pen and Inkpots) மறைந்த பிறகு ஊற்று மைப் பேனாக்கள் (Fountain Pen)  பந்துமுனைப் பேனாக்கள் (Ball-point Pens) என்று எழுதுகோல்களின் வகைகள் முன்னேற்றம் கண்டன. இவற்றினிடையே கையால் எழுதும் பழக்கம் மட்டும் மாறாமல் இருந்து வந்தது. ஐந்தாம் வகுப்பு வரையில், தேர்வுகளில் அழகான கையெழுத்துக்கு ஒரு மதிப்பெண் கூடுதலாக அளிக்கும் பழக்கமும் இருந்தது. வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்கள் கைகளால் எழுதியே விண்ணப்பத்தாளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்ற விதிமுறை இருந்தது. நல்ல கையெழுத்து இருந்தால்தான் படிப்பிலும், பணியிலும் முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது. 

தட்டச்சு இயந்திரத்திலும், கணினியிலும் சாவிப் பலகை (Key Board) பயன்பாடு வந்த பிறகு, இன்றைய நிலையில் கையால் எழுதிப் பழக வேண்டுமா? என்பது மாணவரிடையே ஓர் அடிமனக் கேள்வியாக இருந்து வருகிறது. இன்றும் அது அவசியம் என்பதை இளைஞர்கள் உணரவேண்டும். கையெழுத்துக்கும் (Hand Writing) கையொப்பத்திற்கும் (Signature) கூட வித்தியாசம் தெரியாமல் இருப்பதைத் தவிர்த்து, கைகளினால் எழுதும் பழக்கத்தைப் பள்ளிக் காலத்திற்குப் பிறகும் இளைஞர்கள் தொடர வேண்டும்.

சில இணையவழிப் போட்டித் தேர்வுகள் (online competitive exams) நீங்கலாக, மாணவர்கள், பள்ளியிலிருந்து பல்கலைக்கழகத் தேர்வுகள் வரை, கையெழுத்தில்தான் எழுத வேண்டும். தெளிவாகவும் விரைவாகவும் எழுதும் திறமையை வளர்த்துக் கொண்டால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேற முடியும்.

மோசமான கையெழுத்துப் பழக்கம் குறைபாடுள்ள கல்வியின் அறிகுறி என்று சொன்னவர் மகாத்மா காந்தி. சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் பலரும், சிறைகளில் இருந்து கொண்டே நூல்களை எழுதியவர்கள். கிடைத்த எழுதுபொருட்களைப் பயன்படுத்தி தேசிய இலக்கியம் படைத்தவர்கள்.
குழந்தைகளின் உடல், மனம், மூளை மற்றும் அறிவு வளர்ச்சியில், கையெழுத்துப் பழக்கம் முக்கியப்பங்கு வகிப்பதற்கான காரணங்களைப் பல ஆய்வுகள் விளக்கியுள்ளன. அறிவுத்திறம் சார்ந்த செயல்பாடுகளுக்கு (Academic Performance) வலிமை சேர்க்கிறது.

கையால் எழுதுவது நினைவாற்றலையும் (Memory Power), கவனக் கூர்மையையும் (Focus) படைப்புத் திறனையும் (Creativity) வளர்க்கிறது. குழந்தைகளின் மூளைவளர்ச்சி மற்றும் ஒருங்கிணைந்த செயல்களுக்கு (Mental capabilities and Head-Hand coordination) உதவுகிறது. டிஸ்லெக்சியா (Dyslexia) போன்ற சில குறைபாடுகளைக் கண்டறியவும் உதவுகிறது.

ஒரு மொழியைக் கற்றவர் என்றால் அம்மொழியில் எழுதவும், படிக்கவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். சாவிப்பலகை, மொழி எழுத்துகளின் வடிவங்களை அப்படியே அச்சேற்றுமே தவிர, எங்கு தொடங்கி எப்படி ஓர் எழுத்து வடிவத்தை வரைய வேண்டும் என்று சொல்லித் தராது.
கையெழுத்தில் தயாரிக்கப்பட்ட பழைய ஆவணங்களையோ, மூலக் கைப்பிரதிகளையோ (Manuscripts) படிக்கும் அல்லது பயன்படுத்தும் வாய்ப்பினை இழக்க நேரிடும்.

கல்லூரியைத் தாண்டியும் கையெழுத்து தேவை
தனிப்பட்ட முறையில் (Personal) எழுதப்படும் கடிதங்களைக் கையால் எழுதினால்தானே சிறப்பு? 
ஒரு மொழியை அறிந்தவர் அம்மொழி பேசும் நண்பர்களுக்குத் தன் கையெழுத்திலேயே கடிதம் எழுதுவதுதானே நேசத்தைக் காட்டும்? அன்பையும், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், அஞ்சலிகளையும் கையெழுத்தில் எழுதிக் கொடுப்பதுதான் உள்ளத்தைத் தொடும். 
எத்தனை தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், முக்கியத்துவம் கருதிச் சிலவற்றைக் கையெழுத்திலேயே குறித்துக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்கிறது. வங்கிக் கணக்கு எண்கள் (Bank account numbers), கடவுச்சொற்கள் (Pass words) தனிப்பட்ட தொலைபேசி எண்கள் (Personal Phone Numbers) போன்ற முக்கியத் தகவல்களைக் கையால் எழுதிவைத்துக் கொள்வதே பாதுகாப்பு. எல்லாவற்றையும் டிஜிட்டல் சேமிப்புகளாக வைத்துக் கொண்டால், களவாடப்பட்டாலோ கரப்ட் (Corrupt) ஆனாலோ மீட்பது கடினமாகிவிடும்.

மே 2016-இல் அமெரிக்காவில் நடந்த தேசிய கையெழுத்துப் போட்டியில் முதல்பரிசு வென்றவர் அனயா எல்லிக் (Anaya Ellick) என்ற ஏழு வயது சிறுமி. பிறவியிலேயே இருகைகளிலும் விரல்கள் இன்றிப் பிறந்தவர். நல்ல கையெழுத்துப் பழக எதுவும் தடையில்லை என்பதை நிரூபிக்கும் செய்தி இது.
உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதும், நினைவாற்றலை வளர்த்துக் கொள்வதும் சுயமுன்னேற்றத்திற்கு உதவும். இதனை அறிபவர்கள், கணினி யுகத்திலும் கையெழுத்தில் கவனம் செலுத்துவார்கள்.
(தொடரும்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com