

ஜப்பானைச் சேர்ந்த ஒலிம்பஸ் (Olympus) எனும் புகைப்படக்கருவி தயாரிப்பு நிறுவனம் வாழ்க்கையின் சக்தி (Power of Life), மனதிற்கான இணைப்பு (Connections to Cherish), ஊக்கமூட்டும் இடங்கள் (Places that Inspire), அடிக்கடித் தவறவிடும் தொலைநோக்குகள் (Perspectives Often Missed) எனும் நான்கு வகையான பிரிவுகளில் ஒலிம்பஸ் உலகத் திறந்தநிலை புகைப்படப் போட்டி (Perspectives Often Missed) ஒன்றினை அறிவித்திருக்கிறது.
நான்கு பிரிவுகள்
இப்போட்டிக்கு வாழ்க்கையின் சக்தி எனும் பிரிவுக்கு மிகவும் அழகான, துடிப்பான, நலமுடைய மற்றும் வாழ்க்கைக்கு முழு ஆற்றலை வழங்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த நிகழ்வைத் தெரிவிக்கக் கூடிய புகைப்படமாக இருக்க வேண்டும். மனதிற்கான இணைப்பு எனும் பிரிவுக்கு உறவு மற்றும் நட்புகளுக்கிடையிலான அன்பு மற்றும் அமைதியான மனநிலையை இதயப்பூர்வமாக வெளிப்படுத்தக் கூடிய புகைப்படமாகவும், ஊக்கமூட்டும் இடங்கள் எனும் பிரிவுக்கு கண்கவர் இயற்கைக் காட்சிகளை வியக்க வைக்கக் கூடிய புகைப்படமாகவும், அடிக்கடித் தவறவிடும் தொலைநோக்குகள் எனும் பிரிவுக்கு, இதற்கு முன்பு இப்படி ஒரு காட்சியைக் கண்டதில்லை என்று அனைவரும் வியக்கக் கூடிய, தொலைநோக்குப் பார்வையுடன் படைப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய புகைப்படமாகவும் எடுத்து அனுப்ப வேண்டும்.
விதிமுறைகள்
1. இப்போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் இத்தளத்தின் நுழைவு (Enter) பகுதியில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டு என் பக்கம் (My Page) ஒன்றினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
2. அதன் பின்னர், போட்டிக்கான புகைப்படங்களை இணையதளத்தில் பயனர் பெயருடன் (User Name), போட்டிக்கான பிரிவினையும் பதிவு செய்து கொண்டு இணைய வழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
3. போட்டியில் பங்கேற்பவர்கள் போட்டிப் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் ஐந்து புகைப்படங்கள் வரை சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு புகைப்படமும் 15 எம்.பி அளவுக்கு அதிகமில்லாமல் JPEG வடிவில் இருக்க வேண்டும்.
4. போட்டிக்கு எந்த ஒரு புகைப்படக் கருவியிலும் புகைப்படம் எடுத்துச் சமர்ப்பிக்கலாம்.
5. ஒரு புகைப்படத்தை ஒரு பிரிவில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
6. போட்டியில் கலந்து கொள்வதற்கு வயது வரம்பு ஏதுமில்லை. 18 வயதுக்குக் குறைவானவர்கள் பெற்றோர் அல்லது காப்பாளர் அனுமதியுடன் பங்கேற்க வேண்டும்.
7. கடந்த ஆண்டு நடத்தப்பெற்ற போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட படங்களை இந்த ஆண்டுக்கான போட்டியிலும் சமர்ப்பிக்க முடியும்.
8. போட்டிக்கு புகைப்படங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 10-01-2017.
9. போட்டிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட படங்களை அவர்களுக்கான என் பக்கம் (My Page) வழியாகச் சரிபார்த்துக் கொள்ளமுடியும். இந்தப் பக்கத்தின் வழியாகப் போட்டிக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட படங்களைக் கடைசி நாளுக்கு முன்பாக மாற்றிக் கொள்ளவோ, நீக்கிக் கொள்ளவோ முடியும்.
முடிவுகள்: போட்டிக்காகப் பெறப்பட்ட அனைத்து புகைப்படங்களும் நடுவர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
பரிசுகள்: இப்போட்டிக்கு முதன்மைப் பரிசாக ஒலிம்பஸ் பிளாக்சிப் புகைப்படக்கருவி (Olympus Flagship Camera) ஒன்று மற்றும் 1,000,000 ஜப்பானிய யென் பரிசுத்தொகையும் அளிக்கப்படும். இதுபோல், ஒவ்வொரு பிரிவுக்கும் முதல் பரிசாக Olympus OM-D E-M5 Mark II M.Zuiko Digital ED 12-40mm F2.8 PRO எனும் புகைப்படக்கருவியும், இரண்டாம் பரிசாக Olympus OM-D E-M10 Mark II M.Zuiko Digital ED 14-42mm F3.5-5.6 EZ எனும் புகைப்படக் கருவியும், மூன்றாம் பரிசாக Olympus PEN E-PL8 M.Zuiko Digital ED 14-42mm F3.5-5.6 EZ எனும் புகைப்படக் கருவியும் பரிசுகளாக வழங்கப்படும். இவை தவிர, ஒவ்வொரு பிரிவிலும் 10 ஆறுதல் பரிசுகளும் அளிக்கப்படும்.
கூடுதல் தகவல்கள்: இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்களும், போட்டி குறித்த கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள விரும்புபவர்களும் https:gopc.olympus-global.com2016langen_GB#theme எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.
- மு. சுப்பிரமணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.