அறிவிப்புகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

"ஆதி  நாளைக்கு ஸ்கூல்ல ஆண்டு விழான்னு சொன்னே.. எப்போ கௌம்பணும்? என்ன ப்ரோக்ராம்?  நாங்கள்ளாம் எப்போ வரணும்?''
அறிவிப்புகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

சுய முன்னேற்றம் - 48

முனைவர்  வ.வே.சு.

கல்வியாளர்

""ஆதி  நாளைக்கு ஸ்கூல்ல ஆண்டு விழான்னு சொன்னே.. எப்போ கௌம்பணும்? என்ன ப்ரோக்ராம்?  நாங்கள்ளாம் எப்போ வரணும்?''

""எனக்குத் தெரியாது... சசி வரட்டும்... அவன் சொல்லுவான். அவன்தான் ஸ்கூல் போர்ட்ல எழுதிப் போடறது எல்லாத்தையும் ஒண்ணு விடாம படிப்பான்.''

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கொடுக்கப்படும் அறிவிப்புகளைப் படித்துப் புரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என்பதைப் பல மாணவர்கள் உணர்வதில்லை. உணர்ந்தாலும் பல நேரங்களில் அலட்சியம் செய்கின்றனர்.

""சார்... நாங்க மூணு பேரும் எக்ஸôமுக்குப் பணம் கட்ட வந்திருக்கோம்.  தயவு செய்து வாங்கிக்கங்க. நேத்திக்கே லாஸ்ட் டேட்  முடிஞ்சிடுச்சுன்னு தெரியாது?''

""போங்கப்பா...  போன வாரமே எல்லா கிளாஸýக்கும் சர்குலர் அனுப்பிச்சோம். நோட்டீஸ் போர்டுலயும் போட்டிருந்தோமே... பாக்கல''

இது பல கல்விச்சாலைகளில் வழக்கமாக நிகழ்வது. தேர்வுக்குக் கட்டப் பணம் இல்லாமலில்லை. கட்ட நேரமும் இருந்திருக்கும். ஆனாலும் கட்டவில்லை. அபராதத்துடன் பணம் கட்டுவார்களே தவிர, அறிவிப்பைக் கவனிப்பதில்லை. காரணம் அலட்சியம். இதே பழக்கம் வளர்ந்த பிறகும் தொடருமாயின், தொலைபேசி, மின் கட்டணங்கள், வருமான வரி, சொத்து வரி போன்ற பலவற்றையும் அபராதங்களோடு கட்ட வேண்டிய சூழலை நீங்களே உருவாக்கிக் கொண்டுவிடுவீர்கள். அறிவிப்புகளைக் கேட்பது, படிப்பது, புரிந்து கொள்வது, அவற்றில் குறிப்பிட்டுள்ளபடி செயல்படுவது ஆகியவையும் கல்வி கற்பதன் ஓர் இன்றியமையாத அங்கம் என்பதை இளைஞர்கள் உணரவேண்டும்.

அறிவிப்புப் பலகைகள்

அலங்காரப் பொருட்களல்ல

கல்விச்சாலைகள், நூலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்கள், போக்குவரத்து நிலையங்கள், உணவுவிடுதிகள், கேளிக்கை அரங்கங்கள், பல்பொருள்அங்காடிகள், பூங்காக்கள் போன்ற பல பொதுவிடங்களில் அறிவிப்புகள் ஒலிபெருக்கி மூலமாகவும், எழுத்துகள் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பயனுக்காகவும், பாதுகாப்புக்காகவும்தானே இவை அளிக்கப்படுகின்றன?  பொதுமக்களும், குறிப்பாக படிக்கும் இளைஞர்களும் இவற்றைப் புறக்கணித்தல் சமுதாய வளர்ச்சிக்குத் தடையல்லவா? 

வகுப்பறைக்குச் செல்லும் முன்போ அல்லது வகுப்பு முடிவடைந்த பிறகோ, பள்ளியில் உள்ள அறிவிப்புப் பலகைகளையெல்லாம் (Notice Boards) ஒருமுறை பார்த்து, அவற்றில் உள்ள செய்திகளைப் புரிந்துகொண்டு செயல்படுவதை பழக்கப்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் நிச்சயம் முன்னேறம் காண்பார்கள்.

 ""நீங்கள் அமர்ந்திருந்த வரவேற்பறையில் எத்தனை அறிவிப்புப் பலகைகள் இருந்தன?''

இதற்குச் சரியான பதில் சொன்னவர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். காரணம், மக்கள் தொடர்பு அதிகாரி பதவிக்கான நேர்காணல் அது. ஆம். மக்கள் தொடர்பு என்பதே அறிவிப்புகள் மூலமாகத்தானே நடைபெற வேண்டும்.

உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், நகர, மாநில,தேசிய அளவில் போட்டிகளில் பங்கு பெற்று, தகுதி அடிப்படையில் முன்னேறவும், செய்தித் தாள்களில் பல அறிவிப்புகள் மாணவர்களுக்காக வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் பள்ளிகள் அறிவிக்கும். இன்னும் சிலவற்றை நீங்களே தேடிச்  செல்ல வேண்டும். அகில இந்திய அளவில் மாணவர்களுக்கான போட்டிகள் கலை, இலக்கிய, அறிவியல் துறைகளில் ஓராண்டில் என்னென்ன எங்கெல்லாம் நிகழ்கின்றன என்பதை இணையதள அறிவிப்புகள் (websites for students scholarships, awards and competitions in India) மூலம் நீங்கள் பெற முடியும். முன்னேற்றத்துக்கான பாதைகளும், படிக்கட்டுகளும் எங்குள்ளன என்பதற்கான வழிகாட்டிகள்தான் இத்தகைய அறிவிப்புகள்.

