

இன்று இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் காற்றாலை, சூரிய ஒளி ஆகிய மரபுசாரா ஆற்றல்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவுக்கு உள்ளது. இதற்கு வித்திட்டவர்களுள் முதன்மையானவர், கேரளத்தைச் சேர்ந்த வளிமண்டலவியல் (Meteorology), இயற்பியல் விஞ்ஞானியான அன்னா மாணி.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் (இன்றைய கேரளம்) பீர்மேடு பகுதியில், சிரியன் கிறிஸ்தவக் குடும்பத்தில், கட்டுமானப் பொறியாளரின் ஏழாவது குழந்தையாக 1918, ஆக. 23-இல் பிறந்தார் அன்னா மாணி. ஏலக்காய் தோட்டம் வைத்திருந்த அவரது குடும்பத்தில் பண வசதிக்குக் குறைவில்லை.
சிறு வயதிலேயே மாணிக்கு புத்தக வாசிப்பில் அதிக ஈடுபாடு. 12 வயதில் தனக்கு அளிக்கப்பட்ட வைரக் கம்மல்களை மறுத்துவிட்டு "என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா' நூலை பிறந்தநாள் பரிசாகப் பெற்றார் என்பதிலிருந்தே அவரது படிப்பார்வம் புலப்படும்.
1925-இல் மகாத்மா காந்தி அழைப்பு விடுத்த வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தால் கவரப்பட்ட மாணி, வாழ்நாள் முழுவதும் காதி ஆடையையே அணிந்தார்.
மருத்துவம் படிக்க விரும்பியபோதும், இயற்பியலில் கொண்ட ஆர்வம் காரணமாக, சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு இயற்பியலிலும் வேதியியலும் பி.எஸ்சி. ஹானர்ஸ் பட்டம் (1939) பெற்றார்.
1940-இல் கல்வி ஆராய்ச்சிக்கான உதவித்தொகை பெற்ற மாணி, பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இணைந்தார். அங்கு புகழ்பெற்ற விஞ்ஞானி சர். சி.வி.ராமனின் வழிகாட்டுதலில், வைரம், மாணிக்கம் ஆகியவற்றின் நிறமாலையியல் பண்புகளை ஆய்வு செய்தார்.
அப்போது வைரத்தின் ஒளிவிடும் தன்மை குறித்த 5 ஆய்வேடுகளை அவர் எழுதினார். அந்த ஆய்வேடுகளை சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்குச் சமர்ப்பித்தார். ஆனால், ஆராய்ச்சிப் பட்டத்துக்கு முன் பெற வேண்டிய முதுநிலை பட்டம் பெறாததால் அவருக்கு பிஎச்.டி. பட்டம் மறுக்கப்பட்டது.
அதையடுத்து 1945-இல் வெளிநாட்டுப் பயிற்சி பெறுவதற்கான உதவித்தொகை பெற்ற மாணி, இங்கிலாந்து சென்றார். அங்கு லண்டன் இம்பீரியல் கல்லூரியில் வளிமண்டலவியல் அளவீட்டுக் கருவிகள் (meteorological instrumentation), அவற்றின் அளவுத்திருத்தம் (calibration), தரநிர்ணயம் குறித்துப் படித்தார்.
1948-இல் நாடு திரும்பிய அவருக்கு முன், சுதந்திர இந்தியாவில் புதிய வாய்ப்புகள் காத்திருந்தன. குறிப்பாக, வளிமண்டலவியலில் புதிய சவால்கள் காத்திருந்தன. மாணி, புணேவிலுள்ள வளிமண்டலவியல் துறையில் (Indian Meteorology Department- IMD) பணியில் இணைந்தார். அதனை தொலைநோக்குக் கண்ணோட்டத்துடன் தலைமை தாங்கி விஞ்ஞானி எஸ்.பி.வெங்கடேஸ்வரன் நடத்தி வந்தார்.
1947-க்கு முன் வானிலை ஆய்வுக்கான தெர்மாமீட்டர் போன்ற சிறிய கருவிகளைக் கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தாக வேண்டியிருந்தது. அவற்றை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான நவீன இயந்திரங்களை நிறுவிய வெங்கடேஸ்வரன், மழைமானிகள், வெப்பமானிகள், வெப்ப வரைபடக் கருவி போன்றவற்றை உருவாக்கினார். அப்பணியால் கவரப்பட்ட மாணி, தனது திறமையை அதற்குப் பயன்படுத்தினார்.
