சுற்றிப் பார்...  பிறக்கும் சுறுசுறுப்பு! 

"ஏன்டா  அரை மணி நேரம் மட்டும் படிச்சிட்டு புத்தகத்தை மூடி வச்சுட்ட?''"போர் அடிக்குது அம்மா... அப்பறம் படிக்கிறேன்''
சுற்றிப் பார்...  பிறக்கும் சுறுசுறுப்பு! 
Published on
Updated on
2 min read

சுய முன்னேற்றம் - 55
"ஏன்டா  அரை மணி நேரம் மட்டும் படிச்சிட்டு புத்தகத்தை மூடி வச்சுட்ட?''
"போர் அடிக்குது அம்மா... அப்பறம் படிக்கிறேன்''
"ஏன்டா ஆதி...  உன் அலமாரிய க்ளீன் பண்ணச் சொன்னேனே.. இன்னுமா பண்ணல?'' 
"போர் அடிக்குது அம்மா. அப்புறமா பண்ணுறேன்''
ஆம். பலர் சோம்பல் என்பதை போர் (Bore) அடிக்கிறது என்று கொஞ்சம் நாகரிகமாகச்  சொல்லிக் கொள்கிறார்கள். மாணவர்களிடையே மிகவும் செல்வாக்கு மிகுந்த சொல். இது ஒரு தமிழ்ச் சொல்லோ என்கிற மயக்கம் கூடச் சிலருக்கு உள்ளது. திரும்பத் திரும்ப ஒன்றையே செய்வதாலோ அல்லது கேட்பதாலோ வருகின்ற மனச் சோர்வையும் களைப்பையும் குறிக்கின்ற ஆங்கிலச் சொல் இது. ஆனால் சொல்லாராய்ச்சி செய்வதைவிட இந்தச் சோர்வு மனப்பான்மையை,  முன்னேற விரும்பும் மாணவர்களும், இளைஞர்களும் முற்றும் புறக்கணிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
சுற்றிலும் சுறுசுறுப்பு!
நாள் முழுதும் ஏன் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, மனிதரைத் தவிர இயற்கையில் தென்படும் பிற உயிரினங்களைச் சற்றே நோக்குங்கள், புரிந்து போய்விடும். பூச்சிகள், பறவைகள், அணில் போன்ற சிறு விலங்குகள் இவற்றின் செயல்பாடுகளைச் சிறிது நேரம் உன்னிப்பாகக் கவனியுங்கள். அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாலே நமக்கும் உடலில் ஒரு சுறுசுறுப்பு உண்டாகும். வரிசையாகச் செல்லும் எறும்புகளின் ஊர்வலத்தைப் பார்த்திருக்கிறீர்களா? விரைவாகச் செல்லும் அவசரத்திலும் எதிர்வரும் எறும்புகள் ஒன்றோடொன்று ஏதோ உரையாடுவது போலவும், நின்று நலம் விசாரித்துச் செல்வது போலவும் தெரியும். பிரொமோன்ஸ்(Pheromones) என்ற வேதிப் பொருள் மூலம் அவை தங்களுக்குள் உணவு உறைவிடம் பற்றிய தகவல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றன.
பூக்களின் மலர்ந்த இதழ்களின் அருகே வந்து தங்கள் அலகுகளால் தேன் உறிஞ்சும் தேன் சிட்டுப் பறவைகளைப் பார்த்ததுண்டா?  அவற்றின் சிறகுகள் விரிந்து அசையும் வேகத்தைப் பார்த்தால், எங்கிருந்து இத்தனை சக்தியும் உற்சாகமும் வந்தன என்று கேட்கத் தோன்றும். சிறிய பஞ்சுப் பொதி போன்ற உடலையும், கம்பீரமாக நிமிர்ந்து அசையும் வாலையும் தூக்கிக் கொண்டு மரக்கிளைகளில் ஓயாமல் மேலும் கீழும் ஓடும் அணிலைப் பார்த்ததுண்டா?  ஒரு சிறு பழத்தின் கொட்டை கிடைத்தாலும், முன்னிரு கால்களால் அவற்றைப் பிடித்துக் கொண்டு, கூரிய பற்களால் விறுவிறுவென்று புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது போல நம்மையே பார்த்துக் கொண்டு உறவாடும் அணில்களின் உற்சாகம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். 
