அணுசக்தி துறை வல்லுநர்!

நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் அணுசக்தித்துறை பெரும்பங்கு வகிக்கிறது.
அணுசக்தி துறை வல்லுநர்!

நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் அணுசக்தித்துறை பெரும்பங்கு வகிக்கிறது. இத்துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது மட்டுமல்ல, வல்லரசு நாடுகளுக்கு இணையாக அணு ஆயுத பலமும் பெற்றுள்ளது. 

இத்துறையை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர், இந்திய அணுக்கருவியலின் தந்தையான ஹோமி ஜஹாங்கீர் பாபா. ராஜா ராமண்ணா, ஆர்.சிதம்பரம், அனில் ககோட்கர் உள்ளிட்ட பல விஞ்ஞானிகளின் இடையறாத உழைப்பாலும், தெளிவான திட்டமிடலாலும் அணுசக்தித் துறையில் இந்தியா சிகரத்தை எட்டியுள்ளது. இந்தப் பட்டியலில் அணுசக்தி ஆணையத்தின் தலைவராக (2009 -2012) இருந்த உலோகவியல் பொறியாளர் ஸ்ரீகுமார் பானர்ஜிக்கும் பெரும்பங்கு உண்டு.

உலோகங்களின் இயற்பியல், வேதியல் பண்புகளை ஆராய்வதன் அடிப்படையில் உலோகவியல் இரு பிரிவுகளாக உள்ளது. அதில்,  அணுசக்தித் துறைக்கு அடிப்படையான உலோக இயற்பியல் (Physical Mettalurgy) பிரிவில் வல்லுநராக பானர்ஜி விளங்குகிறார்.  

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 1968-இல் இளநிலை அலுவலராக இணைந்த ஸ்ரீகுமார் பானர்ஜி, சுமார் 44 ஆண்டுகள் அணுசக்தித் துறையில் தொடர் ஆராய்ச்சி, அடிப்படைப் பணிகளில் ஈடுபட்டவர். 2012-இல் அணுசக்தி ஆணையத்தின் தலைவராக அவர் ஓய்வு பெற்றபோது, இந்தியா இத்துறையில் பல சாதனைகளைப் படைத்திருந்தது.  

வங்க மாநிலத்தில், 1944-இல் ஸ்ரீகுமார் பானர்ஜி பிறந்தார். கரக்பூர் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் உலோகவியலில் பி.டெக். பட்டம் (1967) பெற்ற அவர், டிராம்பேயிலுள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (BARC) பயிற்சிக் கல்லூரியின் 11-வது பிரிவு அலுவலராகப் பயிற்சி பெற்றார். அதையடுத்து, அங்கேயே உலோகவியல் பிரிவில் விஞ்ஞானியாக இணைந்தார்.

அணு உலைகளில் அதீத வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் கலப்பு உலோகத்தாலான (Alloy) பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு நாம் வெளிநாடுகளைச் சார்ந்திருந்ததால், அணுசக்தி துறையில் முன்னேற இயலாதிருந்தது. இந்நிலையில் அணு உலைகளுக்கான கலப்பு உலோகத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஸ்ரீகுமார் பானர்ஜி ஈடுபட்டார். 

ஜிர்கோனியம் (Zirconium- Zr), டைட்டானியம் (Titanium- Ti)  ஆகிய உலோகங்களுடன் பிற உலோகங்களைக் கலந்து உருவாக்கப்பட்ட கலப்பு உலோகங்களின் பண்புகளை அவர் ஆராய்ந்தார். வெப்ப இயக்கவியல் செயல்பாடுகளின்போது அந்த உலோகக் கலப்புப் பொருள்களில் ஏற்படும் நிலைமாற்றத்தைப் பதிவு செய்தார்.

இந்த ஆராய்ச்சியின் பயனாக அவர் எழுதிய நூல், "நிலை மாற்றம்: டைட்டானியம், ஜிர்கோனியம் கலப்புலோகங்களின் மாதிரி' என்பதாகும். இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் கரக்பூர் ஐ.ஐ.டி. அவருக்கு பிஎச்.டி. பட்டம் (1974) வழங்கியது.