எனினும் உள்நாட்டில் துல்லியமான கருவிகளைத் தயாரிப்பது சவாலானதாகவே இருந்தது. அதற்கென விஞ்ஞானிகள், பொறியாளர்கள் கொண்ட அணியை மாணி அமைத்தார். தவிர தனது கல்வியறிவின் துணைகொண்டு 100 வானிலை (weather) ஆய்வுக் கருவிகளின் (Instrumentation) வரைபடங்களை வரைமுறைப்படுத்தி, அவற்றைத் தயாரிக்கவும் ஏற்பாடு செய்தார். அவை நாடு முழுவதும் நிறுவப்பட்டு, புதிய வானிலை ஆய்வு மையங்கள் செயல்படத் துவங்கின.
தனது பணிக்காலத்தில் பல வளிமண்டல ஆய்வு அறிக்கைகளை மாணி வெளியிட்டார். வளிமண்டல ஆய்வின் ஓர் அம்சமாக, சூரிய ஒளி ஆற்றல், காற்றாற்றல் மீது அவரது கவனம் குவிந்தது. அவற்றை பிரதான ஆற்றல் மூலங்களாக அவர் உணர்ந்தார். ஆனால், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் காற்றின் விசை, சூரிய ஒளிவீச்சு குறித்த தரவுகள் அப்போது இல்லை.
1957-58-இல் சர்வதேச புவி இயற்பியல் ஆண்டு அனுசரிக்கப்பட்டபோது, நாடு முழுவதும் பரவலாக சூரியஒளிக் கதிர்வீச்சை அளவிடும் மையங்களை மாணி அமைத்தார். அவற்றுக்குத் தேவையான கருவிகளையும் உள்நாட்டிலேயே வடிவமைத்தார்.
1960-களில் அவரது கவனம் ஓஸோன் வாயுவின் மீது திரும்பியது. அப்போது ஓஸோனின் முக்கியத்துவம் பெரிய அளவில் அறியப்பட்டிருக்கவில்லை. ஆயினும் அதன் எதிர்கால முக்கியத்துவத்தை உணர்ந்த மாணி, வளிமண்டலத்திலுள்ள ஓஸோனை அளவிடும் ஓஸோன்சோண்ட் (Ozonesonde) கருவியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டார். அவரது ஓஸோன் ஆய்வை கெüரவிக்கும் விதமாக, சர்வதேச ஓஸோன் ஆணையத்தின் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார்.
மாணியின் திறûமையை உணர்ந்த இஸ்ரோ நிறுவனர் விஞ்ஞானி விக்ரம் சாராபாய், 1963-இல் தும்பாவிலுள்ள ராக்கெட் ஏவுதளத்தில் வளிமண்டலக் கண்காணிப்பகத்தை (Observatory) நிறுவுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதை அங்கு அமைத்துக் கொடுத்தார்.
இந்திய வளிமண்டலவியல் துறையில் பல பொறுப்புகளை வகித்த அவர், அதன் துணைத் தலைவராக 1976-இல் ஓய்வு பெற்றார். அதன் பிறகும், பெங்களூரு, நந்தி மலையில் நடுத்தர அலைவரிசை (mm) தொலைநோக்கியை அவர் நிறுவினார். ஆராய்ச்சியே முழுமூச்சாகக் கொண்ட அன்னா மாணி திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்தியாவின் சூரியக் கதிர்வீச்சுத் தரவுகள் கையேடு (1980), இந்தியா மீது சூரியக் கதிர்வீச்சு (1981), இந்தியாவில் காற்றாற்றல் மூலங்கள் குறித்த ஆய்வு (1992) ஆகிய நூல்களை அவர் எழுதியிருக்கிறார். அவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் அடிப்படை ஆவணங்களாக உள்ளன.
காற்றாற்றலின் பயன்பாட்டை உணர்ந்த மாணி, நாடு முழுவதும் 700 மையங்களிலிருந்து காற்றுத்திறன் அளவீடுகளைப் பெற ஏற்பாடு செய்தார். இன்று காற்றாலை மின்சக்தியில் நாடு முன்னேறியுள்ளதற்கு மாணியின் தொலைநோக்குப் பார்வையும் ஒரு காரணம்.
ஓய்வுக்குப் பிறகு பெங்களூரில் வானிலை அளவீட்டுக் கருவிகள் தயாரிப்பு நிறுவனத்தை பல்லாண்டு காலம் தலைமை தாங்கி மாணி நடத்தினார். இந்திய தேசிய அறிவியல் அகாதெமி, அமெரிக்க வளிமண்டலவியல் சங்கம், சர்வதேச சூரியஒளி ஆற்றல் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினராக அவர் இருந்தார்.
மாணியின் விஞ்ஞான சாதனைகளுக்காக, அவருக்கு 1987-இல் கே.ஆர்.ராமநாதன் விருது வழங்கப்பட்டது.
1994-இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அன்னா மாணி, திருவனந்தபுரத்தில் 2001, ஆக. 16-இல் மறைந்தார்.
-வ.மு.முரளி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.