அறிவிப்புகள் என்னும் வழித்துணை

 கல்லூரியில் ஆவலோடு எதிர்பார்ப்பது காம்பஸ் இண்டர்வியூ. வேலை வாய்ப்புக்கான உத்திரவாதத்தை, கல்லூரி எல்லைகளைத் தாண்டும் முன்னேயே கிடைக்கச் செய்யும் இனிய வாய்ப்பு. இதற்கான அறிவிப்புகளைத் தொடர்ந்து நிறைவு ஆண்டு பயிலும் மாணவர்கள் கவனமுடன்  பார்ப்பதிலே எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஆனால் இளைய மாணவர்களும், இந்த அறிவிப்புகளைப் பற்றி அக்கறை காட்ட வேண்டும். சம்பந்தம் இல்லாதது போல இருக்கக்கூடாது. இப்போதே பார்த்து வைத்துக் கொண்டால் நிறைவாண்டு பயிலுகையில், இன்னும் கூடுதலான திறமைகளோடு இத்தகைய நேர்காணல்களைச் சந்திக்க இயலும்.

 தகுதியுள்ள மாணவர்களுக்காகப் பல நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் கல்விக்கான உதவித் தொகை,பாட நூல்கள், சீருடைகள் போன்றவற்றை அளித்து வருகின்றனர். இதற்கான அறிவிப்புகளிலும் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு இத்தகைய உதவிகள் தேவைப்படாவிட்டாலும், உங்கள் நண்பர்களில் யாருக்கேனும் தேவைப்பட்டால் நீங்கள் உதவலாம்.

 பல கல்லூரிகளில் இரத்ததானம் பற்றிய அறிவிப்பு வந்தால், அதற்கென இயங்கும் வாலண்டியர் குழுக்கள் எந்த குரூப் இரத்தம் தேவையோ, அதற்கு உடனடியாக உதவி செய்கிறார்கள். இவை போன்ற அறிவிப்புகளின் முக்கியத்துவத்தைக் கல்லூரி மாணவர்கள் உணர்ந்துள்ளனர் என்பதை மனமுவந்து பாராட்ட வேண்டும். இவற்றை நெறிப்படுத்தும் ஆசிரியர்கள்,மருத்துவர்கள் அனைவரையும் நன்றியோடு நினைக்க வேண்டும்.  உலக அளவிலே பூகம்பம், எரிமலை, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களைப் பற்றிய அறிவிப்புகளுக்கு முதலிடம் கொடுக்கின்றனர். 2011-இல் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20,000 பேர் அழிந்தனர். ஆனால் 30 மே மாதம் 2015- இல் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஓரிரு சம்பவங்களைத் தவிர பேரிழப்பு ஏதுமில்லை. அடிப்படையிலே இந்த நிலநடுக்கம் மிக ஆழத்திலே ஏற்பட்டதால் சேதங்கள் குறைவு என்று அறிவியல் சொன்னாலும், நிலநடுக்கத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவிப்புகளை ஜப்பானிய மக்கள் புறக்கணிக்காமல் கடைப்பிடித்ததுதான் காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 ஒரு நாளைக்கு எத்தனை அறிவிப்புப் பலகைகளைப் படிக்காமலும், படித்தாலும் அதன்படி நடக்காமலும் நம்மில் பலர் செல்கின்றனர் என்பதைக் கவனமுடன் பாருங்கள். நகரத் தெருக்களில், ஒருவழிப் பாதை. "வாகனங்களை நிறுத்தாதீர்கள்', "இங்கே துப்பாதீர்கள்', "புகை பிடிக்காதீர்கள்', "குப்பைகளைத் தொட்டியில் போடுங்கள்' என்பது போன்ற பல அறிவிப்புப் பலகைகளைப் படித்து எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள்?  நெடுஞ்சாலைகளில் "வளைவுகளில் முந்தாதீர்கள்',  "இது விபத்துப் பகுதி',  "கவனமுடன் செல்லுங்கள்' என்பன போன்ற  அறிவிப்புகளைக் கவனிக்காமல் சென்றவர்கள், இழப்புகளைச் சந்தித்துள்ளார்கள் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

 "வாகனங்களை இங்கே நிறுத்தாதீர்கள்' என்று எழுதியுள்ள பலகை கீழே வீழ்ந்திருக்க, அதன் மேலே ஒரு கார் நிற்பது போன்ற படம், இந்த கேலிச் சித்திரத்தையே ஒருவர் நோ பார்க்கிங் பகுதியில் மாட்டி வைத்திருந்தார்.

வாழ்க்கைப் பயணத்தின் நீண்ட பாதையில், பலவிதமான அறிவிப்புகளைச் சந்திக்க நேரிடும். அவற்றால் பயனுண்டா? இல்லையா? என்பதைக் கூடப் படித்துப் பார்த்தால்தானே புரிந்து கொள்ள இயலும்?   எனவே அறிவிப்புகள் அவசியமானவை. அலட்சியம் செய்ய வேண்டாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com