கதிரியக்கத்தின்போது அணு உலைப் பொருள்களில் நிலைமாற்றத்தைப் பகுப்பாய்வு செய்ய ஸ்ரீகுமாரின் ஆய்வு அடிப்படையாக உள்ளது. தவிர, கணநீர் அழுத்த அணு உலைகளுக்கான அழுத்தக்குழாய் (PHWRs) தயாரிப்பிலும், அணுக்கரு உலைகளுக்குத் தேவையான கலப்பு உலோக பாகங்களைத் தயாரிப்
பதிலும் அவரது ஆய்வு உறுதுணையாக உள்ளது. 

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல நிலைகளில் பணியாற்றிய அவர், அதன் இயக்குநராக 2004, ஏப்ரலில் பொறுப்பேற்று, 2010, மே வரை அப்பொறுப்பில் இருந்தார். அப்போது, விவசாயம், உணவு பதப்படுத்துதல், சுகாதாரம், தொழில்துறையில் ஐசோடோப்பு தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் குறித்த ஆய்வுகளுக்கு அவர் வழிவகுத்தார். அணுக்கரு எரிபொருள் சுழற்சி, மேம்பட்ட அணு உலைகள், கதிரியக்கப் பயன்பாடுகள் ஆகியவை தொடர்பான ஆராய்ச்சிகளை அவர் முடுக்கிவிட்டார்.

1974, 1998 ஆண்டுகளில் பொக்ரானில் இந்தியா அணுவெடிப்புச் சோதனைகளை நடத்தியபோது, இரு நிகழ்வுகளிலும் ஸ்ரீகுமார் பானர்ஜி பிரதானப் பங்கு வகித்தார்.

இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், அணுசக்தித்துறை செயலாளராகவும் 2009 முதல் 2012 வரை ஸ்ரீகுமார் பொறுப்பு வகித்தார். அந்தக் காலகட்டத்தில்தான் கூடங்குளம் அணு உலைப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

அணுசக்தி துறையில் 44 ஆண்டுகால தொடர் பணிகளுக்குப் பிறகும், கல்வித் துறையில் ஸ்ரீகுமார் பானர்ஜி தீவிரமாக இயங்கி வருகிறார். மும்பை ஐ.ஐ.டி, பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி, தில்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும், பிரிட்டனின் சூசெக்ஸ் பல்கலைக்கழகம், ஜெர்மனியின் மேக்ஸ் -பிளாங்க் இன்ஸ்டிடியூட், அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி பல்கலைக்கழகம், ஓஹியோ பல்கலைக்கழகங்களிலும் வருகைப் பேராசிரியராக ஸ்ரீகுமார் பணிபுரிகிறார். பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஹோமி பாபா இருக்கை பேராசிரியராகவும் அவர் செயல்படுகிறார்.

350-க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ள பானர்ஜி, பல முன்னணி கல்வி நிறுவனங்களின் கௌரவ முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். இந்தியாவின் மூன்று அறிவியல் அகாதமிகளிலும், மூன்றாம் உலக நாடுகளுக்கான அறிவியல் அகாதமியிலும் அவர் உறுப்பினராக உள்ளார். 

சிறந்த இளம் விஞ்ஞானி விருது (1976), தேசிய உலோகவியலாளர் தின விருது (1981), சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1989), இந்திய பொருள் ஆராய்ச்சி சங்கத்தின் பதக்கம் (1990), ஜி.டி.பிர்லா பதக்கம் (1997), இந்திய தேசிய அறிவியல் அகாதமியின் பரிசு (2001), இந்திய அணுவியல் சங்க விருது (2003), ஜெர்மனியின் ஹம்போல்டு ஆராய்ச்சி  விருது (2004), இந்திய அரசின் பத்மஸ்ரீ (2005), அமெரிக்க அணுவியல் சங்கப் பாராட்டிதழ் (2012), வில்லியம் ஜே க்ரால் ஜிர்கோனியம் பதக்கம் (2013) பிரிட்டனின் ராபர்ட் சான் விருது (2016) உள்ளிட்ட பல கெளரவங்களை ஸ்ரீகுமார் பானர்ஜி பெற்றுள்ளார்.

2012 முதல் காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், 2004 முதல் அணு மின்சக்தி நிறுவனத்தின் வாரிய உறுப்பினராகவும், 2014 முதல் கரக்பூர் ஐ.ஐ.டி. கட்டுப்பாட்டுக் குழு தலைவராகவும் ஸ்ரீகுமார் பானர்ஜி பொறுப்பு வகிக்கிறார். 
-வ.மு.முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com