வறுமையில் இருக்கும் போதும் மகாகவி பாரதியார், நெல்மணிகளைக் குருவிகளுக்குத் தீனியாகப் போட்டு, "காக்கை குருவி எங்கள் சாதி''  என்று பாடி மனத்தில் உற்சாகம் கொண்டார். டி.ஹெச்.லாரன்ஸ் (D.H.Lawrence) என்ற ஆங்கிலக் கவிஞன் தன் வீட்டுக் குளியலறைக்குள் தண்ணீர்க் குழாய் வழியே தலை காட்டிய பாம்போடு உரையாடுவதாக எழுதி மனச்சோர்வை நீக்கிக் கொண்டான். மாயகோவ்ஸ்கி (Mayakovsky) என்ற உருசிய நாட்டுக் கவிஞன், ஓயாமல் உழைக்கும் சூரியனை ஒரு மாலை நேரம் தன்னோடு அமர்ந்து தேநீர் அருந்திச் செல்லுமாறு வேண்டினான். கவிஞர்களின் கற்பனை அதீதமானது என்றாலும், ஒருமுறை திரும்பியோ அல்லது அண்ணாந்தோ இயற்கையைப் பார்த்தால் உள்ளக் களைப்பு மறைந்து உற்சாகம் பிறக்கும் என்ற உண்மையை அன்றோ இந்நிகழ்வுகளும் பதிவுகளும் நமக்கு உணர்த்துகின்றன ?
நம்மைச் சுற்றிலும் சுறுசுறுப்பாக உயிர்கள் இயங்குவதைக் கவனித்தால் நமக்கும் சுறுசுறுப்பு பிறக்கும். தன்னை நினைத்துத் தானே ஓர் எதிர்வினைச் சிந்தனையில்(Negative thoughts) அமர்ந்து கொண்டிருக்கும் போதுதான் சோர்வும் அமைதியின்மையும் பிறக்கின்றன.
உடலும் உள்ளமும்!
சுறுசுறுப்பு என்பது உடல், மனம் ஆகிய இரண்டையும் சார்ந்தது. "வாரத்தில் மூன்று நாட்கள் சுறுசுறுப்பாக இருப்பேன்;  பிற நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக உற்சாகம் குறைந்து சோர்ந்துவிடுவேன்' என்றிருப்பது எந்த முன்னேற்றத்தையும் வாழ்க்கையில் தராது. எல்லா நாட்களும் எல்லா நேரமும் உடலையும் உள்ளத்தையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
1. காலையில் எழுந்தவுடன் செய்தித்தாள் அல்லது பிற ஊடகங்கள் மூலம் அன்றைய நாடு மற்றும் உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். எத்தனை பரபரப்பான உலகில் இருக்கிறோம் என்று அறிய இது உதவும்.
2. பள்ளியிலோ கல்லூரியிலோ சேவைக்கான பணிகளில் ஆர்வலருக்கான (Volunteer) அழைப்பு வந்தால் முதலில் பெயர் கொடுத்துவிடுங்கள்.
3. நண்பர்கள் வீட்டு மங்கல நிகழ்வுகள், பண்டிகைகள், ஆகியவற்றுக்கு அழைக்கப்பட்டால் தவறாது கலந்து கொள்ளுங்கள். பிறருடைய மொழி,கலாசாரம், பழக்கவழக்கங்களை இயல்பாக அறிந்து கொள்ள இவை உதவும்.
4. ஆண்டுக்கு ஒருமுறையேனும் தொலைதூரப் பயணம் மேற்கொண்டு ஏதேனும் புதிய நாட்டையோ ஊர்களையோ பார்த்து வாருங்கள்.
5. நீங்கள் வசிக்கும் தெருவிலுள்ள அனைவரையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் நட்போடு பழகுங்கள். உங்கள் பகுதியில் தூய்மை மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவி தேவையென்றால் முதல் நபராக நில்லுங்கள்.
6. பேருந்திலோ, இரயிலிலோ புதியவர்களோடு பேசத் தயக்கம் காட்டாதீர்கள்.
7. புதிய மொழி ஏதேனும் கற்றுக் கொள்ளுங்கள்.
8. இயன்றால் ஒரு செல்லப் பிராணியை (Pet) வளர்த்துப் பழகுங்கள்.
9. உடல் உழைப்பிலும், விளையாட்டுகளிலும் இயன்ற அளவு ஈடுபடுங்கள்.
பள்ளி, கல்லூரிப் பாடங்கள், பாட திட்டம் சாராத பிற (Extra-curricular) பங்கேற்புகள் ஆகியவை தவிர, மேலே குறிப்பிட்டுள்ள செயல்பாடுகளிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள் என்றால், காலை முதல் மாலை வரை சுறுசுறுப்பு  குறையாமல் உங்களால் இயங்க முடியும்.
நிமிர்ந்து நின்று உங்களைச் சுற்றிப் பாருங்கள். உங்களைப் போன்ற மனிதர்களும், நம் வாழ்விடமான இயற்கையும் அதில் வாழும் பிற உயிர்களும்தானே தெரிகின்றன. இவற்றோடு நேச உணர்ச்சியோடு பழகத் தொடங்குவதுதான் எல்லா நேரங்களிலும் உங்களைச் சுறுசுறுப்பாக வைக்கும் அருமருந்து.
ஆம். சுறுசுறுப்பாக வாழக் கற்றுக் கொண்டால், போர் அடிக்காது  பொழுதும் வீணாகாது. முன்னேற்றப் பாதையில் எந்த முட்டுக்கட்டையும் இருக்காது.
- தொடரும்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com